அமரும் பதிகே ளகமா மெனுமிப்
பிமரங் கெட்மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே. (8)
//அமரும் பதிகேள் அகம் ஆம் எனும் இப்பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா//
அமரும் பதி - நாம் இருக்கற ஊர். கேள் னா நம் சொந்தங்கள். யாதும் ஊரே நியாபகம் வருதில்லையா? அகமாம் - அகம்+ஆம் - அகம் கறது இங்க குறிக்கறது நம் மனத்தை, நாம் என்னும் எண்ணத்தை. இப்போ மேல படிக்கறதுக்கு முன்னாடி ஒரு சின்ன விஷயம் பண்ணிப்பாருங்க. இப்போதைக்கு நீங்க எங்க இருக்கீங்க, என்ன சம்பாதிக்கறீங்க, ஸ்டேட்டஸ் இன்னபிற, எவ்ளோ வசதி வாய்ப்புகளோட இருக்கீங்கன்னெல்லாம் நினச்சு பாருங்க ஒரு நிமிஷம். சுகமா இருக்கா? எல்லாருக்கும் சுகமா இருக்கறதுதானே.. தப்பில்லை. உங்க மொபைல் போனிலோ, கணினியோ .. அதுல காலெண்டரத் தொறங்க. கொஞ்சம் டேட் மாத்துங்க. என்னோட விண்டோஸ் XP-ல 2099 ஆம் வருஷம் வரை இருக்கு. 2099-ல நான் இருக்கப்போறேனா? இல்லை என்னையப் பத்தி யாராவதுதான் ஒருநொடி யோசிக்க போறாங்களா? இப்போ நான் பெருமையா ஸொஸைட்டில இதுவாக்கும்னு தானே நாமெல்லாம் நினச்சுகிட்டிருக்கோம். அதுவே 2099 வேண்டாம், 2050 வரைக்குமாவது தாங்குமா? நம்ம பதவியும் பணமும் ஆடம்பரமும்? எதுக்கு காலெண்டர் பாக்கச் சொன்னேன்னா, வெறும்ன நினச்சு பாத்தா பெரிய விஷயமா இது தெரியது. அதுவே இதே ஏப்ரல் 17 ஆம் தேதின்னு ஒண்ணு 2099 லேயும் வரப்போது. அப்போ இப்ப நம்ம கிட்ட இருந்ததெல்லாம் எங்க போச்சு? நாம தான் எங்க போனோம்? இல்லை, நம்மகிட்ட இப்போ இருக்கறதெல்லாம் பொய்யா? னு நினைக்கத் தோணும்.
இது எதுவுமே நிரந்தரமில்லை, வெறும் மாயைங்கறதுதான் உண்மை. அதப் புரிஞ்சுக்கிட்டாலே இறைவனை பாதியடைஞ்சா மாதிரிதான். இதத்தான் என் ஊர், என் சொந்தம், நான் என்று எனக்குஇருக்கும் பிரமைகள் எல்லாம் முற்றிலும் கெட உண்மையான பொருளை, எது நிரந்தரமானதென்று என்னிடம் பேசியவான்னு முருகனைப் பாடறாரு இங்கே.
//குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பொரு தானவ நாசகனே//
அடுத்த வரிக்கு வருவோம் இங்கே. இதில் மூன்று வித adjectives உபயோகப்படுத்தறாரு. குமரன். இதுக்கு பொருள் தேவையில்லை. கிரிராச குமாரி - நம்ம பர்வத ராஜனோட பொண்ணான பார்வதி. அவங்களோட மகனே.
சமரம் பொரு தானவ நாசகனே - போரிட வந்த அசுரர்களை அழித்தவனே.
