Wednesday, March 01, 2006

4. தளைபட் டழியத் தகுமோ?

வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந்
தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட் டெழுசூர் ருரமுங் கிரியுந்
தொளைபட் டுருவத் தொடுவே லவனே. (4)

அநுபூதிக்கு திருப்புகழ், அலங்காரம் இவற்றைவிடவும் சிறப்பு உண்டு. அநுபூதியை உபநிஷத்துகளில் ஒன்றென்றும் சொல்லுவோர் உண்டு. ஏனென்றால் சிக்கலில்லாத, எளிமையான பாக்களின் மூலம் மெய்ப்பொருள் தத்துவத்தையே வெறும் ஐம்பத்தியொரு பாக்களில் சொல்லியிருக்கிறார் அருணகிரி. இவை ஒரே சமயத்தில் ஒரு நூலாக எழுதப்பட்டதில்லை. மாறாக பல்வேறு காலகட்டங்களில் திரட்டப்பட்டவை இந்தப் பாடல்கள். சரி இந்த அருமையான பாடலுக்கும் பொருள் பார்ப்போமா?

//கிளைபட் டெழுசூ ருரமுங் கிரியுந் தொளைபட் டுருவத் தொடுவே லவனே//
முருகப் பெருமான் சூரபத்மனை கொன்ற கதை உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். ஒரு சின்ன recap பார்ப்போமா? சூரபத்மன் தோல்வியின் விளிம்பில் ஒரு மாமரத்தின் வடிவம் எடுத்தான். பல கிளைகள் விட்டு பரந்து வளர்ந்து மரத்தின் வடிவில் இருந்த சூரனையும்.. கிரியும் - இது க்ரௌஞ்சனைக் குறிக்கும். க்ரௌஞ்சன் என்பவன் சூரனின் தளபதிகளில் ஒருவன். அவன் மலை உருவத்தில் நின்றான். இந்த இரண்டு பேரையும் துளை விழும் அளவிற்கு வேலால் அடிக்கக்கூட வேண்டியிருக்கவில்லை. முருகனின் வேல் அவர்களின் மேல் பட்டவுடனேயே அவர்கள் அழிந்தார்கள்.

இப்படியும் எடுத்துக்கலாம். கிளைன்னா உறவுகள் னும் ஒரு பொருள் வரும். தாரகன், சிம்மமுகன் என்று இரு சகோதரர்களுடன் வந்த சூரபத்மனையும்..

கடைசியா.. இதுதான் இவ்வரிகளுக்கு உண்மையான பொருள். உறவுகளினால் வரும் சூரையும் (துன்பம்), ஆணவம் என்னும் நம்முள் வளர்ந்து நிற்கும் கிரியும் (மலை)யையும் அழிக்க ஞானமெனும் வேலை எறியவேண்டாம். தொட்டாலே போறும். எப்படி வேலால் தொடப்படுவது? அவனை நினைத்தாலே மட்டுமே அது சாத்தியம். அப்படிப்பட்ட வேலை உடைய வேலாயுதனே...

இப்போது புரிகிறதா? ஏன் அநுபூதியை உபநிஷத்துகளில் ஒன்றாக கருதுகிறோம் என்று. மேலோட்டமாக படிப்போருக்கும் பொருள் புரியும். அதுவும் நல்ல பொருள் தான். கொஞ்சம் படித்தோருக்கு இன்னும் தத்துவார்த்தமான பொருளும் உள்ளே அடங்கியிருக்கும். யாருக்கு என்ன லெவலோ அந்த அளவிலேயே, மெய்ப்பொருளை விளக்குபவர் அருணகிரிநாதர்.

//வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந் தளைபட் டழியத் தகுமோ தகுமோ//
இது ரொம்ப ஈஸி புரிஞ்சுக்கறதுக்கு.

