Tuesday, March 07, 2006

5. சகமாயையுள் நின்று தயங்குவதேன்?

மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறு மொழிந்து மொழிந் திலனே
அகமாடை மடந்தைய ரென் றயருஞ்
சகமாயையுள் நின்று தயங் குவதே. 5

இதுவும் போன பாட்டோட தொடர்ச்சியாக கொள்ளலாம். அந்தப் பதிவில் மாயையினால் பந்தத்திலும் பாசத்திலும் மட்டுமே பற்று வைப்போருக்கு இறைவனடி நினைய தடையாக இருப்பதாய் பார்த்தோம். அதற்கு ஜெயஸ்ரீ அவர்களும் தி.இரா.ச அவர்களும் மேல் விளக்கங்கள் கொடுத்திருந்தனர். அதுவே இந்தப் பாட்டிலும்.

மகமாயை களைந்திட வல்ல பிரான்
மகமாயைன்னா எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி மயக்கும் மாயைன்னு அர்த்தம். அதாவது இறைவனைக் காண நம் கண்களுக்கு தடையாய் இருந்து மறைக்கும் திரை. கண்களால்னா புறக்கண்கள் கிடையாது. ஏன்னா, அவற்றால் ஒருநாளும் அவனைக் காண முடியாது. இதையே தான் சில தினங்களுக்கு முன் (2. எனையிழந்த நலஞ்சொல்லாய்) பதிவில் பார்த்தோம், நினைவுக்கு வருகிறதா? இறைவன் தன்னைக் குறுக்கிக் கொண்டு சிலைகளாக நம் புறக்கண்களுக்கும், பின்னர் நமக்கு உண்மையான அன்பு அவன் மேல் வருகையில் பரம்பொருளாய் நம் அகக்கண்ணுக்கும் காட்சி தருகிறான். ஆனால், அம்மாதிரி அவனை புறக்கண்களால் காண்பது எளிது. கோயிலுக்கு போனால் பார்க்கலாம். ஆனால் அப்போதும் அவனைப் பார்க்காமல் காஸ் அணைத்தோமா, வீட்டைப் பூட்டினோமா என்று மனம் அலைபாயும். இத்தனைக்கும் அர்ச்சகர் மணியெல்லாம் அடித்து, கற்பூரம் எல்லாம் காட்டி எப்படியாவது நம் attention-ஐ இறைவன் மேல் திருப்பப் பெரும் பாடுபடுவார். அப்படியும் நாம் சொல்வதை கேட்டால் தானே நம் மனம்? மனம் ஒரு குரங்கு என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள். அப்படி கண்முன்னே நிற்கும் கடவுளின் உருவத்தைப் பார்த்தாலும், அவனை உண்மையாக பார்க்க முடிவதில்லை. கண்முன்னே தெரியும் தெய்வத்தை காண்பதற்கே இவ்வளவு தடைகள் என்றால் அகக்கண்ணால் காணவேண்டிய தெய்வத்தைக் காண குறுக்கே எத்தனை விஷயங்கள் இருக்கும்? இதையே தான், கந்தர் அலங்காரத்தில்

கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
உள்ளத் துயரை யொழித்தரு ள்வாய்


என்று சொல்கிறார். இருபுறமும் பற்றி எரியும் மூங்கில் கிளையின் நடுவில் சிக்கிய எறும்பதனைப் போல் இங்கும் மகிழ்ச்சியில்லாமல், உய்யவும் வழியில்லாமல் தவிக்கும் என்னுடைய துயரை அழித்தருளாயோ என்று. அதுபோல நம் வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்கள். பற்றுகள். தளைகள். அப்படி இவ்வாழ்க்கையில் சிக்கியிருக்கும் நமக்கு, எறும்பின் உய்விற்கு தடையாய் இருக்கும் நெருப்பைப் போல், தடையாய் இருப்பதில் முக்கியமானது மாயை. அதனூடாக பாசம், பந்தம் ஆகிய பற்றுகள். இப்படிப்பட்ட உலக மாயைகளை நொடிப்பொழுதில் களைந்திட வல்லவனான எம்பிரான்...

