Tuesday, February 14, 2006

2. எனையிழந்த நல்ஞ் சொல்லாய்

உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனு நீயலையோ
எல்லாமற என்னை யிழந்த நலஞ்
சொல்லாய் முருகா சுரபூ பதியே. (2)

உல்லாச நிராகுல யோகவிதச் சல்லாப விநோதனு நீயலையோ?
எப்போதும் சந்தோஷமா, கவலைகளே இல்லாம இருக்கறவன் முருகன். கவலையா இருக்கும்போது முருகனோட பிம்பத்த நினச்சு பாருங்க. பன்னிரண்டு கை ஆறுமுகனோ, இல்லை கோவணத்தோட நிற்கும் பழனியாண்டியோ. உங்களுக்கு எந்த உருவம் பிடிக்குமோ அதை நினைச்சுக்கலாம். தெளிவு கிடைக்கும். அமைதி வரும். சும்மா ஒரு ஆபீஸ்ல மேனேஜருக்கே எவ்வளவு கஷ்டம். நம்ம ஜோசப் சார் 'திரும்பிப் பாக்கறேன்' படிச்சீங்கன்னா புரியும். எத்தன பேர்னால எத்தன பிரச்சனைகள். அப்படி பாத்தா, முருகன் யாரு? அண்டசராசரங்களும் அதிபதி. எல்லாதுக்கும் CEO அவன்தான். சுரபூபதி. இதுக்கு ஜிரா ஏற்கனவே சொல்லிட்டார். அதாவது தேவர்களின் தலைவன். அவர்களின் சேனாதிபதி. அவங்களோட மாப்பிள்ளை. அவன் எப்படி எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கான்? எப்படி எப்பவும் கோவமோ எரிச்சலோ படாம யோக நிலையில் இருந்துகிட்டு இதமா, பதமா அடியார்களுக்கு அருளுகிறான்? அதுக்கு அடுத்த வரிகளை படிச்சா புரியும்.

எல்லாமற என்னை யிழந்த நலஞ்சொல்லாய் முருகா சுரபூ பதியே
முருகன குழந்தைன்னு சொல்றோம். அப்படித்தான் பாக்கறோம். நினைக்கறோம். சிலைகளா வடிச்சி வெச்சுருக்கோம். அவனும் அப்படிதான் வந்து பழநி ல நிக்கலையா? ஏன் குழந்தை? ஏன் குமரன்? உருவமும் அரூபமும் எல்லாமுமாய் பிரகாசிக்கும் பரமாத்மாவுக்கு கையும், காலும் வரைஞ்சு நாம எளிதா identify பண்ணிக்கறா மாதிரி முருகனுக்கு உருவம் கொடுத்து வச்சிருக்கோம். அவ்வளவு தான். தெய்வத்தை புரிஞ்சுக்கறதுல ரெண்டு வகை இருக்கு. இதுக்கு பரமாச்சாரியாள் அழகா விளக்கம் சொல்லுவார்.

கடவுளை எப்படி புரிஞ்சிக்கிறது? பக்தி மூலமா மட்டும் தான் முடியும். ஆனா, எதுமேல பக்தி வைக்கணும், என்னன்னு பக்தி வைக்கணும்னு தெரியாம எப்படி பக்தி பண்ணுவது? இது ஒரு contradiction, இல்லியா? அதுக்காக Starter Kit மாதிரி தான் முருகன், கண்ணன், சிவன், பார்வதின்னு ஒரு உருவம் கொடுத்து, அதுல நமக்கு எது பிடிச்சிருக்கோ அதுமேல பக்தி பண்ணலாம். ஒண்ணுமேயில்லாம எப்படி செய்யறது? பக்தியில் சில நிலைகள் இருக்கு. முதல் நிலைதான் நம்முடையது. அதாவது, நான் வேறு கடவுள் வேறு பூதங்கள் வேறு என்று பிரித்து இதில் 'நான்' முக்கியமாக போய்விடுகிறது. இந்த 'நான்' இருக்கறவரைக்கும் உண்மையாக கடவுளை, அவன் தத்துவத்தை அறிய முடியாது. நான் இருக்கறவரைக்கும் பஞ்சபூதங்களால் ஆனது மட்டும் தான் புரியும், தெரியும் நமக்கு. அதனாலேயே, நம்ம மேல இருக்கற ஆசையினால இப்படி எளிதா புரிஞ்சிக்கறா மாதிரி பரமாத்மா தன் மாயையினாலே எளிய, சிறிய வடிவங்களில் நம்முன் வருகிறது. ஏன்னா, குறைஞ்சு வராமல் போனால் அவருடைய முழு சுவரூபத்தை நம்மால் comprehend பண்ண முடியாது. நம் அறிவு அவ்வளவுதான்.

