Tuesday, August 08, 2006

10. மாயை மடியத் தொட்டான் முருகன்!

கார்மாமிசை காலன் வரிற்கலபத்
தேர்மாமிசை வந்தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி யெனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே! (10)

//தார் மார்ப வலாரி தலாரியெனும் சூர்மா மடியத் தொடு வேலவனே//

தார் மார்ப - தார் என்றால் மாலை. அழகிய மாலை அணிந்த மார்பை உடையவா. வலாரி என்பது இந்திரன். வலாசுரன் என்ற அசுரனை அழித்ததால் இந்திரனுக்கு வலாரி என்ற பெயர் உண்டு. சூரபத்மன் இந்திரனுடைய பட்டணத்தைக் கொண்டவன். அதனால் அவன் வலாரியின் தலாரி (தலத்திற்கு). சூரபத்மன் நின்றது மா மர வடிவத்தில். மா வடிவத்தில் உயர்ந்து நின்ற இந்திர லோகத்தை அழித்த சூரனை..

மடியத் தொடு வேலவனே - முருகன் வேலால் அடித்தானா? அவனுடைய ஞானவேல் தொட்டவுடன் ஆணவ மலம் தூளாகி மடிந்தது. அடிக்க வேண்டியிருக்கவில்லை. வேலால் மெதுவாய்த் தொட்டான் முருகன். அதில் அழிந்தவன் சூரனா? இல்லை. சூரன் நற்கதியடைந்து முருகனின் அருகிலேயே என்றென்றும் நிற்கும் அருள் பெற்றான். அழிந்தது அவனின் ஆணவமே. இதைதான் நினைவில் கொள்ளவேண்டும். அவனை துதித்தால் நம்மை காத்து கெடுநிலையிலிருந்து ஏற்றுபவன் கந்தன். நம்மை அழிப்பவன் அல்ல. நம் பாவங்களும், அறியாமையும் தான் அவனைக் கண்டு பயப்படும். நாம் பயப்படத் தேவையில்லை. பக்தி செய்தாலே போதும். எத்தகைய தீய கதியிலிருந்தும் நம்மைக் காத்து தன்னருகிலேயே வைத்துக் கொள்பவன் அவன்.

//கார்மா மிசை காலன் வரின் கலபத்தேர்மா மிசை வந்து எதிரப் படுவாய்//

கார் என்றால் கரிய. கார்மேகம் என்று சொல்கிறோம் இல்லையா? மா என்றால் பெரிய மிருகம். கரிய பெரிய மிருகமான எருமை மீதேறி உயிரை எடுப்பவன் காலன். அவன் சத்தியசீலன். தர்மத்திற்கு நிஜமான தலைவன். நமக்கு விதிக்கப்பட்ட காலம் முடிவடைந்தால் அழைத்துச் செல்லவேண்டியது காலனின் கடமை. அதுதான் அவன் தர்மம். அவனைக் கொடியவன் என்றோ அவனிடமிருந்து நம்மைக் காத்திடு என்றோ யாரும் சொல்வதில்லை. (மார்க்கண்டேயர் கதை வேறு, அது இங்கே வேண்டாம்). பொதுவாக காலனிடமிருந்து காத்திடு என்றால் மரணபயத்திலிருந்து நம்மைக் காத்திடு என்றுதான் பொருள். மரணபயம் என்பது எல்லாருக்கும் இருப்பது. என்னைக் கேட்டால் இருப்பது நல்லதுதான். என்னடா இப்படி சொல்லுகிறேனே என்று டென்ஷன் ஆகவேண்டாம்.

இந்த பிறவியில் நல்ல மனிதப் பிறப்பாய் நோய் நொடியின்றி, ஆரோக்கியமான சவுகரியமான வாழ்வை பெற்ற நமக்கு அடுத்த ஜென்மம் என்று இருப்பின் அதில் எதுவாகப் பிறப்போமோ என்று பயம் இருக்கவேண்டாமா? இப்போதைய சுகமான மனித வாழ்க்கையாய் இல்லாமல் தினந்தோறும் மற்ற விலங்குகளுக்கு பயந்தோடிக் கொண்டிருக்கும் மானாகவோ, முயலாகவோ பிறக்க நேர்ந்தால்? இந்த நற்பிறவியிலேயே ஆண்டவனை ஒரு நொடி கூட நினைக்காத மனம், அப்போது மட்டும் நினைக்குமா? அதனால் மரணபயம் என்பது இந்தப் பிறவியிலேயே முருகனை அடைய இன்னும் சிரத்தையுடன் நாம் முயற்சி செய்ய உதவுமானால் இருப்பதில் தவறே இல்லை அல்லவா?

பாடலில் சொல்வது கரிய எருமையில் காலன் என்னை அழைத்துப்போக வருகையில், கலபத்தேர் - அழகான மயில் வாகனத்தில் நீ என்னெதிரில் தோன்றி ஆட்கொள்ளவேண்டும் என்று பாடுகிறார் அருணகிரி. அவருக்கு காரியசித்தி ஆகிவிட்டது. நமக்கு? தினமும் பாடிப் பிரார்த்தனை செய்யவேண்டிய பாடல்களில் ஒன்று இது.