Wednesday, November 22, 2006

13. இருக்கிறானா இல்லையா?

முருகன் தனிவேல் முனிநம் குருவென்று
அருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென நின்றதுவே. 13

//முருகன் தனி வேல்முனி நம் குரு என்று அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ?//

அ, ஆ வென்று வெறும் எளிமையான எழுத்து எழுத பழக்கக் கூட ஆசிரியர் ஒருவர் வேண்டும். எழுத்துக்களை நாமே கற்றுக்கொள்ள முடியாதா? பாடங்களுக்குத்தான் புத்தகங்கள் இருக்கின்றனவே. சுயமாக படித்துக்கொள்ள முடியாதா? முடியாது. அதுதான் குருவின் மகத்துவம். ஒவ்வொரு பருவத்தில் நமக்கு ஒவ்வொரு பக்குவம். வைரத்தை தீட்டுவது போல் நிதானமாக, நேர்த்தியாக நம்மை தயார்படுத்துவது ஆசிரியர்களின் பணி. ஆரம்ப பள்ளி, உயர்நிலை, மேல்நிலை, கல்லூரி அளவு பேராசிரியர்கள் என ஆசிரியர்களில் சிலவகை. ஆனால் அடிப்படை பணியென்னவோ ஒன்றுதான் அல்லவா? நிலையற்ற உலக வாழ்க்கைக்கே ஆசிரியர்கள் வழிகாட்டிகளாய்த் தேவைப்படும் போது, ஆன்மிகத்திற்கு வழிகாட்டிகள் வேண்டாமா? இறைவனைக் குறித்த நம் தேடலுக்கு? ஒரு குரு வேண்டாமா? வாரியார் சுவாமிகள் சொல்வார்கள். மாதா பிதாவை பிள்ளைக்கு அடையாளம் காட்டுவாள். பிதா நல்ல குருவை. குருவோ தெய்வத்தையே அடையாளம் காட்டுபவர். அதனால் தான் அந்த வரிசையில் நம் பெரியவர்கள் வைத்திருக்கிறார்கள் என்று.

ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். குரு தெய்வத்தை அடைய வழி தான் காட்டுவாரே தவிர குருவே தெய்வம் கிடையாது. அப்படி எந்த ஒரு நேர்மையான குருவும் சொல்லிக்கொள்ள மாட்டார். இன்னொன்று இவர்கள் கடவுளுக்கும் நமக்குமிடையே ஆன இடைத்தரகர்கள் கிடையாது. இந்த குரு, ஆச்சாரியர்கள் யாருமே எனக்கு வேண்டாம், நானே இறைவனை அடைந்து கொள்கிறேன் என்று சொல்கிறீர்களா. அதுவும் நியாயம்தான். செய்யலாம். எப்படியென்றால் நானே சொந்தமாக E=mc^2 ப்ரூப் கண்டுபிடித்து அதன் பயனை என் சொந்த முயற்சியில் மட்டுமே அடைவேன் என்பது போன்றது. சொந்த முயற்சி என்பது வரவேற்க வேண்டிய விஷயம் என்றாலும், பலர் செய்து தெளிந்த காரியத்தை திரும்பவும் செய்தே தீர்வேன் என்பது தேவையற்ற காலவிரயம், அல்லவா? இன்னும் பல நூறு பிறப்புகள் தேவைப்படுமல்லவா?