வளைகள் நிறைய அணிந்த கைகளை உடைய மாது (மனைவி) மற்றும் மக்கள் - நம் குழந்தைகள். பெண்ணீயவாதிகள்லாம் அடிக்க வரதுக்கு முன்னாடி சொல்லிடறேன். இதே வரியை 'தாலிகட்டு கையுடை பதியும்'னு இதைப் படிக்கும் பெண்கள் மாத்திக்கலாம். முக்கியம் பெண்களோ, ஆண்களோ, குழந்தைகள் இல்லை. பந்தம், பாசம் போன்ற தளைகள் தான். இராகவன் சொன்னது போலவே அடிமைத்தளையை நினைவில் வைத்துக்கொள்வோம். பெண்களோ, குழந்தைகளோ, திருமணம் செய்வதோ பிரச்சனையா? திருமணம் தான் பிரச்சனைன்னா முருகனைப் பாடிய நம் தமிழ் முன்னோர்கள் அதை இன்னமும் சடங்காக வைத்திருப்பார்களா? க்ருஹஸ்தர்களுக்கென்று முக்கியமான இடமும் வடமொழியை முக்கியமாக உடைய சமயங்களிலும் சொல்லிருக்கிறார்கள். case in point: சீதையின் தந்தை சீரத்துவஜ ஜனகன்.

மேலும், வாரியாரின் சொற்படி இறைவன் நமக்கு ஆசிரியனாக இருக்கவே மீனாஷியை மணம் புரிந்தான். ஏன்? விரல்விட்டு எண்ணுவது குழந்தைகளுக்கு எளிது. அதனால் ஆசிரியரும் விரல்விட்டு எண்ணிக்காண்பிப்பார். அதற்காக ஆசிரியருக்கும் விரல் விட்டு எண்ணினால் தான் இரண்டும் இரண்டும் எவ்வளவென்று தெரியும் என்று சொல்லமுடியுமா? அப்படியே முருகனும் வள்ளியையும், தெய்வானையும் மணந்தான். அப்படி அவனே மணவாளனாய் இருக்கையில் திருமணம் வேண்டாமென்று சொல்ல முடியுமா?

பிறகு ஏன் இப்படி அருணகிரி சொல்லுகிறார்? காரணம் இருக்கிறதே. மனைவியும் மக்களும் முக்கியந்தான். இதை கல்யாணமவர்களும் ஏன் ஆகாதவர்களும் உங்களில் புரிந்திருப்பீர்கள். கோயிலுக்கு போனால் கூட தந்தையின் உடல்நிலை எப்படி இருக்கிறதோ, நம் மகளுக்கு நல்ல கணவன் வாய்ப்பானா, மகன் தவறான வழியில் போகாமல் இருப்பானா, நம் மனைவி சந்தோஷமாக இருக்கிறாளா, அம்மா சவுக்கியமாக இருக்கிறாளா இப்படித்தான் கண்ணை மூடியவுடன் தோன்றும். இது தவறில்லை. ஏனென்றால் நம் நிலை அதான். இறைவனை நினைக்கக்கூட இவை (நினைப்புகள்) இடையிலே நிற்கும்போது அவனை அடையவும் முடியுமா? இவை முக்கியமில்லையா? முக்கியம் தான். ஆனால் அவைகளை விட முக்கியம் இறைவன். இப்படியாக இந்த உலகச் சழக்கைகளில் (materialistic என்றும் கொள்ளலாம்) சிக்கித் இறைவனை நினையாமல் இவற்றில் மட்டுமே அடிமையாக இருந்துவிடும் நிலை தகுமா? ஏன் தகுமோ தகுமோ என்று இருமுறை கேட்கிறார்? ஏனென்றால், கூப்பிடாமலேயே ஓடிவந்து அருளும் கருணைக்கடலான கந்தனை நினைந்தும் நான் இன்னும் விமோசனம் பெறாமல் இந்த அடிமைச் சங்கிலிகளில் சிக்கி சுழல்வது நியாயமா முருகா? இது உனக்கே அடுக்குமோ? இப்படி நான் இருப்பது உனக்குத்தானே இழுக்கு என்று emphasize செய்கிறார் அருணகிரியார்.

