Tuesday, January 31, 2006

7. கந்தர் அநுபூதி - கடவுள் வாழ்த்து (காப்பு)

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்!

//நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக்கு//
சின்னக் குழந்தைகளின் மனசை நாம் லேசானது என்கிறோம். ஆனால் அதுவே, விவரம் புரிந்தால்.. இதிலேயே எனக்கு ஒப்புதல் கிடையாது. விவரம் புரிகிறது என்றால் பரம்பொருளைக் குறித்த உண்மையைப் பற்றி அறியும் போதே விவரம் புரிவது என்றிருக்க வேண்டும். நம்மைப் போன்ற சாதாரணர்களுக்கு உலகம் தெரிவது என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். எது எப்படியாயினும்.. நமக்கும் குழந்தைகளுக்கும் என்ன வித்தியாசம்? ஆசாபாசங்கள், கோபம், குரோதம், பொறாமை, பேராசை போன்றவையே. அவர்களுக்கும் அவை உண்டு. ஆனால் அவை நம்முள்ளே சில வருடங்களுக்கு நிலைத்து நிற்குமென்றால், குழந்தைகளுக்கு சில விநாடிகளே இருந்து மறைந்துவிடும். எதற்கு குழந்தைகள் பற்றியென்றால்...

அருணகிரி சுவாமிகள் சொல்வது நாம் இவ்வுலக சழக்கைகளில் சுழன்று மனம் திரிந்து, ஆண்டவன் பிறப்பில் நமக்கு அளித்த லேசான மனத்தை இம்மாதிரி காமம், குரோதம் போன்றவற்றைக் கொண்டு பெரும்பாறாங்கல்லாய் வளர்த்துவைத்திருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டவே.

ஆனால் இப்படி நாமே வளர்த்துவிட்ட / வளர்ந்துவிட்ட தீய மனதிற்கு உய்ய வழியுண்டா?

உண்டே. அதை உடனே அடுத்த வரியிலேயே சொல்லிவிடுகிறார். அருணகிரியாரே அவரின் வாழ்க்கையின் பெரும்பான்மையை தீயவற்றில் கழித்தவர். விலைமாதுக்களிடமும் மதுவிலுமே திளைத்திருந்தார். முருகனின் அருளென்ற ஒன்றில்லாமல் போயிருந்தால், இரத்தக்கண்ணீர் எம். ஆர். இராதாவின் கதாப்பாத்திரத்தை அருணகிரி வாழ்ந்தே காட்டினார் என்று சொல்லியிருப்போம். எப்படி ஒரு திருடனின் வாழ்க்கையை வால்மீகி வாழ்ந்து பின் இறையருளால் இராமாயணத்தைப் படைத்தாரோ அதைப் போலவே, அருணகிரியின் வாழ்க்கையில் முருகனின் இச்சைப்படி; தமிழ் நாட்டில் முருகனென்றால் அவனுக்கு அடுத்து அருணகிரியே நினைவுக்கு வரும்வகையில், அவருக்கு தன்னுடைய தன்னிகரில்லா கருணை மூலம், இரண்டாம் இடத்தை அளித்துள்ளான் கந்தன். நாமெல்லாம் அருணகிரி தன் முன்வாழ்க்கையில் இருந்த அளவு மோசமானவர்களாய் இன்னும் ஆகவில்லை (அவரைப் போல ஞானமும் பெறவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்!). ஆனாலும் அருணகிரியாரைப் போன்ற ஒருவருக்கே கந்தன் தன் அருளால் முக்தி அளிக்க வல்லவன் என்றால் அவன் கருணை எத்தகையான தொன்றாக இருக்க வேண்டும்? "Like Taking Candy From a Baby" என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. ஒரு குழந்தையிடமிருந்து மிக எளிதாக ஒரு மிட்டாயை வயதில் முதிர்ந்தவர்களான நாம் அபகரித்து விட முடியுமல்லவா? அதே போல தான் குமரனும். ஆனால், இவனிடத்தில் கயமைத்தனம், அறிவுஜீவித்தனங்கள் எல்லாம் செல்லுபடியாகாது. அன்பென்ற ஒன்று மட்டுமே போதும். அதை முழுமையாய் அவனிடத்தில் வைத்தால் அவன் குழந்தையேதான். நம்மை நம்பி அருளிக் காத்தருள்வதற்கு.

