பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே!
-இராமலிங்க அடிகளார்
பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
தந்தை என்ற சொந்தத்தை விட தாய்க்கு இன்னும் ஒருபடி அதிக இடமுண்டு நம் வாழ்வில். ஏனென்றால் சுமந்து பெற்று, சீராட்டி வளர்த்தவள் அவள். அதனாலேயே, தன் தாயை அவமதித்தவன், அவளுக்கு துரோகம் செய்தவன் என்று தீயவை செய்து தாய்ச் சாபம் பெற்றவன் இவ்வுலகில் நல்வாழ்க்கையும், மறுவுலகில் முக்தியும் அடையவே முடியாது என்று நம் பெரியோர்கள் மிகக் கடுமையான தண்டனையைப் பற்றி எச்சரித்திருக்கிறார்கள் (மகவு என்றால் குழந்தை பொருள் வரும். எனக்கென்னமோ மகன் என்றே அர்த்தம் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் பெற்றோருக்கு ஐம்பது வயது ஆண்மகனும் இன்னமும் குழந்தைதானே?). ஆனால், இம்மாதிரி தண்டனைகளுக்கு அஞ்சாமல் கூட தாயை மறப்பானெனினும்...
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
முன்சொன்னதாவது நடக்கக்கூடிய ஒன்றானாலும், பெற்ற பிள்ளையை என்றாவது தாய் மறப்பாளா? மறக்கத்தான் முடியுமா? எப்பேர்ப்பட்ட கொடிய குணமுடைய பெண்மணிக்கும் தான் ஈன்ற பிள்ளையெனும் பொழுது, கருணை வரத்தான் செய்யும். அதனாலேயே முன்னால் கூறிய உதாரணம் நடப்பதும் அரிது. ஏனென்றால் ஒரு தாய் தன் பிள்ளையை, அவன் எவ்வளவு கொடுரமானவனாக இருந்தாலும், தனக்கு துன்பத்தையே இழைத்தாலும் சபிக்காமல் மன்னிக்கவே விரும்புவாள். ஆனாலும் இந்த மிகைப்படுத்தப்பட்ட உதாரணத்தை அடிகளார் பயன்படுத்துகிறார்.
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
இந்த உடலும் உயிரும் சக்தியும் சிவமும் மாதிரி. திருவிளையாடல்ல சிவனும் பார்வதியும் நல்லா சண்டையெல்லாம் போட்டு, சிவாஜி தாம்தூம் இரத்தச் சிவப்பு கண்களோட ஆட்டமும் போட்டு; பாம்பு, நெருப்பு ராக்கெட்லாம் விட்டு.. கடசியா சமாதானமாப் போவாங்களே. 'சக்தியில்லையேல் சிவமில்லை. சிவமில்லையேல் சக்தியில்லை'. அந்த மாதிரி இந்த நம் உயிராகிய ஆத்மா என்பது உடலாகிய மெய்யிலிருந்து பிரிந்து இந்த மண்ணுலகில் வாழமுடியாது. அதேபோல், மெய்யாகிய உடலும் உயிராகிய ஆத்மா இல்லாவிட்டால் வெறும் பிணம் தான். இப்படி இரண்டும் ஒருவர்கொருவர் இல்லாமல் இருக்க முடியாது. அப்போது இரண்டில் ஒன்று மற்றொன்றை மறப்பது என்பது சாத்தியமா? மறந்தாலும், இழப்பு இருவருக்கும் தானே.