18 comments:

said...

அருமையான விளக்கம். எனக்கு உடன் ஞாபகம் வந்தது ஆதிசங்கரர்தான். அம்மகானே தனது தாய் இருந்தவுடன், அவர் தன் உணர்ச்சிகளின் உந்துதலால் அவர்தம் தாய் வாழ்ந்த ஊருக்கு விரைந்தார். நாமெல்லாம் எம்மாத்திரம்.

நம்மையும் இத்தளைகளைத் தாண்டி அவனிடம் சேர அருள் புரிவானாக.

said...

அன்பு இராமநாதன்,
அருமையான ஒரு வினாவெழுப்பியுள்ளீர்கள்.
//உண்மையான பொருள். உறவுகளினால் வரும் சூரையும் (துன்பம்), ஆணவம் என்னும் நம்முள் வளர்ந்து நிற்கும் கிரியும் (மலை)யையும் அழிக்க ஞானமெனும் வேலை எறியவேண்டாம். தொட்டாலே போறும். எப்படி வேலால் தொடப்படுவது?//

இவ்வினாவெழுப்புவதோடு நின்றுவிடாது விடைகாணுவதில் கவனம் செலுத்தினால் கிட்டும் ஞானம்.

said...

ஆமாம் கொத்தனாரர்,
சங்கரரே சிவனின் அவதாரம். அவருக்கே அந்த கதியென்றால், நாமெல்லாம் போக வேண்டிய தூரத்தை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.

said...

ஐயா,
மிக்க நன்றி.

said...

மிக அழகான விளக்கம்.

நம் குடும்பமோ, அல்லது பொன்னோ, பொருளோ, பணமோ, பதவியோ நம்மை இறைவனை அடையவிடாது தடுக்கும் தளைகளல்ல. நாம் அவற்றின்மேது கொண்ட பற்றே (involvement) தளையாகிறது. பற்றுஎன்பது அன்பு அல்ல . அன்பு தூய்மையானது.
இந்த பற்று, ஆசை என்பவை நம் மனதிலுள்ள ' நான்' அனும் அகங்காரத்தாலும், ஆணவத்தாலும் வருபவை. அதற்கு நாமே காரணமாகிறோம். எனவேதான் 'பற்றை விடுக' என்று எல்லா ஞானிகளும் அறிவுறுத்துகிறார்கள். கீதையின் சாரமே "கர்மபலத்தியாகம்("உன் கடமையை திருந்த சரிவர செய். அதன் பலனை உனது நோக்கமாகக் கொள்ளாதே") தான். செய்த செயலின் பலனை( நல்லதோ, தீயதோ) அவனுக்கு அர்ப்பணித்துவிட்டோமானால், பின் மனம் அடாது, அசங்காது மதி மயங்காது நிற்கும். "சும்மா இரு" என்று அருணகிரியார் கூறுவதும் இதைத்தான். "அசைவறு மதி கேட்டேன் "என்று பாரதி பராசக்தியிடம் வேண்டுவதும் இதைத்தான். 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்வது' என்பதும் இதுவே. இதுவே கர்மயோகம். Be in the world, but not of the world.

சும்மா இருப்பது என்பது எதுவும் செய்யாமலிருப்பதல்ல.

"என் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்
நின்னைச் சரணடைந்தேன்"

என்று பற்றை விட்டு அவன் தாள் பற்றுவது.

பற்றை விடுவதற்கும் அவனருள் வேண்டும்

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு" - குறள்

said...

பட்டினத்தடிகளே அனைத்தையும் உதறி விட்டு தாய்ப்பாசத்தைப் பிரிய மாட்டாமல் இருந்தவர். நாமெல்லாம் எந்த மூலைக்கு.......அனைத்திலிருந்தும் காக்க வல்லான் முருகன். அவன் அடி பணிவோம்.

said...