'கந்தா, குமரா, முருகா' என்று சொல்லி முடிக்குமுன் வந்து அருள் செய்யும் ஆறுமுகத்தானுக்கு...

//கியல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே//
அவனுடைய பண்புகளை, கருணையை இந்த அழகிய தமிழ்சொற்களை கொண்டு நான் தொடுத்த இந்த எளிய பாக்களாலான மாலையின் புகழ் மேலும் மேலும் சிறந்திடவே...

//பஞ்சக் கரவானை பதம் பணிவாம்//
உங்களின் தம்பியை/தங்கையைப் பற்றி மூன்றாவது மனிதர் ஒருவர் உங்களிடம் வந்து புகழ்ந்தால் உங்களுக்கு எவ்வளவு பெருமிதமாய் இருக்கும்? உங்கள் மனம் எவ்வளவு குளிர்ச்சி பெறும்? முருகா, கந்தா என்ற சொற்களே தேன் போல இனிக்கையில், அவனைக் குறித்துப் உண்மையான பக்தியில் பாடப்படும் பாடல்கள் கசக்கத்தான் செய்யுமோ? இயற்கையிலேயே அமுதைப் போன்ற இனிமையை உடையவையாயினும் தன் அன்புத்தம்பியான குமரனைக் குறித்த இப்பாடல் மாலை மேலும் சிறப்புபெறவும் சுவைபெறவும் அருளுமாறு ஐந்துகரங்களை உடைய ஆனைமுகத்தானின் தாள்களுக்கு அர்ப்பணம் செய்கின்றேன் என்கிறார் அருணகிரியார்.

இராகவனின் விளக்கம்

Monday, January 30, 2006

6. பித்தரென்று பெயர்படைத்தார்க்கு! - சமயச்சண்டைகள்

சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்
சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்
பிறசமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்
பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயரொவ் வாதோ
அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும்
அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே
சிற்சபையில் என்கணவர் செய்யும் ஒரு ஞானத்
திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி
-இராமலிங்க அடிகளார்சைவம் தவிர்த்து மனிதர்களுக்கு இன்னும் ஆறு முக்கிய மதங்கள் இருக்கின்றன. அவை...

வைணவம் - மாயவனான திருமாலைப் பரம்பொருளாய் வழிபடுவது.

கௌமாரம் - கந்தக் கடவுளை பரம்பொருளாய் கொண்டது.

சாக்தம் - சக்தியை வழிபடுவது

காணபத்யம் - கணங்களுக்கெல்லாம் அதிபதியான பிள்ளையாரை பிரதானமாய்க் கொண்டது.

சௌரம் - சூரியனை வழிபடுவது.

இவற்றையும் மசாலாவாய் இன்னும் சில schools of thoughts-களையும் தூவி கலந்த அவியலே தற்காலத்தில் நமக்குப் பரிச்சயமான இந்துமதம். இதில் சைவர்களை பொருத்தவரை ஆதிபரம்பொருள் சிவனே. அவனுக்கு பின்னரே மற்ற தெய்வங்கள். வைணவருக்கு நேரெதிர் கொள்கைகள். இந்த சமயச் சண்டையின் போது நடந்தது Spanish Inquisitionக்கு போட்டியாக இருந்திருக்கும் என்பது என் கற்பனை. ஏனென்றால் இருசாராரும் தம் கருத்துகளை மாற்றிக்கொள்ள, அல்ல மற்ற கருத்துகளை பொருத்துக்கொள்ளக்கூட முடியாத மனநிலையில் இருந்திருக்கின்றனர். இந்த சர்ச்சைக்குள் நாம் போகவேண்டாம். இது அதற்கான இடமன்று. மேலும், சிக்கலான ஒருவிஷயத்தை மிக அழகாய், நிதானமாய் கையாள்கிறார் அடிகளார்.சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்
நமது மனங்களில் மட்டுமன்றி அண்டசராசரங்களிலும் அங்கிங்கெனாதபடி ஆனந்த தாண்டவம் புரிகிறான் அந்த நாயகன். ஆனந்தத் தாண்டவம் புரிவது என்ற உடனேயே அந்தத் தில்லையம்பலத்தில் ஆடுகின்றவன் தானே நினைவுக்கு வருகின்றான். நடராஜப்பெருமான் இல்லாத இடமேது? அப்படிப்பட்ட சிவபெருமானுக்கு...சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்
சரி. அவன் சிவன் என்று சொல்லியாயிற்று. அதனால் மற்ற தெய்வங்கள் மட்டமானவர்களா? இல்லை அவனை விட உயர்ந்தவர்களா? இதெல்லாம் வெட்டிப்பேச்சு என்று சைவத்தின் பெருமைமட்டும் பாடும் அடியார்க்கு விளக்குகிறார் வள்ளலார். மற்ற சமயப் பெயர்கள் நம் நாயகனுக்கு பொருந்தாது என்றும் நினைப்பாயோ? அப்படி நீ நினைப்பின், சிவன் எங்கும் எதிலும் இருக்கிறான் என்ற நம்பிக்கை உனக்கில்லையென்று அர்த்தம். அது சிவனுக்கே செய்யும் அவமரியாதையல்லவா?