எளிய உதாரணம். நிறைய பேர் உங்க டேபிள்ல globe வச்சுருப்பீங்க. அது இந்த உலகத்தோட desktop version. நமக்கு எளிதா புரியறதுக்காக simplify பண்ணி வச்சுருக்கோம். அதுவே உலகமாகாது. அதுவே உலகம்னும் நினைக்கமுடியாது. அதே மாதிரி தான். கிருஷணனை யசோதா உரலில் கட்டிப்போட்டாளா? அவ கட்டிப்போட்டது வேதங்களின் சாரம், உபநிஷத்துகள் பேசும் தத்துவம் மற்றும் எல்லாம் இருப்பதுவும் இல்லாததுமாக இருக்கற பரமாத்மாவா? அவ்ளோ பெரிய பரமாத்மாவை வெறும் உரலில் கட்டிப்போட முடியுமா? முடியாதில்லியா? அப்புறம் எப்படி கண்ணனைக் கட்டிப்போட்டாள்? உபநிஷத்துகளின் தத்துவத்தை கட்டிப்போட முடியுமா? ஏன் கட்டிப்போட முடிஞ்சதுன்னா, வந்தது முழு ரூபம் இல்ல. தன் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட சுயரூபத்தை சின்னதாக நமக்கு புரியும் வகையில் தன்னைக் குறுக்கிக்கொண்டு வந்ததால் தான் கட்டிப்போட முடிந்தது. அது மாதிரி 'நான்' இன்னும் இருக்கும்வரையில் நம் மனசுக்குள் பூரணமான பரமாத்மாவைக் கட்டிப்போட முடியுமா? முடியவே முடியாது. நாம் அவனை பார்க்கவேண்டும் என்கிற ஆசையினால் தன்னைக் குறுக்கிக்கொண்டு, நமக்கு புரியும் வகையில், பஞ்ச பூதங்களின் அடிப்படையில் வந்து காட்சி தருகிறான் இறைவன். நம்மால் கட்டிப்போடக் கூடிய குட்டி சைஸில் வந்து நம் மனதில் உக்கார்ந்து கொள்கிறான். இது ஆரம்ப நிலை. இந்த நிலையில் கடவுள் மேலும் அன்பு உண்டு. மற்ற worldly விஷயங்களிலும் அன்பு சம அளவில் இருக்கும்.

அடுத்த நிலையில், மற்ற அன்புகள் மறைந்து முழுமையாக இறைவன் மேல் மட்டுமே அன்பு வைத்தால், 'நாம், நான்' என்பதெல்லாம் மறைந்துவிடும். 'ஆஹா, இத்தன நாள் உன்னை இதுன்னு நினச்சேனே. நீயாரு, உன் தத்துவம் என்ன என்று புரிகிறதே' என்று பாடத்தோன்றும். பரமாத்மாவோடு முழுமையாக கலந்துவிடும் உன்னத நிலையது. அவனுடைய தத்துவம் புரியும் சரி, அப்ப என்ன விசேஷமா புரியும்? பார்க்கறதெல்லாம் பரமாத்மா என்ற தெளிவோடு, பார்க்கிறதும் பரமாத்மா என்று புதிதாக புரிய வரும். கடலில் மிதக்கும் ஐஸ்கட்டி மாதிரி தான் நாமும் இருக்கிறோம்னு புரியும். அது என்னிக்கு புரிகிறதோ, நான் என்பது மறைந்து, ஐஸ்கட்டி உடனே பரமாத்மா என்னும் கடலில் கலந்துவிடும். அப்படி கரைஞ்சவர் அருணகிரிநாதர். அதைத்தான் "எனை இழந்த நலம்"னு சொல்றார். அவருக்கு புரிஞ்சுடுச்சு. ஆனா, அடுத்தவங்களுக்கு, நம்மளப் போன்ற சாமானியர்களுக்கு எப்படி விளக்கறதுன்னு நீயே சொல்லிடுப்பா முருகான்னு முருகன் கிட்ட சொல்றாரு.

23 comments:

said...

அத்வைத பரமான நல்ல விளக்கம் இராமநாதன். அருணகிரிநாதர் அத்வைதியா இல்லையா என்று தெரியாது. ஆனால் அவர் பாடலான இந்தப் பாடலில் அத்வைதத் தத்துவம் மிக நன்றாகப் பொருந்தி வந்திருக்கிறது. அதனை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.

said...

அருமையான பாடல் அழகான விளக்கம்.

'இழந்த நலன்' - oxymoronபோலத் தோன்றுகிறது.

said...

முருகனை சின்னதா பிரிண்ட் போட்டு பர்ஸில வைக்கறா மாதிரி மனசுக்குள்ளையும் போட்டு வைச்சுக்கோ, அதுதான் பர்ஸ்ட் ஸ்டெப். அப்டி செஞ்சீனா கவல இல்லாது பூடும்.
அதும் பின்னாடி நமக்குள்ள அவரு இல்ல, எல்லாமா கீற அவருக்குள்ள நம்மதான் ஒரு பார்ட்டுன்ற அறிவு வரும் அப்டீங்கற. இதுதான் நமக்கு பிரிஞ்சது. கரீக்ட்டாப்பா?

said...