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
ஒரு கலையைக் கற்பது என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம்? ஜாலியா கத்துகிட்டா பத்து பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து பயின்று வந்தால் சாதாரண கலைஞனாகலாம். அவங்களால எளிதா மறந்துட முடியும். நானே அதுக்கு நல்ல உதாரணம். :)
ஆனா அதிலேயே மூழ்கி, வழி தவறாமல் கடுமையாய் உழைத்தால் தான் ஒரு கலைஞனாகலாம். அத்தகைய ஒரு கலைஞன், உதாரணத்துக்கு எம்.எஸ் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோமே. ஐம்பது ஆண்டுகள் உயிரைக் கொடுத்து உழைத்துக் கற்ற கலையை திடிரென்று ஒரு நாள் மறக்க முடியுமா? மறக்க நினைத்தாலும் தான் முடியுமா? ஏனென்றால் நம் இரத்தத்திலேயே ஊறிவிட்டிருக்குமல்லவா? இதில் கலை என்பது சாஸ்திரம், அறிவியல் என்னவேனா வச்சுக்கலாம். ஆனாலும், அந்த மாதிரி பலவாண்டுகள் கற்ற கலையை ஒரு கலைஞன் மறந்தாலும்...
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நம் உடலில் நடக்கும் பல விஷயங்களை நாம் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தலாம். ஆனால் மிகவும் conscious ஆக முயற்சி எடுத்து செய்யவேண்டும். மேலும், அவற்றை வீம்புக்காக தீவிரமாய் நிறுத்துவதால் பாதிப்புகளே உண்டாகும். மூச்சு, இதயத்துடிப்பு என்ற வரிசையில் கண் இமைப்பதும் வரும். நாம் நினைக்காமலேயே நம் கண்கள் தாமாகவே இமைகளை மூடி திறப்பதன் மூலம் காற்றிலுள்ள தூசு போன்றவை நம் கண்களை உறுத்தாமல் காத்துக்கொள்கிறது. இரண்டு நிமிடம் இமைக்காமல் இருக்க முயன்று பாருங்கள். உடனே கண்ணீர் வரும். அதுவும் தற்காப்பு முயற்சியே. ப்ளஷ் செய்வது போல நம் கண்ணீர் சுரப்பிகள் வேலை செய்வதன் பயனே கண்ணீர். இது மாதிரி, கண்கள் இமைப்பது என்பது அக்கண்களின் பாதுகாப்பிற்கு இன்றியமையாத ஒன்று. அதைச் செய்ய கண்கள் மறந்தாலும்..
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
முனிவர்கள், கடவுளர்கள், தேவர்கள் போன்றவர்களை நற்றவத்தவர் என்கிறோம். ஏன் கடவுளர்கள்? பிரம்மா முதலிய பிற கடவுள்களும், இந்திராதி தேவர்களும் கூட பரம்பொருளை நோக்கி பல தவங்கள் செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அம்மாதிரி பெரும் தவவலிமை உடையோரின் நெஞ்சத்தின், ஆத்மாவின் உள்ளே ஓங்கிஉயர நின்று ஒளிதரும்..
நமச்சிவாயத்தை நான்மறவேனே!
மேற்கூறிய கொடுரமான, மிகைப்படுத்தப்பட்ட செயல்கள் எல்லாம் இயற்கையாய் நடந்தாலும், நமச்சிவாய மந்திரத்தை நான் என்றென்றும் மறவாமல் ஜபித்துக் கொண்டிருப்பேனே!
---
என்னடா ஆரமிச்சாலும் ஆரமிச்சான், வரிசையா போட்டுத்தாக்கறானேன்னு நினைக்கவேணாம். இன்னும் ஒரு வாரத்துக்கு வேலை கம்மி. அதான்... அதுக்கப்புறம் எல்லாம் சரியாயிடும். பயப்படாதீங்க.
Monday, January 30, 2006
Subscribe to:
Post Comments (Atom)
40 comments:
இப்போதாங்க, நம்ம சஞ்சய் பாடி கேட்டேன். உடனே உங்க பதிவு. 7-வது வரி அவ்வளவு சரியா புரியலையேன்னு நினைச்சேன். இப்போ புரியுதுங்க. ரொம்ப நன்றி.
மிக எளிமையான அருமையான பாடல்.