மற்றச் சமயக் கடவுள்களின் பெயர்கள் நம் நாயகனுக்கு பொருந்துமோ என்று அறியாமையால் கேட்கிறாய்...பிறசமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்
நமக்கென்று சமயம் ஒன்றிருந்தாலும், நம் சமயத்தை பின்பற்றாத மற்றவரின் கடவுளின் பெயரும் நமது கடவுளின் பெயரே என்று நினைக்க ஆரம்பிப்போமானால் மத மாத்சர்யங்கள் குறையத்தானே செய்யும். அது உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். முற்றிலுமாய் அதைப் புரிந்தவன் பரம்பொருளே. நமக்கு புரியக்கூடியதா இது? ஆனால் அடுத்தவருடைய தெய்வத்தையும் நம் தெய்வமாய் எண்ணி வணங்கவேண்டாம், துவேஷம் செய்யாமல் இருந்தாலே போதுமே. இல்லையா?

அதையே, மற்ற சமயக் கடவுளர்களின் பெயரும் நம் நாயகனின் பெயர்தான் என்று உணர்ந்துகொள்வாய் என்கிறார்.பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயரொவ் வாதோ
திருநாவுக்கரசர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் என்ற நான்கு முக்கிய சைவ நாயன்மார்களுக்கிடையில் சுந்தரருக்கு முக்கிய இடமுண்டு. மற்ற மூவருக்கும் சிவபெருமான் தெய்வம் என்ற நிலையிலேயே இருந்தார். ஆனால், சுந்தருக்கு? "பித்தா!" என்று சுந்தரர் இழிவாய் அழைத்தும் எம்பெருமானுக்கு கோபம் வரவில்லையே! ஒரு நண்பனைப் போலல்லாவா சுந்தரருடன் கலாட்டா செய்து விளையாடினார். அதுவே சுந்தரரின் சிறப்பு.

வள்ளலாரும் நகைச்சுவை பொங்கக் கூறுகிறார். ஒரு தெய்வத்தை 'ஆதி பரம்பொருளே, என் தாயே, தந்தையே, ஆட்கொண்டானே, குருவே' என்றெல்லாம் பெயரிட்டு கைகூப்பி, சிரந்தாழ்த்தி வணங்குவோம். ஆனால், நம் சிவனையோ ஒரு பித்தன் அதாவது வெறும் பைத்தியக்காரன், புத்தி பேதலித்தவன் என்றளவில் புகழ்ந்தாகிவிட்டது! அத்தகைய ஈனமான பெயரையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட கருணைக் கடலல்லவா அவன்? பித்தன் என்றே அழைத்துமுடித்த பின், வேறெந்தப் பெயர்தான் இன்னும் மோசமாக இருந்துவிட முடியும்? மேலும், இந்த இழிசொல்லையே பெயராய், பக்தியாய் ஒப்புக்கொண்டவனுக்கு ஏனைய தெய்வங்களின் பெயர்களைச் சொல்லி வழிபட்டால் கசக்கவா போகிறது? அது அறியாமற்போய் பிற தெய்வப்பெயர்கள் சிவனுக்கு ஒவ்வாது என்று பிதற்றலாமோ?அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும் அவர்பெயரே
அவ்வாறு வேற்று மத தேவர், அசுர, தெய்வப் பெயர்கள் மட்டுமின்றி சாதாரண மனிதர்களாகிய உன் பெயரும் என் பெயரும்கூட அவனுக்கு பொருந்தாமல் போகுமோ? எல்லாமே அவன் பெயர்கள் தான்.எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே
மனிதன், தேவர், முனிவர், கடவுளர்கள் என்று மட்டும் ஏன் பார்க்கிறாய்? எல்லா மிருகங்களின், இவ்வுலகில் வாழும் செடி, கொடி, புழு, பூச்சி என அனைத்து ஜீவராசிகளின் பெயர்களும் அவன் பெயரே!இதனை யார் உணர்ந்துகொள்வார்கள்?
சிற்சபையில் என்கணவர் செய்யும் ஒரு ஞானத்திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி
யாரொருவர், அண்டசராசரங்களிலும் என் கணவர் (இதில் பதி = அரசன்/துணைவன் என்றும் கொள்ளலாம்) நடத்துகின்ற தெய்வீக மாய நடனத்தை, அதிலடங்கியிருக்கும் பரமானந்தத்தை கண்டோரோ, அவன் அருளால் அதை ஆத்மார்த்தமாய் உணர்ந்தோரோ மட்டுமே அறிவர்.