சரி.. ஏன் இப்படி மூன்று உருவங்கள் கொடுக்கிறார் அருணகிரி? எது மெய்ப்பொருள் என்று அசரீரியாய் கந்தன் பேசவில்லையே. உங்களுக்கு எப்படியோ? அசரீரியெல்லாம் இந்தக்காலத்துல கேட்டா, யாராவது லவுட் ஸ்பீக்கர் வச்சு விளையாடறாங்களோன்னு நினச்சுட்டு போயிடுவேன். அப்படியெல்லாம் PA வில் அறிவிக்காமல், இங்க பாருங்க, கந்தன் என்ன செய்யறான்னா, வேலை மெனக்கெட்டு அருணகிரியும் உண்மையத் தெரிஞ்சுக்கணுமேங்கற ஆசையில் அவரும் உணரக்கூடிய ஒரு சிறு உருவம் எடுத்துகிட்டு நேர்ல வந்து, எது நிரந்தரம் எது உண்மையான பொருள்னு சொல்லிட்டு போயிருக்கான். அவருக்குச் சொன்னவன், நமக்கும் சொல்வான். அவரைப் போலவே நிதமும் அவன் தாள் பணிந்தால்.
----
பார்வதியின் மகனே! குமரனே! போரிடவந்த சூரரை அழித்தவனே! என் ஊர், என் சுற்றம், நான் என்பது மாதிரியான உலக மாயைகள் என்னைவிட்டு அகன்றொழிந்திட மெய்ப்பொருளை பேசியவா!
--------
கொஞ்சம் நாட்களாக வேலை காரணமாக முன்பு போல் பதிய முடிவதில்லை. பொதுப்பாட்டு மெதுப்பாட்டாய் ஆனதுக்கு அதான் காரணம். கூடிய சீக்கிரம் திரும்ப பார்முக்கு வருவேன்னு நம்பறேன். பாப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
இராம்ஸ். வழக்கம் போல் எளிமையான பொருள் சொல்லியிருக்கிறீர்கள். அடிக்கடி கைத்தொலைப்பேசி நாட்காட்டியைப் பார்ப்பீர்களோ? அருமையான கருத்து சொல்லியிருக்கீங்க? :-)
அகம் என்பதற்கு இது வரை வீடு என்ற பொருள் சொல்லித் தான் படித்திருக்கிறேன். அகங்காரம் என்னும் பொருளும் பொருத்தமானது தான். :-)
//இது எதுவுமே நிரந்தரமில்லை, வெறும் மாயைங்கறதுதான் உண்மை.
சரியா சொன்னீங்க! இந்த மாயையில தானே ஒட்டு மொத்த உலகமும் சுருண்டுகிடக்கு!
என்ன நம்ம பக்கம் வரதில்லை!
அதாவது, நம்ம வாழ்க்கை ஒரு மெகா சீரியல் மாதிரி, இதில வர அழுகை, சிரிப்பு எல்லாமே நிஜம் இல்லை, நிரந்தரம் இல்லை. ஆனாலும் நாம் இதுதான் நிஜம்ன்னு நினைச்சுக்கறோம். இது மாயை அப்படிங்கற அறிவைக் குடுடாப்பான்னு கேட்கறார். சரிதானே?
ராமகிருஷ்ண மடம் வெளியீட்டில், 'அஹம்' என்பதற்கு, 'நான்' என்ற மயக்க அறிவு என்று போட்டிருக்கிறது!
"சொல்லற; சும்மா இரு!" என்ற முருகனின் உபதேசம் , இதுவரை 'யான், எனது' என்று மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த அருணகிரியாருக்கு மிக வியப்பாகவும், விந்தையாகவும் உள்ளது!
வள்ளுவன் கூட இந்தக் கருத்தை,
" யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்." [35 - 346]
என்று சொல்லியிருக்கிறார்.
வாங்க இராமநாதன்....அடுத்த அநுபூதிச் செய்யுளா...
நல்ல விளக்கம். அதுவும் எளிமையாக. நன்று.
சில சிறிய மாற்றங்கள்...நியாபகம் என்பதல்ல...ஞாபகம் என்பதே சரி.
பொதுப்பாட்டு மெதுப்பாட்டு ஆனாலும் புதுப்பாட்டாகவே புதுப்புது அர்த்தங்கள் மன்னிக்கவும் பொருள்(குமரன் கோவித்துக்கொள்ளப்போகிறார்)தரும் பாட்டாக இருக்கிறது.மாயயைக்கு நல்ல என்போன்ற மரமண்டைக்கும் புரியும்படி இருந்தது. நன்றி. தி.ரா.ச
ராமனாதன் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். நாம் இருப்பது பொய்யா அல்லது போகப்போவது பொய்யா/ இதில் ஏதாவது ஒன்று உண்மை என்றால் அது எது. தி ரா.ச
நல்ல எளிமையான உதாரணத்துடன் கூடிய விளக்கம்.