நீங்கள் இந்தப் பாடலை இங்கே இடவில்லை என்றால், நான் தேடிப்போய் படித்துக்கொண்டிருப்பேனா என்று தெரியாது. பெரும்பாலும் இல்லை. இப்போதைக்கு இல்லை. அது தெரியும். :)
பலவிதமான பாடல்களை, செய்யுள்களை, விருத்தங்களை, எல்லாவற்றையும் ஓரிடத்தில் கொடுப்பது நல்ல விதயம்.
இங்க உண்மையையும் சொல்லிரணும்: நான் நீங்க பாடலுக்கு அப்புறம் எழுதி இருப்பதைப் படிக்கவில்லை. just want to keep my attention on this wonderful paadal and the effect on me.
Once again thanks for the blog Ramanthan.
-Mathy
நன்றி கொத்தனாரே,
அந்தப் பாட்டை எங்கேயாவது வலையேற்றி இங்கே சுட்டி கொடுக்கலாமே.. சஞ்சய் இதுக்கெல்லாம் நம்ம மாதிரி சின்னப்பசங்க கிட்ட கோச்சுக்க மாட்டார்னு நினைக்கிறேன்.
நன்றி மதி,
//நான் நீங்க பாடலுக்கு அப்புறம் எழுதி இருப்பதைப் படிக்கவில்லை//
இப்படி சொல்லிட்டு போனா எப்படி?? :))
Ramanathan,
பாட்டைக்கொஞ்சம் அசை போட்டுவிட்டு, நீங்கள் எழுதி இருப்பதையும் படிப்பமேன்னு வந்தேன். நன்றாக எழுதி இருக்கீங்க. பள்ளிக்கூடத்து தமிழ் வகுப்பு நினைவுக்கு வருது. :)
தொடர்ந்து எழுதுங்க.
-மதி
மதி,
//பள்ளிக்கூடத்து தமிழ் வகுப்பு நினைவுக்கு வருது//
இத.. இத.. இந்த எபெக்ட்ட தான் எதிர்பார்த்தேன். வர்க் அவுட் ஆனதுல சந்தோஷமே! :))
நன்றி
//திருன்னா செல்வம்னு தெரிஞ்சுருக்கும் இல்லியா?//
ஓ, அப்ப நம்ம பேருக்கு முன்னாடி திரு/திருமதின்னு பொடறது இந்த "திரு"தானா?
சமுத்ரா,
நான் கேள்விப்பட்டவரைக்கும் திரு என்றால் மஹாலக்ஷ்மியைத்தான் பிரதானமாய் குறிக்கும். அவளைக் குறிப்பதாலேயே செல்வம் என்றும் பொருள் கொள்ளலாம்.
திரு என்பதற்கு புனிதம் வாய்ந்த அல்லது முதன்மைவாய்ந்த ன்னும் என்றும் பொருள்வருமென்றும் தமிழ் பாடத்தில் படிச்சதும் நினைவுக்கு வருது. அதனாலேயே தமிழ்நாட்டில் பல ஊர்களுக்கு திரு என்ற பட்டம் ஒட்டியிருக்கு. திருநின்றவூர், திருவாரூர் அப்படீன்னு. இதற்கு சூப்பு, ஜிரா, ஞானவெட்டியான் ஐயா இன்னும் விளக்கமா சொல்ல முடியும்னு நினைக்கிறேன்.
அற்புதம். அற்புதம். மிகவும் அற்புதம். படித்து ரசித்து மகிழ்ந்தேன். இவ்வளவு எளிமையாகச் சொல்வதும் ஒரு கலைதான். தொடரட்டும் இது.
திரு என்றாலே செல்வம் என்று மட்டும் பொருள் அல்ல. செல்வம் என்ற பொருளில் வருகையில் அது திருமகளையும் குறிக்கும்.
அதே நேரத்தில் அது உயர்வு செய்வதுமானது. திரு ஆரூரில் இருக்கும் திரு பொருட் செல்வமல்ல. அருட் செல்வம். திருச்செந்தூரிலும் அப்படியே.