5. நமச்சிவாயத்தை நான்மறவேனே!

பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
      பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
      உயிரை மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
      கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
      நமச்சி வாயத்தை நான்மற வேனே!

                                   -இராமலிங்க அடிகளார்


பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
தந்தை என்ற சொந்தத்தை விட தாய்க்கு இன்னும் ஒருபடி அதிக இடமுண்டு நம் வாழ்வில். ஏனென்றால் சுமந்து பெற்று, சீராட்டி வளர்த்தவள் அவள். அதனாலேயே, தன் தாயை அவமதித்தவன், அவளுக்கு துரோகம் செய்தவன் என்று தீயவை செய்து தாய்ச் சாபம் பெற்றவன் இவ்வுலகில் நல்வாழ்க்கையும், மறுவுலகில் முக்தியும் அடையவே முடியாது என்று நம் பெரியோர்கள் மிகக் கடுமையான தண்டனையைப் பற்றி எச்சரித்திருக்கிறார்கள் (மகவு என்றால் குழந்தை பொருள் வரும். எனக்கென்னமோ மகன் என்றே அர்த்தம் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் பெற்றோருக்கு ஐம்பது வயது ஆண்மகனும் இன்னமும் குழந்தைதானே?). ஆனால், இம்மாதிரி தண்டனைகளுக்கு அஞ்சாமல் கூட தாயை மறப்பானெனினும்...

பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
முன்சொன்னதாவது நடக்கக்கூடிய ஒன்றானாலும், பெற்ற பிள்ளையை என்றாவது தாய் மறப்பாளா? மறக்கத்தான் முடியுமா? எப்பேர்ப்பட்ட கொடிய குணமுடைய பெண்மணிக்கும் தான் ஈன்ற பிள்ளையெனும் பொழுது, கருணை வரத்தான் செய்யும். அதனாலேயே முன்னால் கூறிய உதாரணம் நடப்பதும் அரிது. ஏனென்றால் ஒரு தாய் தன் பிள்ளையை, அவன் எவ்வளவு கொடுரமானவனாக இருந்தாலும், தனக்கு துன்பத்தையே இழைத்தாலும் சபிக்காமல் மன்னிக்கவே விரும்புவாள். ஆனாலும் இந்த மிகைப்படுத்தப்பட்ட உதாரணத்தை அடிகளார் பயன்படுத்துகிறார்.

உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்

இந்த உடலும் உயிரும் சக்தியும் சிவமும் மாதிரி. திருவிளையாடல்ல சிவனும் பார்வதியும் நல்லா சண்டையெல்லாம் போட்டு, சிவாஜி தாம்தூம் இரத்தச் சிவப்பு கண்களோட ஆட்டமும் போட்டு; பாம்பு, நெருப்பு ராக்கெட்லாம் விட்டு.. கடசியா சமாதானமாப் போவாங்களே. 'சக்தியில்லையேல் சிவமில்லை. சிவமில்லையேல் சக்தியில்லை'. அந்த மாதிரி இந்த நம் உயிராகிய ஆத்மா என்பது உடலாகிய மெய்யிலிருந்து பிரிந்து இந்த மண்ணுலகில் வாழமுடியாது. அதேபோல், மெய்யாகிய உடலும் உயிராகிய ஆத்மா இல்லாவிட்டால் வெறும் பிணம் தான். இப்படி இரண்டும் ஒருவர்கொருவர் இல்லாமல் இருக்க முடியாது. அப்போது இரண்டில் ஒன்று மற்றொன்றை மறப்பது என்பது சாத்தியமா? மறந்தாலும், இழப்பு இருவருக்கும் தானே.

கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
ஒரு கலையைக் கற்பது என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம்? ஜாலியா கத்துகிட்டா பத்து பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து பயின்று வந்தால் சாதாரண கலைஞனாகலாம். அவங்களால எளிதா மறந்துட முடியும். நானே அதுக்கு நல்ல உதாரணம். :)

ஆனா அதிலேயே மூழ்கி, வழி தவறாமல் கடுமையாய் உழைத்தால் தான் ஒரு கலைஞனாகலாம். அத்தகைய ஒரு கலைஞன், உதாரணத்துக்கு எம்.எஸ் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோமே. ஐம்பது ஆண்டுகள் உயிரைக் கொடுத்து உழைத்துக் கற்ற கலையை திடிரென்று ஒரு நாள் மறக்க முடியுமா? மறக்க நினைத்தாலும் தான் முடியுமா? ஏனென்றால் நம் இரத்தத்திலேயே ஊறிவிட்டிருக்குமல்லவா? இதில் கலை என்பது சாஸ்திரம், அறிவியல் என்னவேனா வச்சுக்கலாம். ஆனாலும், அந்த மாதிரி பலவாண்டுகள் கற்ற கலையை ஒரு கலைஞன் மறந்தாலும்...

கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நம் உடலில் நடக்கும் பல விஷயங்களை நாம் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தலாம். ஆனால் மிகவும் conscious ஆக முயற்சி எடுத்து செய்யவேண்டும். மேலும், அவற்றை வீம்புக்காக தீவிரமாய் நிறுத்துவதால் பாதிப்புகளே உண்டாகும். மூச்சு, இதயத்துடிப்பு என்ற வரிசையில் கண் இமைப்பதும் வரும். நாம் நினைக்காமலேயே நம் கண்கள் தாமாகவே இமைகளை மூடி திறப்பதன் மூலம் காற்றிலுள்ள தூசு போன்றவை நம் கண்களை உறுத்தாமல் காத்துக்கொள்கிறது. இரண்டு நிமிடம் இமைக்காமல் இருக்க முயன்று பாருங்கள். உடனே கண்ணீர் வரும். அதுவும் தற்காப்பு முயற்சியே. ப்ளஷ் செய்வது போல நம் கண்ணீர் சுரப்பிகள் வேலை செய்வதன் பயனே கண்ணீர். இது மாதிரி, கண்கள் இமைப்பது என்பது அக்கண்களின் பாதுகாப்பிற்கு இன்றியமையாத ஒன்று. அதைச் செய்ய கண்கள் மறந்தாலும்..

நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
முனிவர்கள், கடவுளர்கள், தேவர்கள் போன்றவர்களை நற்றவத்தவர் என்கிறோம். ஏன் கடவுளர்கள்? பிரம்மா முதலிய பிற கடவுள்களும், இந்திராதி தேவர்களும் கூட பரம்பொருளை நோக்கி பல தவங்கள் செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அம்மாதிரி பெரும் தவவலிமை உடையோரின் நெஞ்சத்தின், ஆத்மாவின் உள்ளே ஓங்கிஉயர நின்று ஒளிதரும்..

நமச்சிவாயத்தை நான்மறவேனே!
மேற்கூறிய கொடுரமான, மிகைப்படுத்தப்பட்ட செயல்கள் எல்லாம் இயற்கையாய் நடந்தாலும், நமச்சிவாய மந்திரத்தை நான் என்றென்றும் மறவாமல் ஜபித்துக் கொண்டிருப்பேனே!


---
என்னடா ஆரமிச்சாலும் ஆரமிச்சான், வரிசையா போட்டுத்தாக்கறானேன்னு நினைக்கவேணாம். இன்னும் ஒரு வாரத்துக்கு வேலை கம்மி. அதான்... அதுக்கப்புறம் எல்லாம் சரியாயிடும். பயப்படாதீங்க.

4. பிறத்தமை தீங்குசொல்லாத் தெளிவும்!