//அதுவே இதே ஏப்ரல் 17 ஆம் தேதின்னு ஒண்ணு 2099 லேயும் வரப்போது. அப்போ இப்ப நம்ம கிட்ட இருந்ததெல்லாம் எங்க போச்சு? நாம தான் எங்க போனோம்? இல்லை, நம்மகிட்ட இப்போ இருக்கறதெல்லாம் பொய்யா? னு நினைக்கத் தோணும்.//
இப்போ நம்மகிட்ட இருக்கும் எதுவும் 2099 ல நமக்கு உதவப்போறதில்லை. நம் உடலும், புலன்களும் நல்ல நிலையில் இருக்கும்போதே அவன் நாமத்தை சொல்லி , அவன் தாள் வணங்கி நற்செயல்கள் செய்வோம். அது ஒன்றுதான் 2099ஓ அதற்குப் பிறகுமோ நம்முடன் வரக்கூடியது. அதுதான் போன பாட்டிலேயே
"கெடுவாய் மனனே கதிகேள் கரவாதிடுவாய்" என்று சொல்லிவிட்டாரே.
உலக வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்ந்துகொண்டே அதைச் செய்ய முடியுமல்லவா?
மகாகவி பாரதியர் நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே பாடலுக்கு எழுதிய முன்னுரை :
(எல்லா சாஸ்திரங்களும் ஏறக்குறைய உண்மை தான். ஆனால், எல்லாருக்கும், எப்போதும், ஒரே சாஸ்திரம் ஒத்து வராது, சின்ன திருஷ்டாந்தம் சொல்லுகிறேன்:-)
ஒரு செல்வர், கிழவனார்; ஒரு வேளை ஆஹாரம் செய்து கொண்டு, லௌகிக விஷயங்களைத் தான் கவனியாமல், பிள்ளைகள் கையிலே கொடுத்துவிட்டு, நியம நிஷ்டைகள் ஜப தபங்களுடன் சுந்தர காண்டத்தையும் கடோபநிஷத்தையும்,
பாராயணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறாமலிருப்பதே மேலான வழியென்ற கொள்கை அந்தக் கிழவனாருக்குச் சரிப்பட்டு வரும்.
ஒரு 16 வயது ஏழைப்பிள்ளை; தகப்பனில்லை; வீட்டிலே தாயாருக்கும் தங்கைக்கும் தனக்குமாக எங்கேனும் போய் நாலு பணம் கொண்டு வந்தால்தான் அன்றன்று அடுப்பு மூட்டலாம். அவன் மேற்படி சுந்தர காண்ட வழியைப் போய்ப் பிடித்தால் நியாயமாகுமா?
'இந்த உலகமே பொய்' என்று நமது தேசத்தில் ஒரு சாஸ்திரம் வழங்கி வருகிறது. ஸந்யாஸிகள் அதை ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கட்டும். அதைப்பற்றி, இந்த நிமிஷம் எணக்கு வருத்தமில்லை. குடும்பத்தி லிருப்போருக்கு அந்த வார்த்தை பொருத்தமா? நடு வீட்டில் உச்சரிக்கலாமா? அவச்சொல் லன்றோ? நமக்குத் தந்தை வைத்து விட்டுப் போன வீடும் வயலும் பொய்யா? தங்கச் கெல்லாம் கண்ணீர் விட்டுக் கரைந்தாள்; நமது மகிழ்ச்சியின் போதெல்லாம் உடல் பூரித்தாள்; நமது குழந்தைகளை வளர்த்தாள்; அவள் பொய்யா? குழந்தைகளும் பொய்தானா? பெற்றவரிடம் கேட்கிறேன். குழந்தைகள் பொய்யா? நமது வீட்டில் வைத்துக் கும்பிடும் குலதெய்வம் பொய்யா?