அதே நேரத்தில் திருத்துழாய் என்று வருகையில் அருளும் போய் பொருளும் போய் பெருமை வரும். இன்னும் நிறைய சொல்லலாம்.
மிக்க நன்றி ஜிரா...
திரு வுக்கான விளக்கத்திற்கும்.
திரு என்பது செல்வத்தையும் அதனாலேயே திருமகளையும் என்றிருந்திருக்க வேண்டும் எனது முந்தைய பின்னூட்டத்தில். திருத்தியமைக்கு நன்றி.
சூப்பு வந்து புது கதை சொல்வார். அதையும் தெரிந்து கொள்ள ஆவல்.
நன்றி ராமனாதன்.
சில மாதங்களுக்கு முன் சந்திரவதனா அவர்கள் பதிவில் இந்த பாடலைப்பற்றி கேட்டிருந்தேன். 'சிகரம்' படத்தில் இந்த பாடலுக்கு SPB மிக எளிமையாக இசையமைத்திருப்பார். பாலலின் சுட்டியை யாரேலும் தந்தால் நன்றியுடையவனாவேன்.
.:டைனோ:.
நன்றி .:டைனோ:.,
பொதுவாகவே இங்கே இடப்படும் பாடல்களுக்கு இணையத்தில் யாரெனும் சுட்டி கொடுத்தால் இன்னும் சுவையாக இருக்குமென்று நினைக்கிறேன். இணையத்தில் இல்லையெனினும், தம்மிடம் இருக்குமாயின் அதை வலையேற்றி சுட்டி தந்தால் இன்னமும் நன்றாக இருக்கும்.
ராமநாதன்,
உங்கள் ஆசைப்படி. கேட்டு மகிழுங்கள்.
http://rapidshare.de/files
/12205318/05_-_Petra_Thai.mp3.html
நல்ல முயற்சி, மனம் திறந்து பாராட்டுகிறேன்..
அன்புடன்,
இராம்ஸ்
சிகரம் படத்திலுள்ள பாடலையும் கேட்டேன். வரிகள் மாறி வந்துள்ளன. ஷைலஜா போலி குரலில் பாடி நல்லாவே இல்லை. நாட்டைதானே?
இந்த பாடலை இங்கு கேட்கலாம்.
http://www.raaga.com/channels/tamil/movie/T0000259.html
உங்கள் விருப்பப்படியே...
http://rapidshare.de/files/12205318/05_-_Petra_Thai.mp3.html
இராம்ஸ்,
மிக்க நன்றி
கொத்தனாரே,
சுட்டிகளுக்கு நன்றி.
பெரும்பாலும் கர்நாடக இசைப் பாடல்களை திரையிசை பாடகர்கள் சொதப்பிவிடுகிறார்கள். வெகு சில எக்ஸெப்ஷன்களே இதற்கு. அந்தப் பாடலை நான் கேட்டதில்லையெனினும் சமீபத்திய உதாரணமாக 'ஆட்டோக்ராப்பில்' படுகொலை செய்யப்பட்ட 'ஜகதோதாரணா' நினைவுக்கு வருது. MS wud have turned in her grave! :(
The reverse is also usually true என்று சொல்லவிட்டுவிட்டேன்.
நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன கிருஷ்ணாவோ, சஞ்சயாலேயோ பாடமுடியாதில்லியா?
இது ஒரு டிஸ்கி பின்னூட்டம்
இந்தப் பாடலை நான் மறைந்த எம்.எஸ்,சுப்புலட்சுமி (HMV audio) பாடி கேட்டிருக்கிறேன். மிக உருக்கமாக இருக்கும். அதை இப்போது உங்கள் மொழிபெயர்ப்பில் படிக்கும்போது மிகவும் நன்றாக இருக்கிறது. நன்றி.