ஜெயஸ்ரீ,
நன்றி

நீங்கள் சொன்னதை படித்தவுடன் நியாபகம் வந்தது சுகப்பிரம்மமும், வேத வியாசரும் தான். ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ளது என்று நினைக்கிறேன்.

சுகப்ப்ரம்ம மகரிஷியினை கண்ட, குளத்தில் நிர்வாணமாக குளித்துக்கொண்டிருக்கும் பெண்கள் அவரைக் கண்டு கையெடுத்துக் கும்பிடுகின்றனர். ஆனால், சுகப்பிரம்மரை பின் தொடர்ந்த அவரின் தந்தையும், இந்துமதத்தின் பிதாமகனுமான, வயதான வேதவியாசரை கண்டவுடன் வெட்கத்தில் தண்ணிருக்குள் அமிழ்ந்து கொள்கின்றனர். அப்பேர்பட்ட பதினெட்டு புராணங்கள் படைத்த வியாசருக்கே காமக்க்ரோதங்கள் இருக்கையில், நாம் எந்த மூலைக்கு!

said...

நன்றி ஜிரா!

முருகனில்லையேல் வேறு யார் நம்மை காப்பது?

said...

அருமையான பாடல், நல்ல விளக்கம்.

படலில் தமிழை ரசித்தேன்.. அற்புதம்.
சூரனை அழித்த கதையை இரண்டே வரிகளில் சுவைபடச் சொல்லியிருக்கிறார்.

மனைவி மக்கள்தான் அந்தக்காலத்தில் உலக வாழ்க்கையின் அடையாளங்களாயிருந்திருக்கும், அதுவும் அ.கி நாதர் போன்ற ஆன்மீகவாதிக்கு. இவங்க இல்லைன்ன இன்னும் பத்து பாட்டு எழுதியிருக்கலாம் என நினைத்தாரோ என்னவோ.

நான்கூட வீட்டிலிருந்து எழுதுவது குறைவு. வீட்டுக்குப் போயிட்டா அப்பாவாய், கணவனாய் மாறிவிடவேண்டியதுதான்.

விவாதத்திற்கும் ஆராய்விற்கும் ஒரு கேள்வி... ஏன் மதங்கள், கிட்டத்தட்ட எல்லாமே, இந்த உலக வாழ்க்கையை பயனற்றதாகவும் அனுபவிக்கத் தகாததாகவும் அறிவிக்கின்றன?

said...

இராம்ஸ்,

எனது பின்னூட்டத்தில் //அம்மகானே தனது தாய் இருந்தவுடன்// என்பது அம்மகானே தனது தாய் இறந்தவுடன் என்று இருக்க வேண்டும்.

படித்தவுடன் எழுத தோன்றியது. ஆதலால் தவறு நிகழ்ந்துவிட்டது.

said...

இராமநாதன். நான் புதிதாக என்ன சொல்லிவிடப் போகிறேன். விளக்கம் மணிப்ரவாளமாக வடமொழி, தமிழ், ஆங்கிலம் என்று எல்லாம் கலந்து எளிமையாகயும் ஆழமாகவும் இருக்கிறது. தொடர்ந்து எளிமையாகவும் ஆழமாகவும் சிந்தித்து எழுதுங்கள்.

said...

ஜெயச்ரி. நீங்கள் பற்றினைப் பற்றிய மிகச் சரியான புரிதலை வைத்துள்ளீர்கள். படிக்கும் போது மிக நன்றாக இருந்தது. நிறைய உதாரணங்களுடன் எழுதுவதும் மிக நன்றாய் இருக்கிறது. நீங்கள் சொல்லவருவதை உதாரணங்கள் மிக எளிதாக விளக்கிவிடுகின்றன. தெளிவான பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி.

said...