வீடுகட்டிக் குடித்தனம் பண்ணுவோருக்கு மேற்படி சாஸ்திரம் பயன்படாது. நமக்கு இவ்வுலகத்தில் வேண்டியவை நீண்ட வயது, நோயில்லாமை, அறிவு, செல்வம் என்ற நான்கும். அவற்றைத் தரும்படி தத்தம் குலதெய்வங்களை மன்றாடிக் கேட்க வேண்டும். எல்லா தெய்வங்களும் ஒன்று. அறம்,பொருள்,−இன்பம் என்ற மூன்றிலும் தெய்வ ஒளி காணவேண்டும். தெய்வத்தின் ஒளி கண்டால் நான்காம் நிலையாகிய வீடு தானே கிடைக்கும்.)
--------------------------------------------------------------------------------
Jayashree, இந்த நிற்பதுவே நடப்பதுவே பாடலை என் 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' வலைப்பூவில் அலசியதைப் படித்திருக்கிறீர்களா?
http://nambharathi.blogspot.com/2005/11/1.html
http://nambharathi.blogspot.com/2005/11/2.html
http://nambharathi.blogspot.com/2005/11/54-1.html
புரிந்தது, புரியாதது, தெரிந்தது,தெரியாதது.அறிந்தது,அறியாதது உண்மை,பொய் எல்லாவற்றிற்கும் சரியாண பதில் கொடுத்தற்கு நன்றி திருமதி ஜெய்ச்ரி. தி ரா.ச
குமரன்,
இப்போதுதான் நிற்பதுவே நடப்பதுவே பாடலுக்கு உங்கள் விளக்கம் படித்தேன். மிகத் தெளிவாக அலசியிருக்கிறீர்கள்.உங்கள் கருத்துடன் 100% ஒத்துப்போகிறேன்.
தி.ரா.சா - உங்கள் கேள்விகளுக்கான சரியான பதில் அங்கே இருக்கிறது.இதுவரை படிக்கவில்லையானால் இப்போது படித்துப்பாருங்கள்.
குமரன்,
நன்றி. நாட்காட்டியை இதற்க்காகவேண்டி பார்க்க வேண்டாமா? :))
வெளிகண்டநாதர்,
வாங்க வாங்க. நன்றி!
//என்ன நம்ம பக்கம் வரதில்லை!//
மன்னிச்சுக்கோங்க. நான் சொன்னா எல்லாரும் சிரிக்கறாங்க. இருந்தாலும் அதானே உண்மை. கொஞ்ச நாளா வலைப்பக்கமே வரமுடியறதில்லை. வேலை அப்படியிருக்கு. :( அப்பப்போ வந்து எட்டி மட்டும் பார்த்துட்டுதான் போக முடியறது. யார் கண்ணு வச்சாங்களோ? :))
கொத்ஸு,
நான் நீட்டி முழக்கி எழுதறேன். நீங்க ஹேண்ட் புக் போடறீங்க. இதுவும் நல்லாதான் இருக்கு.
எஸ்.கே,
நன்றி. 'நான்' என்ற பொருள் இங்கே வீடு என்பதை நன்றாக பொருந்துவதாகத்தான் எனக்கும் தோன்றியது.
நன்றி ஜிரா,
ஞாபகமா? இனிமே திருத்திக்கறேன்.
தி.இரா.ச,
நன்றி.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்ங்கறா மாதிரி எக்குத்தப்பான கேள்வியெல்லாம் கேட்டா எப்படி? விடை தெரிஞ்சா சொல்ல மாட்டேனா? :) குமரன் பதிவப் பாருங்க.
ஜெயஸ்ரீ,
நன்றி.
நீங்க சொல்றது உண்மைதான்.
பாரதியாரின் முன்னுரையை இங்கே இட்டதுக்கு நன்றி. கர்மயோகம்னு கண்ணன் சொன்னதும் இதுதானே? எல்லாராலும் தவம், தானம் எல்லாம் செய்ய முடியுமா என்ன? முடிஞ்சதை செய். பலனை எதிர்ப்பார்க்காமல் முடிந்தவரை நல்லதைச் செய்னு சரியாதானே சொல்லிருக்காங்க.
குமரன்,
சுட்டிகளுக்கு நன்றி. நானும் முன்னாடி பாக்க விட்டுட்டேன். இப்போதான் பாத்தேன்.
தி.இரா.ச,
புரிஞ்சுதா? அப்பாடி, நான் தப்பிச்சேன் :))
Post a Comment