தமிழ்மணத்தில் நிலவும் பிரச்சனைக்கும் வள்ளலார் அழகா இந்தப் பாட்டில் ஒரு வரி சொல்லிருக்கார்.

ஆகவே எனக்கு மிகவும் திருவருட்பாக்களில் ஒன்றை குமரனின் பதிவில் சொன்னது போல, அருமையான கருத்துகளை உள்ளடக்கிய இப்பாடலை வலையேற்றியிருக்கிறேன்.

பாடியது: விஜய் சிவா

கேட்க

ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ

திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
இடுகின்ற திறமும்இறையாம்

நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள
நினைவிடா நெறியும்அயலார்

நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
நெகிழாத திடமும்உலகில்

சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத் (பிறத்தமைன்னும் அர்த்தம் கொள்ளலாமே!)
தீங்குசொல் லாத்தெளிவும்

திரம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
திருவடிக் காளாக்குவாய்

தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே!

கேட்டுப்பாருங்கள்.

---
கேட்பதில் சிக்கல் ஏதும் இருப்பின் [?].
----


என்னென்ன வேண்டும்

//ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத இயல்பும்//

ஒரு பொருளை எனக்கு தானமாக கொடுங்கள் என்று நான் யாதொருவரிடமும் போய் "ஈ" (யாசகமாக கொடு) என்று மன்றாடக்கூடிய நிலையும், அப்படிக் கேட்பதையே என் இயல்பாக கொள்ளாமையும்

//என் னிடம்ஒருவர்ஈ திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல் இடுகின்ற திறமும்//

என்னிடம் ஒருவர் வந்து ஒரு பொருளை தானமாக தந்துதவுங்கள் என்று கேட்கும்போது அவர் கேட்பதை மறுக்காமல், கேட்கும் பொருளை அளித்துதுதவ வேண்டும் என்று நிலைதவறாத, உறுதியான கொள்கையும்

//இறையாம் நீஎன்றும் எனைவிடா நிலையும்//

யாவர்க்கும் இறைவனான நீ என்னை மறவாமல், எந்நேரமும் என்னருகில் இருந்து அருளக் கூடிய உன்னத நிலையும்

//நான் என்றும்உள நினைவிடா நெறியும்//

நான் ஒரு நொடிகூட உள்ளத்தால் உன்னை மறவாமல், எந்நேரமும் உன்னையே சிந்தையில் வைத்து போற்றிப் பாடக் கூடிய பக்தி நெறியும்

//அயலார் நிதிஒன்றும் நயவாத மனமும் //

அடுத்தவர்களின் பொருள் மீது பேராசைப் பட்டு, அதனை கவர வேண்டாம். அதனை திருட வேண்டும் என்ற எண்ணம் கூட வாராத நல்ல மனமும்

//மெய்ந் நிலைநின்று நெகிழாத திடமும்//

மெய்யானாதான உனை அடையும் வழியிலிருந்து என்றென்றும் பிறழாமல், மனம் தளராமல் இருக்கக்கூடிய உறுதியும்

//உலகில்சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத் (பிறத்தமைன்னும் அர்த்தம் கொள்ளலாமே!)தீங்குசொல் லாத்தெளிவும்//

அடுத்தவரை சீ, பேய், நாய் என்று இகழ்சொற்களால் தூற்றாமல் இருக்கக்கூடிய தெளிவான, அன்பான சிந்தனையும்இதில் பிறத்தமை என்று அர்த்தம் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்பதென் கருத்து.ஒருவரின் பிறப்பைக் கொண்டு அவரை வன்சொற்களால் இகழாத அன்பான சிந்தனையும்

//திரம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின் திருவடிக் காளாக்குவாய்//

உறுதியாய் இவையெல்லாவற்றையும், அவற்றுடன் கூட முக்கியமாக சத்தியத்தையே என்றும் பேசும் தன்மையும், உடற்தூய்மையுடன் சேர்த்து மனத்தூய்மையும் எனக்கு அருளிச்செய்து, உன் அழகிய தெய்வீகத் திருவடிகளை அடையக் கூடிய தகுதியை உடையவனாக என்னை செய்வாய்!யார் இவையெல்லாம் தந்தருள வேண்டும்?

//தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே//

சென்னையிலிருக்கும் கந்தக்கோட்டத்தமெனும் போற்றப்படற்குரிய(வளர்) தலத்தில் அனைவரும் புகழ, என் தாயின் ஸ்தானத்தில் நிற்கும் கந்தவேளே!

//தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே!//

தனக்குள்ளேயே எல்லாமுமாய் நிற்கும் மணியே!உன்னையே நினைத்து, தம்முள் இழுத்து, நிறுத்தியிருப்போர்க்கு முடிவில்லாமல் அருளும் சைவ மணியே!ஆறுமுகத்தை உடைய என் தெய்வமணியே!

3. புதுப்பாட்டா பொதுப்பாட்டா?

உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்
ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்
செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்
சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்
மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து
மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்
பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்
பாடுகின் றேன்பொதுப் பாட்டே!

சன் டிவி புதுப்பாட்டு தெரியும். இது என்னடா இது பொதுப்பாட்டு அப்படீன்னு யோசிக்கறீங்களா? இருக்குதே விஷயம்.

உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்
ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்


இந்த உலகத்துல இருக்கற அத்தனை உயிர்களும் நடராஜப் பெருமானாகிய நீ ஒருத்தனே ஆனந்த நடனமாடும் அரங்குகள் என்று அறிந்துகொண்டேன்.

செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன் சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்
(செயிர் னா கெட்டவை, முழுமையடையாதவை, குறைகளுடையவைன்னு பொருள் கொள்ளலாம்) அதாவது இந்த மாதிரி கெட்ட விஷயங்கள்லாம் தவிர்த்துவிட்டேன்.

திருன்னா செல்வம்னு தெரிஞ்சுருக்கும் இல்லியா? திருமகள்னு கூட சொல்றோமே மகாலட்சுமிய?

ஆனா, வள்ளலார் இங்க என்ன பொன்னும் மண்ணும் பெண்ணும் பத்தியா சொல்றார். திருன்னா ஆன்மிக செல்வம். பக்திங்கற செல்வம். ஆண்டவனின் அருள்கற செல்வம். இந்த மாதிரி என்னென்ன நற்பயன்கள் உண்டோ அத்தனையும் உன்னால அடைஞ்சிட்டேன்.

சித்துன்னா மாயை. உலக மாயையெல்லாம் புரிய வல்லவன் நீ என்று புரிந்துகொண்டேன்.

மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து மலர்ந்தனன்
இப்படியெல்லாம் இறைவனை நினச்சா மயிற் கூச்செறிகிறதாம் அடிகளாருக்கு. என் உள்ளமெல்லாம் உன் அன்பினால் கனிந்து மலர்கிறதே.

சுத்தசன் மார்க்கப் பயிரெலாம் தழைக்கப்
சன் மார்க்கத்தப் பத்தி இன்னொரு நாள் பார்ப்போம். இப்போதைக்கு பொதுவான வழினு மட்டும் வச்சுப்போம்.

சுத்தசன்மார்க்கம் என்கிற பயிரின் விதைகள் உலகெங்கும் பரவ

பதியெலாம் களிக்கப்
வானத்துலிருக்கற தேவர்கள், முனிவர்கள் போன்ற கடவுளர்கள் எல்லாரும் மகிழ்ச்சியுற

பாடுகின் றேன்பொதுப் பாட்டே!
நானும் இந்த பொதுப் பாட்ட பாடறேன். உலகத்துல ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு சமூகத்துக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு. சாப்பாட்டுல, உடைகள்ல, மொழிகள்லேன்னு. இல்லியா? ஆனா உலகம் முழுக்க பொதுவான ஒன்னு இருக்கு தெரியுமா? அதுதான் கடவுள்னு நாம கூப்பிடற பரம்பொருள். எல்லாருக்கும் பொதுவானவனப் பத்திப் பாடப் பாடற அத்தனை பாடல்களும் பொதுப் பாட்டுகள் தான். அதத்தான் சொல்றார் வள்ளலார். ஈடு இணையிலாத பரம்பொருளே உன்னைப் பற்றி நானும் பாடுவேன் பொதுப் பாட்டேன்னு!

2. இது தேவையா?