சிறில் அலெக்ஸ். எல்லா மதங்களும் ஏறக்குறைய இந்த உலகவாழ்க்கையைப் பயனற்றதாகவும் அனுபவிக்கத் தகாததாகவும் அறிவிப்பது போல் மேலோட்டமாகப் பார்க்கும் போது தோன்றுகின்றன. ஆனால் உண்மையில் அப்படி இல்லை. சின்ன கோடு பெரிய கோடு தத்துவம் தான். உலக வாழ்க்கையும் இன்பம் என்பதால் தான் அதனை சிற்றின்பம் என்பதில் அடக்கினார்கள். ஆனால் அது பற்றாய் மாறி தளையாய் மாறி பேரின்ப வழிக்குத் தடையாய் இருக்கும் போது அவற்றைப் பற்றி மதங்களும் பெரியவர்களும் எச்சரிக்கிறார்கள். அந்த எச்சரிக்கைகள் மேலோட்டமாகப் பார்க்கும் போது உலகவாழ்க்கை அனுபவிக்கத் தகாதது என்று சொல்வது போல் தோன்றுகிறது.

said...

அம்மா சவுக்கியமாக இருக்கிறாளா இப்படித்தான் கண்ணை மூடியவுடன் தோன்றும். இது தவறில்லை. ஏனென்றால் நம் நிலை அதான். இறைவனை நினைக்கக்கூட இவை (நினைப்புகள்) இடையிலே நிற்கும்போது அவனை அடையவும் முடியுமா? இவை முக்கியமில்லையா
முற்றும் துறந்த சங்கரரின் தவிர்கமுடியாத தாய்ப்பாசம்
என் முத்தல்லவோ நீ! என் கண்ணல்லவோ நீ! நீ என் ராஜா அல்லவோ நீ சிரஞ்ஜிவியக இருக்கவென்டும் என்றெல்லாம் என்னை கொஞ்சி மகிழ்ந்த தாயே1 அத்தகைய வாயில் சாரமில்லாத பிடியரிசைத்தான் உனக்கு இடுகிறேன் தாயே
பட்டிணத்தாரும் சங்கரரும் நமக்கு உணர்த்துவது கடவுளை விட தாய் மகத்தானவள்.கடவுள் நேரே வரமுடியாததால் தாயின் ரூபத்தில் வருகிறான் என்று கூறலாம் தி ரா ச

said...

கொத்ஸு,
தவறை பொறுத்தருளினேன். பிழைத்துப் போங்கள்.

said...

குமரன்,
நன்றி.

ஆம் ஜெயஸ்ரீ சொன்னது மிக அழகாக இருந்தது.

said...

சிறில் அலெக்ஸ்,
நன்றி.

நான் உங்களுக்கு பதில் சொல்லுமுன்னரே, குமரன் சொல்லிட்டார். அதுவே தான் என் கருத்தும்.

இல்லையென்றால் க்ருஹஸ்தர்களுக்கு இவ்வளவு முக்கியமான இடம் கிடைத்திருக்காது என்பது என் கருத்து.

மேலும், பல வருடங்களூக்கு ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த நியாபகம். துறவிகள் எல்லோரும் பழங்காலத்தில் were celebrating their lives on this beautiful planet. அந்த மாதிரித் தான் இருந்திருக்காங்க. ஆனா, என்ன காரணத்தாலோ, பிற்காலத்தில் இது திரிக்கப்பட்டு இவ்வுலகமே துன்பம் என்ற தற்காலத்தைய எண்ணவோட்டம் வந்துவிட்டது. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.

said...

நன்றி தி.இரா.ச,
நீங்கள் சொல்வதும் நன்றாக இருக்கிறது. ஆனால், எனக்கென்னவோ ஜெயஸ்ரீ சொன்ன கருத்து பிடித்திருக்கிறது. அதைத் தான் சொல்ல நினைத்தேன். சரியாக சொல்லவில்லையோ என்று இப்போது தோன்றுகிறது.