பல கோடி யுகங்களாக நம் பாரதப் புண்ணியபூமியில் தோன்றி வந்துள்ள பல கோடி மகான்கள் அருந்தவங்களும், யோகமும் செய்து கற்றதுதான் இறைவனை அடையும் வழி. அவர்கள் எழுதி வைத்துச் சென்றுள்ள சூத்திரங்களிலும் மார்க்க்ம் தான் சொல்கிறார்களே தவிர, இறைவனை நேரே நமக்கு டோர் டெலிவரி செய்யவில்லை. பல மார்க்கங்களில் எந்த மார்க்கம் நமக்கு சரிப்பட்டு வருமோ, அதற்கு தகுந்த குருவின் உதவியை நாடினால் அவர் நமக்கு உபாயங்கள் அருளுவார். வாய்ப்பாடு டேபிள்ஸும், லாக் டேபிள்ஸும், கால்குலேட்டரும் எப்படி பயன் படுகின்றனவோ, அது போலவே குருவின் அறிவுரைகளும் சாதகம் செய்தால் பயன் தர வல்லன. கால்குலேட்டர் கணக்குக்கான விடையைச் சொல்லுமேயொழிய problem க்கான் தீர்வைச் சொல்லாது. ஒரு கால்குலேட்டரையோ லாக் டேபிளையோ சரியாக பயன்படுத்தி விடை காணவேண்டியது நம் வேலை. அதுவே தான் ஆன்மிகத்திலும். இவ்வாறு குருவானவர் வழிகாட்டியாக கொண்டு, சொந்த முயற்சியில் கடைத்தேற வழிகாண வேண்டும். அதோடு கூட குருவானவரின் சத்சங்கமே ஒருவனின் முயற்சிகளை நல்வழிப்படுத்தி ஒழுங்குசெய்யும். அப்படி வருவதே குருவின் தீட்சை. அதுவும் முக்கியமான component இதில்.

குருவினுடைய மகிமையைப் பார்த்தோம். இங்கே அருணகிரியார் சொல்வது ஞானத்தின் வடிவான வேலை ஏந்தி, அண்ட சராசரங்கமெங்கும் வ்யாபித்து உலகில் உள்ளவை இல்லாதவை இனிவருபவை என முக்காலமும் காரியமும் உணர்ந்தவனாய், அனைத்து ஞானத்திற்கும் சுடராய் யோக நிலையில் நின்று அருள் தரும் ஒரே பெருமான் கந்தன். அப்படி தனியொருவனாக, அனைத்தும் அறிந்தவனாக தனிமையில் நிற்பவன் கந்தவேள் மட்டுமே என்பதைக் குறிக்கவே தனி என்னும் பதத்தை பயன்படுத்தியிருக்கிறார். அப்பெருமானை குருவாய் கொண்டவர்கள் மட்டுமே மெய்ப்பொருளை உணரமுடியும். அதுவும் அவனை குருவாய்க் கொள்வதே அவன் அருள் இல்லாமல் கிடைக்காது. அந்த முருகனைக் குருவாக கொள்வதற்கு அவனை நாம் எங்கே சென்று தேடுவது? சீடனாய் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நேரில் எங்கே பார்த்து விண்ணப்பம் கொடுப்பது? முருகனை எங்கே எவ்வாறு அடையாளம் காண்பது?

//உருவன்று அருவன்று உளதன்று இலதன்று இருளன்று ஒளியன்று என நின்றதுவே//
உருவம் அன்று. அருவம் அன்று. உளது அன்று. இலது அன்று. இருள் அன்று. ஒளியும் அன்று. இப்படி எதிலும் இருப்பவன். அதே நேரம் எங்குமே இல்லாதவன். அவனைத்தேடி எங்கே அலைந்தாலும் கிடைக்கமாட்டான். அப்படியென்றால் தேடி என்ன பயன் என்று எண்ணக்கூடாது. கந்தனை நம் அறிவிற்கு எட்டிய பொருட்களில் ஒன்றாக define செய்துவிடலாம் என்று தேடினால் கண்டிப்பாக கிடைக்க மாட்டான். அது ஆணவம். ஆணவ மலம் ஒழியும் வரை இறைவனைக் காண முடியாது என்பதை முன்னரே சில பாடல்களில் பார்த்துள்ளோம்.

"அங்கே இங்கே என்று அலையாதே மனமே!
ஆழ்ந்து பார் உன்னுள்ளே ப்ருந்தாவனமே!"