முகமாறு மொழிந்து மொழிந் திலனே
முகமாறு - தன் ஆறுமுகங்களைக் கொண்டும் மாயையைப் நாம் கைப்பற்றும் வழியைச் சொல்லியும் இன்னும் இந்த மகத்தான மாயையினை ஒழித்தழிக்க இயலாமல் தவிக்கிறேனே.

அகமாடை மடந்தைய ரென் றயருஞ் சகமாயையுள் நின்று தயங் குவதே.
அகம் என்றால் வீடு. மாடு என்றால் செல்வம். மடந்தையர் என்றால் பெண்டிர். போன பதிவில் சொன்ன படியே இவற்றின் மேல் கொண்ட பற்றைப் பற்றியே அருணகிரியார் குறிப்பிடுகிறார். இவற்றின் மேல் கொள்ளும் பற்று எத்தகையானது? அயர்ச்சி தரக்கூடியது. அவ்வயர்ச்சியினால் என்ன தீமை விளைகிறது? புறக்கண்ணாலும், அகக்கண்ணாலும் இறைவனைக் காண முடியாத அளவுக்கு மன அயர்ச்சியும், உடல் அயர்ச்சியும் தரக்கூடியது இந்த பற்றுகள் எனப்படும் அடிமைத்தளைகள். இந்த அடிமைத்தளைகளே நாம் இந்த உலகத்தின் மாயையினில் சிக்கித் திண்டாடுவதற்கான அடிப்படைக் காரணங்களாகும். இவ்வாறு தன் ஆறுமுகங்களில் இருக்கும் செவ்விதழ்களுடைய ஞான ஊற்றான அவன் வாயிலிருந்து உலக மாயைகளிலிருந்து தப்பித்துய்யும் வழியை முருகப்பெருமானே சொல்லியும், நான் இன்னும் உய்ய வழியில்லாமல், அவனை அடைய கதியில்லாமல் அலைகிறேனே!

இராகவனின் பதிவு

24 comments:

said...

Realising that you dont know anything is the first step towards knowledge. இது கேள்விப்பட்டிருக்கேன். இதைத்தான் இவ்வளவு அழகா சொல்லியிருக்காரு. இந்த அறிவு வரதுக்கே நமக்கெல்லாம் எவ்வளவு நாளாகுமோ.

said...

//முகமாறு - தன் ஆறுமுகங்களைக் கொண்டும் மாயையைப் நாம் கைப்பற்றும் வழியைச் சொல்லியும் //

இந்த விளக்கம் புதுமை இராமநாதன். நன்றாய் இருந்தது உங்கள் விளக்கம்.

இறைவனைப் புறக்கண்ணாலும் கண்டவர் பலர் இருந்ததாக நம் புராண இதிகாச வரலாறுகள் கூறுகின்றன என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

said...

நல்ல விளக்கம் இராமநாதன்.

ஆறு முகங்கள்....துன்பங்கள் ஆறு முகங்கள்....இன்பங்கள் தாரு முகங்கள்.....தொல்லைகளை வாறு முகங்கள்

கண்டு கேட்டு நினைத்து மொழிந்து மகிழ்ந்து இருக்க வேண்டும். அதுதான் நிலையானது.

said...
This comment has been removed by a blog administrator.
said...

// இவ்வாறு தன் ஆறுமுகங்களில் இருக்கும் செவ்விதழ்களுடைய ஞான ஊற்றான அவன் வாயிலிருந்து உலக மாயைகளிலிருந்து தப்பித்துய்யும் வழியை முருகப்பெருமானே சொல்லியும், நான் இன்னும் உய்ய வழியில்லாமல், அவனை அடைய கதியில்லாமல் அலைகிறேனே! //

இந்த விளக்கம் மிக நன்றாக இருக்கிறது. உபதேசம் செய்த 'சகமாயை ஒழித்திட வல்லபிரான் எப்படிப்பட்டவன் ? ஸ்வாமிநாதன் எனவும் ஞான பண்டிதன் எனவும் , தகப்பன்சாமி எனவும் பெயர் பெற்றவனல்லவா?