இராமனாதன்:
இதன் மேலான பொருள் நீங்கள் சொன்னது. இவ்வரிகளுக்கு இன்னும் வேறு ஒரு பொருள் இருக்கிறது. அதை குமரன் வந்து சொல்வார் என்று நினைக்கிறேன்:)
பச்சோந்தி,
நன்றி
தேன் துளி,
//அதை குமரன் வந்து சொல்வார் என்று நினைக்கிறேன்:)
//
அட.. நீங்க வேற.. அவர் வந்து சொல்றதுக்குள்ள விடிஞ்சிடும். நீங்களே என்ன விளக்கம்னு சொல்லிடுங்க.
Aruna Sairam has also rendered this virutham before the song "Thanthai Thai Irunthaal"
See this post
http://nadopasana.blogspot.com/2006/02/blog-post.html
ஆணவம் கண்மம் மாயையில் சிக்கி உழலும் பிள்ளைகள் அன்னையை சிறு குழந்தையை போல எந்நேரமும் நினைத்து கொண்டிருக்க முடியாது. அதேபோல அன்னையும் சில சமயங்களில் பில்ளை நினைப்பு இல்லாமல் இருக்க கூடும் (வயதுக்கேற்ற முதுமையில் மனம் அடையாளங்களை இழக்க கூடும்), இறப்பு வந்தால் இமைகள் மூட மறக்கும் , (சில ச்மயம் கவலைகள் அழுத்தும் போது இமைகள் மூட மறக்கும் உறக்கம் தொலைந்து போகும்)ஆனால் எது எப்படி இருந்தாலும் "நான்" எனப்படும் என் உயிர்/ ஆன்மா உன்னை நினைப்பதை மறவாது. இதை இற்றை இப்பிறப்பில் மட்டும் அல்லாது பிறவியே இல்லாமல் கடைத்தேறினாலும் நான் உன்னை மறாவேன் என்ரும் பொருள் கொள்ளலாம்.
நாதோபாஸனா,
சுட்டிக்கு நன்றி.
தேன் துளி,
விரிவான விளக்கத்துக்கு நன்றி.
இதேபோல இனிவரும் பாடல்களுக்கும் உங்களுக்கு வேறு விளக்கங்களோ, திருத்தங்களோ தோன்றினால் அதையும் கையோடு இட்டுவிடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
தேன்துளி,
உங்கள் விளக்கம் வித்தியாசமான ஒரு கோணத்தை காட்டியது. நன்றி.
`பெற்ற தாயை பிள்ளை மறப்பது' இப்போது ரொம்ப சர்வ சாதாரணமா நடக்குது. அப்படி ஹோமில் விடப்பட்ட தாயின் இறுதிச் சடங்கில் பிள்ளைகளின் பங்எற்பை இப்போது பார்த்துவிட்டு வந்து தான் உங்கள் பதிவு பார்க்கிறேன்
இராமனாதன்: மறக்கமுடியாது பதிவையும் இராமனாதனையும்
அத்தை,
//இப்போது ரொம்ப சர்வ சாதாரணமா நடக்குது//
இதைப் பத்தி பதிவுலேயே எழுதலாம்னு நினச்சேன். அப்புறம் அது திசைதிருப்பிவிடுமோன்னு நினச்சு விட்டுட்டேன்.
இதுவும் நடக்குது பெற்ற குழந்தையை தூக்கி வீசும் தாய்களும் நடக்குது. ஆனா ஒன்னு, கடவுள் வேண்டாம், அவங்க மனசாட்சியே வாழ்க்கை புல்லா படுத்திஎடுத்துவிடும். அப்புறம் எங்கே நிம்மதின்னு பாடிக்க வேண்டியதுதான்.
என்னார்,
மிக்க நன்றி. வள்ளலாரை மறக்கமுடியாதுன்னு எழுதியிருந்தால் இன்னும் சந்தோஷப் பட்டுருப்பேன்.