என்று ஒரு பாடல் உண்டு. கண்ணன் கோகுலத்தில் இருக்கிறான், துவாரகையில் இருக்கிறான், வைகுண்டத்தில் இருக்கிறான் என்று அலைந்து அயராதே மனமே. சும்மா இரு சொல் அற என்று சென்ற பாடலில் பார்த்தோமல்லவா? அப்படி சும்மா இருந்தால் உன்னுள்ளே உன் மனம் தான் ப்ருந்தாவனம் என்று புரியும். அங்கேயேதான் கண்ணனும் இருக்கிறான் என்று பொருள் வரும். அவ்வாறே அருணகிரியாரும் சற்று விளையாடுகிறார்.

அங்கே இல்லை, அதுவும் இல்லை, இதுவும் இல்லை, இங்கேயும் இல்லை. ஆணவத்தால் விளையும் தேவையற்ற தேடலை விட்டு சும்மாயிரு சொல்லற. உன்னுள்ளே நிற்கிறான் கந்தன். அவனை தேடு. கந்தனின் அநுபூதி நாம் வேண்டும் பயன். அந்த அநுபூதி எப்படி அடைவது? அந்த முருகனையே குருவாக கொண்டால் மட்டுமே அதற்கான வழி கிட்டும்.

Monday, November 06, 2006

12. திருடன் வருவானா? திருடிச் செல்வானா?

செம்மான் மகளைத் திருடுந் திருடன்
பெம்மான் முருகன் பிறவா னிறவான்
சும்மா இரு சொல்லற வென்றலுமே
அம்மா பொரு ளொன்று மறிந்திலனே. (12)

//செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான்//

அம்பாளின் அம்சமாய் வந்த சிவந்த மான் ஒன்று சிவமுனியின் பார்வை பட்டதால் கருவுற்று அவ்விடத்திலேயே வள்ளிக்கிழங்கு செடியொன்றின் அருகாமையில் ஈன்றுவிட்டு மறைந்தது. அவ்வழி வந்த வேடரின் அரசன் அம்மகளைத் தம்மகளாய் தத்தெடுத்து வளர்த்து வரலானான். அரசனுக்கு வள்ளிக்கு முன்னர் ஐந்து பிள்ளைகள். அவர்களும் முருக பக்தியில் சிறந்து விளங்கினர். குடும்பத்து ஒழுக்கம் குழந்தைக்கு வராதா? கண்ணனுக்கு ஒரு ருக்மிணி போல குறமகள் வள்ளியும் முருகவேளின் மனைவியாகவே தன்னை பாவித்து வாழ்ந்துவந்தாள். சதா சர்வகாலமும் முருகப்பெருமானையே நினைத்து நினைத்து நெக்குருகி ஆட்கொள்ள வேண்டி வந்த வள்ளியை தோழியர் 'அந்த முருகனா வருவான்? அதுவும் உன்னை மணக்க? பைத்தியக்காரி' என்று கிண்டல் செய்தனர்.

திருடன், கள்வன் என்று ஒருவனை இழிவாய்க் கூறுவார்கள். ஆனால் அந்தப் பட்டத்தையும் முருகன் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறான். அருணகிரி முருகனின் கருணையை அப்படியே வார்த்தைகளில் வடித்திருக்கிறார். செம்மான் மகளை மணந்த மணாளன் என்று சொல்லாமல் திருடும் திருடன் என்று சொல்வதன் மூலம். இதற்கு நேரடியாக கந்த புராணத்தில் வேடர்க்கரசன் அவ்வாறு பெருமானை விளித்தமையால் அதே சொற்றொடரை பயன்படுத்தியுள்ளார் என்பதைவிட, தன்னையே நினைத்து உருகும் பக்தர்களின் மேல் முருகனுக்கு பேராசை என்பதைத் தான் குறிப்பால் சொல்கிறார் எனக்கொள்ள வேண்டும். அவனுக்கும் அவனடியார்க்கும் நடுவே யார் குறுக்கே நின்றாலும், நடுநிசியில் ஒரு திருடனைப் போல தெரியாமல் வந்து கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு, தன் அடியாரைக் கவர்ந்து சென்று தன்னுள் கலக்கச் செய்துவிடுவான் குமரன்.