"சேவேறும் ஈசர் சுற்ற மா ஞான போத புத்தி
சீராகவே உரைத்த ...... குருநாதா "

நந்தியை வாகனமாகக் கொண்டு கயிலைமலையில் வீற்றிருக்கும் சிவபெருமானே தன்னை வலம் வந்து வாய் பொத்தி நிற்க ப்ரணவத்தின் பொருளை உபதேசித்த ஞான ஊற்றுகளல்லவா அவனது செவ்வாய்கள்? ஈசருடன் ஞானமொழி பேசும் ஆறு முகங்களல்லவா அவை ? அந்த ஆறு முகங்களாலும் மொழிந்தும் என் மாயை ஒழியவில்லையே ? இப்படிப் பொருள் கொள்வதும் மிகப் பொருத்தமாகவே உள்ளது

" உலக பசு பாச தொன்தம் ...... அதுவான
உறவு கிளை தாயர் தந்தை ...... மனை பாலர்
மல ஜல சுவாச சஞ்சலம் ...... அதாலே என்
மதி நிலை கெடாமல் உந்தன் ...... அருள் தாராய் "


உலகத்தில் பாசம் மற்றும் உயிர் சம்பந்தப்பட்ட உற்றார், உறவினர், சொந்தம், தாய், தந்தை, மனைவி, மக்களாலோ மற்றும் உடல் உபாதைகளாலோ என் மதி கெடாமல் உன் அருள் தாராய் என்று திருப்புகழில் வேண்டிய அருணகிரியார், அந்த அருளுரை உன் ஆறுமுகங்களிலிருந்தும் கிட்டியும் நான் மாயை ஒழிந்திலனே என்று அநுபூதியில் கூறுகிறார். அவருக்கு அநுபூதி கிடைத்துவிட்டது, நமக்காகவே இதை சொல்கிறார்.

said...

ஜெயச்ரி. மீண்டும் வேண்டிக் கொள்கிறேன். சீக்கிரம் ஒரு வலைப்பூவைத் தொடங்கி எழுதத் தொடங்குங்கள். திருப்புகழையும் மற்ற இலக்கியங்களையும் நீங்கள் சொல்லுவது மிக அருமையாக இருக்கிறது. திருப்புகழை பதம் பிரித்து இவ்வளவு எளிமையாகப் புரியும் படி செய்யும் திறமை உங்களுக்கு நன்றாக இருக்கிறது. வேண்டுகோளுக்கு செவி சாய்த்து எழுதத் தொடங்குங்கள்.

said...

//....இறைவன் மேல் திருப்பப் பெரும் பாடுபடுவார். அப்படியும் நாம் சொல்வதை கேட்டால் தானே நம் மனம்? மனம் ஒரு குரங்கு என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்.//

மிகச்சரி. இதையேதான் நம் ஆன்றோர்கள் யாவரும் வலியுறுத்தியுள்ளனர். தாயுமானவரும் இதயேதான் சொல்கிறார்.

"...சலமே னடக்கலாம்; கனன்மே லிருக்கலாம்
தன்னிகரில் சித்திபெறலாம்;
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
திறமரிது;"

பார்க்க: http://mahamosam.blogspot.com/2006/02/blog-post_114074933792351837.html

உங்கள் உரை எனக்கு சிறிது கடினமாகவே உளது. பழகிடும்.

இத மேலே வைங்க...புரியலயா keep it up :-)

said...