வெட்டித்தனமா செய்திவிமர்சனங்கள் மட்டும் செய்துவந்த எனக்கும் ஒரு பேராசை, பொருந்தா ஆசை ஏற்பட்டது. என்ன அந்த ஆசை என்றால் எனக்கு பிடித்த, கொஞ்சமாய் பரிச்சயமான பாடல்களுக்கு ரொம்பவும் தீய்ந்த தமிழிலெல்லாம் விளக்கம் சொல்லாமல், எளிய கிட்டத்தட்ட பேச்சுத்தமிழில் விளக்கம், அல்லது எனக்கு அப்பாடலிலிருந்து என்ன புரிந்தது என்று சக பதிவாளர்களுக்கும் தெரியும் வகையில் எழுதலாமே என்பது அது. இவன் என்னவோ புதிதாக வீனஸிலிருக்கற மொழியில் ஏதோ எழுதிவிட்டு, சும்மா இல்லாம இதை தமிழ்னு வேற கதை விடறானேன்னு படிக்கறவங்க டென்சன் ஆகாம எழுதுவதே நோக்கம். நான் தமிழ் அறிஞனுமல்ல. மாணவனுமல்ல. சொல்லப் போனால் தமிழைக் இதுவரைக் கற்காமல், இப்போதுதான் தமிழென்பது என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆவலில் புறப்பட்டிருப்பவன்.

மேலும், இத்தகைய ஒருவன் என்ன தைரியத்தில் மற்றவர்களுக்கு தீந்தமிழ் பாக்களுக்கு விளக்கமளிக்க வந்திருக்கானென்று தாங்கள் கேட்குமுன் நானே விடையளித்துவிடுகிறேன். உங்களுக்கு புரியும் வகையில் சொல்வது மட்டுமே என் நோக்கமல்ல. மாறாய், எனக்கு நானே பழந்தமிழின் சுவையை உணர்ந்து கொள்ள ஒருவகைத் தேடலே இப்பதிவு. அத்தகைய தேடலில் எனக்கு புரிந்ததை, என்னைப் போலவே என் அஞ்ஞான நிலையிலேயே இருப்போரிடம் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு. (ஆஹா! தேடல் அப்டி இப்டியெல்லாம் வார்த்தை ஜாலம் போட்டு சாஹித்ய அகாடமி ரேஞ்சுக்கு போயிட்டடா இராமநாதா!) இப்படியெல்லாம் சொல்லும் போதே இவன் சொல்லும் விளக்கங்களில் தவறுகள் இருக்கத்தான் செய்யும் என்பது விளங்கியிருக்குமே?

அந்த மாதிரி தப்பு இருந்தா நாலு உதை கொடுத்து என்னை திருத்தவேண்டியது உங்களோட வேலை. மேலும், நான் மட்டுமே கிறுக்கிக் கொண்டிருக்காம, நீங்களும் கலந்து கட்டி அவியல் தயார் செய்யலாம். எப்படி? படிச்சுட்டு.. ஆமா/இல்ல, புடிச்சுது/தாங்க முடியல சாமி, அடி வாங்க ஆசையா/இல்லியா, நன்னி/நன்றினு நிறுத்திடாம, உங்களுக்கு என்ன தோணுதுனும் எழுதுங்க.

இதைப் பத்திதான் எழுதணும்னு இன்னும் தீர்க்கமா முடிவு பண்ணல. இப்போதைக்கு கொஞ்மா கந்தர் அநுபூதியும் ரொம்ப கொஞ்சமா திருவருட்பா எடுத்து உளறலாம்னு ஆசை. பார்ப்போம்.

இப்பதிவைக் கண்டு நொந்து போனீர்களானால், இம்முயற்சியை நான் துவக்கக் காரணமாயிருந்த இராகவன், ஆன்மிக சூப்பு, ஞானவெட்டியான் ஐயா, தி.இரா.ச மற்றும் ஜோசப் சாருக்கு உங்களின் அழுகிய தக்காளிகளையும், முட்டைகளையும் பார்சல் அனுப்புமாறு வேண்டுகிறேன். இத்தகைய சூரியன்களைப் போல நான் ஒருநாளும் ஆக முடியாது. ஆனாலும் என் சிறிய இறக்கைகளை சிலுப்பிக்கொண்டு இந்நெடிய பயணத்தைத் தொடங்குகிறேன். ஒரு நிலாவாகவாவது ஆவேனோ? அல்லது எரிந்து சாம்பலாய்த்தான் போவேனோ?

எதுவாகினும் தாமிருக்க பயமேன் என்று கைகாட்டும் கந்தனை என் வழிகாட்டியாய் நம்பி...

பிரியத்துடன்,
இராமநாதன்