கடைசியாய் வருவதிலும் ஒரு நன்மை இருக்கிறது. ஒருத்தரோட விளக்கத்தோட நிற்காம இத்தனை பேர் அற்புதமான விளக்கங்கள் சொல்லியிருக்காங்களே. இன்னும் ஞானவெட்டியான் ஐயா வரலை போலிருக்கே. அவரும் வந்து போன பின்னாடி சொல்லுங்க இராம்ஸ். நான் வந்து பார்க்கிறேன். அது வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது...குமரன் என்ற பொடியன்.
எளிமையான இனிமையான பாடல். அருமையான விளக்கங்கள். காலைப் பொழுது இனிதாக கழிந்தது.
அன்பு குமரன்,
எம்மையும் இழுத்துவிட்டுப் பார்க்க உமக்கு ஆசை போலும். இருப்பினும், "நமசிவய" பற்றி எமது கருத்தறிய, சுட்டியைச் சொடுக்குங்கள்.
http://thiruvaasakam.blogspot.com/2005/11/1.html
தேன் துளியின் கருத்துகள்:
//ஆணவம் கண்மம் மாயையில் சிக்கி உழலும் பிள்ளைகள் அன்னையை சிறு குழந்தையை போல எந்நேரமும் நினைத்து கொண்டிருக்க முடியாது. அதேபோல அன்னையும் சில சமயங்களில் பிள்ளை நினைப்பு இல்லாமல் இருக்க கூடும் (வயதுக்கேற்ற முதுமையில் மனம் அடையாளங்களை இழக்க கூடும்), இறப்பு வந்தால் இமைகள் மூட மறக்கும் , (சில சமயம் கவலைகள் அழுத்தும் போது இமைகள் மூட மறக்கும்; உறக்கம் தொலைந்து போகும்)ஆனால் எது எப்படி இருந்தாலும் "நான்" எனப்படும் என் உயிர்/ ஆன்மா உன்னை நினைப்பதை மறவாது. இதை இற்றை இப்பிறப்பில் மட்டும் அல்லாது, பிறவியே இல்லாமல் கடைத்தேறினாலும், நான் உன்னை மறவேன் என்றும் பொருள் கொள்ளலாம்.//
இது உண்மையே!
குமரன்,
கடைசியில வந்தா அடிஷனல் எண்ணங்களுக்கு டிஸ்கவுண்ட்னு நினச்சுட்டீங்களா?
ஐயாவும் வந்துட்டுப் போயாச்சு. நீங்க தான் பாக்கி!
மணியன்,
மிக்க நன்றி.
ஐயா,
வருகைக்கும், நமச்சிவாய மந்திரத்தின் மேன்மையை விளக்கும் சுட்டிக்கு நன்றி.
இராமநாதன், கடைசியில் வருவதில் நிச்சயம் அடிசனல் எண்ணங்களுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. :-) முந்திரிக் கொட்டை மாதிரி எல்லாத்துக்குமே நாமளே அடிசனல் எண்ணங்களைச் சொல்லிவிட்டால் மற்றவர்கள் சொல்லும் அருமையான விளக்கங்களை இழந்துவிடுகிறோம். பாருங்கள். நான் வந்து சொல்லியிருந்தால் தேன் துளி போல் சுருக்கமாக ஆனால் இவ்வளவு அழகாக ஆழமாகச் சொல்லியிருக்க மாட்டேன். எல்லாமே விரிவாய்ச் சொல்லியே பழக்கமாகிவிட்டது. தேன் துளி ரொம்ப அழகாய்ச் சொல்லியிருக்கிறார்கள்.
இன்னொரு காரணமும் உண்டு அடிசனல் எண்ணங்களைச் சொல்லாததற்கு. நீங்களே எல்லா வரிகளுக்கும் அருமையாகவும் தெளிவாகவும் பொருள் சொல்லிவிட்டீர்கள்.
பாடல்களுக்குச் சுட்டிகள் தந்தவர்களுக்கும் நன்றி. கேட்டு மகிழ்ந்தேன்.
குமரன்,
நன்றி
Post a Comment