அதாவது இறைவனைக் காண நம் கண்களுக்கு தடையாய் இருந்து மறைக்கும் திரை. கண்களால்னா புறக்கண்கள் கிடையாது. ஏன்னா, அவற்றால் ஒருநாளும் அவனைக் காண முடியாது.
உண்மைதான் இராமனாதன் புறக்கண்களால் இறைவனைப் பார்க்கமுடியாது. கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பதுதான் சரி. சிலபேர் பார்த்ததாக சொன்னது தப்பா? இல்லை, இறைவன் அவர்களுக்கு புறக்கண்னை மறைத்து அகக்கண்னை சிறிதுநேரம் திறந்தான்.தினமும் கண்ணனை புறக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்த அர்சுணனுக்கே பாரதப்போரின்போது கண்ணனின் விஸ்வரூபத்தை புறக்கண்ணால் பார்க்கமுடியவில்லை.கண்ணன் தந்த சிறப்பு கண்ணைக்கொண்டுதான் பார்க்கமுடிந்தது. அது மட்டுமல்ல பிறவிக்குருடனான திருதராஷ்டரனுக்கு கண்ணன் அகக்கண்ணை திறந்தபிறகு அவனும் விஸ்வரூபத்தை பார்க்கமுடிந்தது. நீங்களும்.இராகவனும்,ஜெய்ச்ரியும் அனுபூதிக்கு ஒரேபட்டுக்கு ஒரேசமயத்தில் எழுதுங்கள் நன்றாக இருக்கும் தி ரா ச

said...

இராமநாதன், ஜெயஸ்ரீ: நல்ல விளக்கம். கண்களை ஆணவன் கண்மம் மாயை என்ற மும்மலங்களாலான மெல்லிய திரை உண்மையை காண முடியாமல் கண்ணிருந்தும் குருடனாக ஆக்குகிறது. அந்த திரைவிலக எதையும் அன்பின் வழிகொண்டு பார்க்க முடிகிறது.
ஜெயஸ்ரீ; நீங்களும் எழுத ஆரம்பியுங்களேன்

said...

ஜெயஸ்ரீ...மிகவும் அருமையான விளக்கங்கள்.

சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரம் இரு செவி மீதிலும் பகர் செய் குருநாதா - என்கிறார் அருணகிரி. முருகன் சொல்லச் சொல்ல எல்லாரையும் சிவனேன்னு இருக்க வைக்கிற சிவனுக்கே மனம் குளிந்திருந்ததாம். அந்த உபதேசம் பெற்ற அருணகிரிக்கா இத்தனை பிரச்சனைகள்? நீங்கள் சொன்ன - அவர் நமக்காகப் பாடியுள்ளார் என்பதுதான் உண்மை. மருந்துக் கம்பெனிக்காரர்கள் மருந்து கண்டுபிடிப்பது அவர்கள் கொள்வதற்காகவா...நமக்காகத்தானே. அதுபோலத்தான் இதுவும்.

ஜெயஸ்ரீ, ஒரு வேண்டுகோள். அநுபூதியை நான் தொட்டுக் கொண்டிருக்கிறேன். இராமநாதனும் தொட்டுக் கொண்டிருக்கிறார். குமரனுடைய பாட்டுப் பாட்டையொ தனிப்பாட்டை. திருப்புகழைத் தொடத்தான் யாருமில்லை. தெரிந்தவர். புரிந்தவர். நீங்கள் ஏன் தொடங்கக் கூடாது? அந்தத் தமிழமுதை நாங்களும் படித்துப் பயன்பெற ஏன் தரக்கூடாது? கையேந்திக் கேட்கிறேன்.

said...

குமரன்,பத்மா, ராகவன்

மிக்க நன்றி.

கூடிய சீக்கிரம் வலைப்பதிவு துவங்கி திருப்புகழ் பாடல்களுக்கு விளக்கம் எழுதுகிறேன்.

ராகவன் என்ன பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்கிறீர்கள் ? நீங்கள் எப்போதும் சொல்வதைப்போல்

யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததனால்

said...

// யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததனால் //

ஜெயஸ்ரீ, வேலவர் தந்ததை எங்களுக்கும் தர வேண்டித்தான் பெரிய பேச்சுகள் எல்லாம். :-) பாருங்கள். பலன் கிடைத்து விட்டதே. :-)

said...

கொத்ஸ்,
//இந்த அறிவு வரதுக்கே நமக்கெல்லாம் எவ்வளவு நாளாகுமோ.
//
அதே தான் எனக்கும் கவலை. :(

said...