வள்ளி என்ன தவயோகியா? இல்லை பூஜை பல செய்தாளா? கோயில் கோயிலாக சுற்றினாளா? மந்திர தந்திரங்கள் கற்றுத்தேர்ந்தவளா? இல்லியே. இவையொன்றுமேயில்லாத சாதாரண குறமகள். அவளுக்கு பின் எங்கேயிருந்து இந்த கீர்த்தி? எவ்வித பிரதிபலனும் எதிர்பாராத உண்மையான பக்திக்குத்தான் இறைவன் அடிமை என்பது தெளிவு ஆகிறது. நந்தனுக்குக்காக தன் உற்ற வாகனமான நந்திக்கே 'நகர்ந்து நில்' என்று பரமேஸ்வரன் ஆக்ஞையிடவில்லையா? சிதம்பரத்தையே பார்த்தறியாத, வேதத்தையே கேட்டறியாத பாமரனுக்கு சிவயோகம் அளித்துக்காக்கவில்லையா?

முருகன் சிவகுமரனேயல்ல, சிவனே தான் என்கிறது கந்தபுராணம். அதனாலே தான் அவன் பிறவான் இறவான். என்றுமே பிறப்பில்லாதவன். என்றென்றைக்கும் இறப்பில்லாதவன். சர்வேஸ்வரன் அவனே.

//சும்மா இரு சொல் அற என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே//

சும்மா இரு சொல் அற - என்று எளிய தமிழில் திருவண்ணாமலையில் கந்தன் அருணகிரிநாதருக்கு உபதேசித்தான். கேட்பதற்கு மிக எளிதான உபதேசம் தான். நடைமுறைப்படுத்துவதில் தான் பெருஞ்சிக்கல். ஒரு நிமிடம் கண்ணைமூடி சும்மா இருக்க முயற்சி செய்தாலே தெரியும். இந்த மனம் ஒரு குரங்கு விடயத்தை பல இடங்களில் சொல்லியாகிவிட்டது. வீட்டில் ஜாங்கிரி வாங்கி வைத்திருந்தார்களானால், இப்போதைக்கு ஜாங்கிரி சாப்பிடுவது ஒன்றேதான் இவ்வுலகிலேயே மிகப்பெரிய பொருளாய்த் தெரியும் நமக்கு. ஜாங்கிரி சாப்பிட்டு திகட்டிவிட்டதென்றால் அடுத்து விடயத்துக்குத்தாவும் நம் மனம். காரைப் பார்த்தால் கார் வாங்கவேண்டும், வீடு பார்த்தால் வீடு கட்டவேண்டும் என்று கிளைக்கு கிளை தாவும் மந்தியைப் போன்றதுதான் மனிதமனம். இப்படி ஒரு சமயத்தில் இருக்கும் ஆசை மட்டுமே அப்போதைக்கு உலகிலேயே மிகவும் முக்கியமானதாய் தெரியும். இதுதான் அ(ந்த) மா பொருள்.

ஆனால் வாயைக்கட்டி, மனத்தைக்கட்டி, மெய்யைக்கட்டி முருகன் அறிவுரைப்படி இருந்தவுடன் இந்த மா பொருட்கள் ஒன்றுமே தெரியாமல் சிந்தையிலிருந்து மறைந்து போய், முருகனுடன் கலந்துவிட்ட தவயோகநிலை ஒன்று மட்டுமே நிலைக்கிறதே! இது என்ன ஆச்சரியம் என்று வினவுகிறார் அருணகிரியார்.

------------------------------------------------
சிவந்த மானின் மகளைக் கள்வனைப்போல திருடியவன், அகிலாண்ட கோடிக்கும் பெருமான் முருகன், அவன் பிறப்பில்லாதவன், இறப்பில்லாதவன். அவன் சும்மா இரு சொல் அற என்று சொன்ன நொடியே, நான் இதுவரை பெரியவை, முக்கியமானவை என்று எண்ணிவந்த உலக வஸ்துக்கள் அனைத்தும் மறந்து அறியாமல் போனேனே! அவனுளே கலந்த மோன நிலை மட்டுமே கண்டேனே! என்ன ஆச்சரியம்!