Thursday, June 07, 2007

26. அறிந்ததும் அறியாததும்...

இணக்கறியீர் இதமறியீர் இருந்தநிலை அறியீர்
          இடமறியீர் தடமறியீர் இவ்வுடம்பை யெடுத்த
கணக்கறியீர் வழக்கறியீர் அம்பலத்தே மாயைக்
          கலக்கமற நடிக்கின்ற துலக்கமறி வீரோ?
பிணக்கறிவீர் புரட்டறிவீர் பிழைசெயவே யறிவீர்
         பேருணவைப் பெருவயிற்றுப் பிலத்திலிட அறிவீர்
மணக்கறியே பிணக்கறியே வறுப்பேபேர்ப் பொரிப்பே
         வடைக்குழம்பே சாறேவென் றடைக்க அறிவீரே
                                                                                                 -வள்ளலார்


பலபிறவிகளுக்குப் பிறகு மானுடப் பிறப்பை அடைந்த நாம் நம் வாழ்க்கையில் எதை விடுத்து, என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று சற்றே கடுமையான மொழியில் கடிந்துகொள்கிறார் அடிகளார் இப்பாடலில். எளிமையான பாடல்தான்.


//இணக்கறியீர் இதமறியீர் இருந்தநிலை அறியீர் இடமறியீர் தடமறியீர் இவ்வுடம்பை யெடுத்த கணக்கறியீர் வழக்கறியீர்//


இணக்கறியீர் - இணக்கம் அறியீர். ஒருவருக்கு ஒருவர் அநுசரணையாய் உதவி செய்து இணக்கமாக வாழ அறியவில்லை நாம். மாறாய், இருக்கும் குறைந்த வாழ்நாளில் பக்கத்துவீட்டினருடன் நடக்கும் குழாயடிச்சண்டை தொடங்கி அண்டைநாட்டின் வளம்சுருட்ட உலகப்போர் வரை நடத்துகிறோம்.

இதமறியீர் - இதமாய் பதமாய் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டாலே உலகில் பலபிரச்சனைகள் தீர்ந்துவிடும். ஒவ்வொருவரும் முறுக்கிக்கொண்டு வறட்டுப் பிடிவாதம், விதண்டாவாதம் என ஈகோவை திருப்திசெய்ய வீண் சவடால் செய்வதாலேயே பிரச்சனைகள் பெரிதாகின்றன. முடிவற்று நம்மை அலைக்கழிக்கின்றன.

இருந்தநிலை அறியீர் -
நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கைக்கு அடிப்படையானது என்ன என்பது அறியோம். இடமறியீர் - நாம் போய்ச் சேரவேண்டிய இடம் யாது என்பது அறியோம். இது என்னடா, போகவேண்டிய இடம் தெரியாதா என்று நினைக்கலாம். அது இறைவனது திருவடி என்பதில் சந்தேகமில்லாமல் இருந்தாலும் எந்த ஞானவழியில் சென்றால் அதை அடையாலாம் என்று அறிய முற்பட மாட்டோம். முயற்சி அற்ற நிலையில் போகவேண்டிய இடமும், பற்ற வேண்டிய தடமும் மறந்து இகமே பரமென மாயையில் வீழ்ந்து காலத்துக்கும் பிடிப்பின்றி அலைவோம்.

இவ்வுடம்பை யெடுத்த கணக்கறியீர் - நாம் யார் என்று தொடங்கி ஏன் இந்த பிரபஞ்சத்தில் இந்த உடலில் நாம் இருக்கின்றோம் என்ற இறைவனின் கணக்கையாவது அறிவோமா? அல்லது அறியத்தான் முயல்வோமா? மாட்டோம்.

வழக்கறியீர் - ஒரு வழக்கு என்று வந்தால் அத்தியாவசியமானவை: நீதியும், தர்மமும், நேர்மையும், நியாயமும், கருணையும், அஹிம்சையும், மன்னிக்கும் குணமும்: இவற்றில் ஒன்றாவது அரியதான மானிடப்பிறவி பெற்ற நாம் அறிவோமா? மாறாய் குரோதமும், கோபமும், கர்வமும், வன்முறையும், வஞ்சனையுமே அறிவோம்.


//அம்பலத்தே மாயைக் கலக்கமற நடிக்கின்ற துலக்கமறி வீரோ?//


இப்படி நம் பிறப்பிற்கும், வாழ்விற்கும், உய்விற்கும் அடிப்படையான ஒன்றையுமே அறியாத நாம், மாயை என்னும் திரைவிலகாமல் சிற்சபையில் பிரபஞ்சமும் மயங்க ஆடுகின்ற நாயகனின் ஆட்டத்தின் தன்மையை, அதன் அருமையை, அதன் கம்பீரத்தை, அதன் முழுமையை: அவன் ஈடற்ற விளையாட்டை அறியவும் முடியுமோ?

அதிமுக்கியமான இறைவனை நாடும் வழியை விட்டு எதை தேடுகிறோம்? எதில் திளைக்கிறோம்?


//பிணக்கறிவீர் புரட்டறிவீர் பிழைசெயவே யறிவீர்//


பிணக்கறிவீர்
- சண்டை சச்சரவு செய்ய முழுவதும் அறிவோம்.

புரட்டறிவீர் - பொய், புரட்டு, சூது, ஏமாற்றுவித்தைகளை கற்றுத் தேர்ந்தோம். பிழைசெயவே அறிவீர் - நல்லது எது உகந்தது எது உய்விக்கும் வழியெது எனத் தெரிந்தும் முன்னோர்வழி படித்தும்; அறிந்த நல்வழியை முற்றிலும் துறந்து, அவ்வழிக்கு எதிர்மறையாக எது பிழையானதோ எது பாவமோ அதைச் செய்வதையே தொழிலாய் அறிந்தவர்கள் நாம்.

இவையெல்லாவற்றையும் விட நாம் நன்கு அறிந்தது எது?


//பேருணவைப் பெருவயிற்றுப் பிலத்திலிட அறிவீர் மணக்கறியே
பிணக்கறியே வறுப்பேபேர்ப் பொரிப்பே வடைக்குழம்பே சாறேவென் றடைக்க அறிவீரே//




பெரும் கொள்திறன்கொண்ட வயிற்றிற்கு மூச்சுமுட்ட உணவிட அறிவோம். ஊன்கறியும், மரக்கறியும் அதை வகைவகையாய் பொரித்தும் வறுத்தும் வாட்டியும் வதக்கியும் சாறெடுத்தும் வாயில் மூச்சுமுட்ட முட்ட அடைக்க நன்றாய் அறிவோம்.

இந்த அரியவாய்ப்பான மனித்தப்பிறவியிலும்; அடுத்தவேளை உணவிற்கும், பொழுதுபோக சூதும், பொருளீட்ட பொய்யும் போரும் எனச் செய்துவந்தால் அண்டமெங்கும் அதிர ஆடும் அம்பலத்தரசனின் விளையாட்டைப் புரிந்து அவன் கழல்நாடி அவனை அடையும் பிறவிதான் பின்னெப்போது என்று சற்றே கடுமையாக நம்மிடம் கேட்கிறார் அடிகளார்.