குமரன்,
//இறைவனைப் புறக்கண்ணாலும் கண்டவர் பலர் இருந்ததாக நம் புராண இதிகாச வரலாறுகள் கூறுகின்றன என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்//
இதனோடு 50% ஒத்துப்போகிறேன். ஆனால், புறக்கண்ணால் காணப்படும் இறைவன், வெறும் desktop வெர்ஷனே. ஆனால் நாம் என்பது அற்றுப்போவதால் மட்டுமே அகக்கண்ணால் காண முடியும். அப்போதுதான் மெய்ஞான நிலை என்று எனக்குத் தோன்றுகிறது.

said...

ஜிரா,
நன்றி

//ஆறு முகங்கள்....துன்பங்கள் ஆறு முகங்கள்....இன்பங்கள் தாரு முகங்கள்.....தொல்லைகளை வாறு முகங்கள்....//

இதுதான்யா உம்ம ஸ்பெஷால்டி! :)

said...

ஜெயஸ்ரீ,
அருமை.

//அவருக்கு அநுபூதி கிடைத்துவிட்டது, நமக்காகவே இதை சொல்கிறார்//
அதே!

குமரனும், ஜிராவும், தேன் துளியும் கேட்டதையே நானும் கேட்கிறேன். ஆரம்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டீர்கள். எப்போது என்று ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

நன்றி

said...

ஹரி அண்ணா,
நன்றி.

//உங்கள் உரை எனக்கு சிறிது கடினமாகவே உளது.//
நிஜமாவா.. இனிமே இன்னும் எளிமையா எழுத முயற்சி செய்யறேன்.

said...

தி.இரா.ச,
//இறைவன் அவர்களுக்கு புறக்கண்னை மறைத்து அகக்கண்னை சிறிதுநேரம் திறந்தான்.தினமும் கண்ணனை புறக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்த அர்சுணனுக்கே பாரதப்போரின்போது கண்ணனின் விஸ்வரூபத்தை புறக்கண்ணால் பார்க்கமுடியவில்லை.கண்ணன் தந்த சிறப்பு கண்ணைக்கொண்டுதான் பார்க்கமுடிந்தது. //
இதுவே தான் என் எண்ணமும். அகக்கண்ணால் காணும் போது முக்தியடைந்து விடுகிறோம், இல்லையா? அதுவே இறுதி நிலை. அதுவரை, இறைவன் தன் கருணையால், அடியார் தம்மை மகிழ்விக்க வேண்டுமென்றால் புறக்கண்களுக்கு தெரியலாம் என்று நினைக்கிறேன்.

said...

தேன் துளி,
நன்றி

said...

//கூடிய சீக்கிரம் வலைப்பதிவு துவங்கி திருப்புகழ் பாடல்களுக்கு விளக்கம் எழுதுகிறேன். கூடிய சீக்கிரம் வலைப்பதிவு துவங்கி திருப்புகழ் பாடல்களுக்கு விளக்கம் எழுதுகிறேன். //

ஜெயஸ்ரீ,
வெகு நாட்களாக எதிர்பார்த்தது. ஆவலுடன் காத்திருக்குறோம். விரைவில் வாருங்கள்.

said...

ஆன்மீகத்துக்கும் எனக்கும் ரொம்ப தூரம் என்பதால், இது போன்ற உங்கள் பதிவுக்லுக்கு பின்னூட்டம் இடுவதில்லை.மன்னிக்கவும் மருமகரே!

said...

அத்தை,
பரவால்ல.. இதுக்கும் சேத்து நார்மல் பதிவுல ஒப்பேத்தினீங்கன்னா கண்டுக்க மாட்டேன். :)

said...

ஐயரீர்,
இதையும் பார்க்கலாமே!

http://njaanamuththukkal.blogspot.com/2005/10/9.html

said...

ஞானவெட்டியான் ஐயா,
உருவ விளக்கத்தைக் குறித்த சுட்டிக்கு மிக்க நன்றி.