எங்கேயோ போயிட்டீங்க இராமநாதன்.

Letter and spirit of law என்பார்கள், அதுபோல நீங்கள் பாடலின் spiritஐ அழகாக வெளிக் கொணர்ந்திருக்கிறீகள்.

said...

வாரியார்,கீரன், இவர்களது கந்தரனுபூதி உரைகளை கேட்டும் விளங்காத சிலவிஷயங்கள் என்னை போன்றவர்களுக்காக இராமநாதன் தன் எளிய உரையால் விளக்கியதற்கு நன்றி. தி ரா சா

said...

இலவசக் கொத்தனார். என்ன 'சட்டைப் பையில் உன் படம் தொட்டுத் தொட்டு உரச' பாட்டு கேட்டுக்கிட்டு இருந்தீங்களா என்ன?

said...

மிகவும் அருமையான விளக்கம். இப்பொழுதைக்கு இங்கு நிறுத்துகிறேன். நேரம் ஆகிறது. நாளைக்கு பொறுமையாக பின்னூட்டம் இடுகிறேன்.

said...

//விநோதனு//

இலக்கணக் குறிப்பென்ன? தெலுங்கு வாடை வீசுகிறது இந்த வார்த்தையில்.

பூபதி என்பதற்கு என்ன அர்த்தம் பூவின் பதி என்பதா அல்ல பூ = பூமி எனும்படி அர்த்தமா?

மீண்டும் - பாடல் அழகாக உள்ளது

said...

குமரன்,
நன்றி. அருணகிரிநாதர் பொதுவாக அத்வைதம் சொன்னாரா என்று எனக்கும் தெரியவில்லை. ஆனால், இந்தப்பாட்டில் அதுதான் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

said...

சிறில்,
நன்றி.

இதில் எந்த குழப்பமும் இல்லை. "என்னை யிழந்த நலஞ்" னுதானே சொல்றாரு. எந்த நலத்தையும் இழக்கவில்லை. ஆனால், உன்னுள் என்னை இழந்த நன்மையை சொல்லாயோன்னு தான் கேட்கறார்.

said...

கொத்தனார்,
கரெக்டா பாயிண்ட பிடிச்சிட்டீங்க. வாழ்த்துகள்!

said...

மணியன்,
நன்றி

said...

தி.இரா.ச,
வருகைக்கு நன்றி. நீங்க சொல்றவங்கள்லாம் மிகப் பெரியவர்கள். இதுல நானெல்லாம் எந்த மூலைக்கு. இந்த பதிவு அதிசயமா நன்றாக வந்திருக்குன்னா அதுக்கு காரணம் பல விஷயங்களை மறைமுகமா பெரியவா சொன்ன கீதை உரையிலேர்ந்து சுட்டதுனுலாத்தான். :)


நன்றி

said...

குமரன்,
நீங்க போட்ட ரூல நீங்களே பாலோ பண்ணலேன்னா எப்படி?

// 'சட்டைப் பையில் உன் படம் தொட்டுத் தொட்டு உரச' //

முழுப்பாடலும் தந்து விளக்கவுரையும் தரவேணாமா? :))

said...

ஜிரா,
நன்றி. கண்டிப்பா திரும்ப வந்து கருத்து சொல்லுங்க.

said...

சிறில்,
பூ=பூமி.. பூபதி (Bhoopathy).. நீங்க சொல்றதே தான்.

//விநோதனு நீயலையோ//
இதுல தெலுங்கெல்லாம் இல்லை எனக்குத் தெரிஞ்சு. விநோதனு(ம்) நீ இல்லையோ? ம் ம விட்டுட்டாரு. இலக்கணக் குறிப்பெல்லாம் நமக்குத் தெரியாதுங்க. குமரனும், ஜிராவும் வந்து சொல்வாங்க. நன்றி.

said...

இராமநாதன்..

இழப்பு என்பது பொதுவாக நலக்கேடாகத்தான் கருதப்படுகிறது. ஆனால் இவர் (தன்னை) இழந்ததை நலமாகச் சொல்கிரார்... வேண்ட்முமென்றேதான் இந்த வார்த்தைப் பிரயோகம் செய்திருக்கிறார்.

இப்படி எதிர் பொருளுள்ள சொற்களை பொருத்திச்சொல்வதை ஆங்கிலத்தில் oxymoron என்கிறார்கள் அதைத்தான் சொல்ல்லியிருந்தேன். குழப்பம் ஒன்றுமில்லை.

செத்த பிழைப்பு இன்னுமொரு oxymoron.

வினோதனு - ஈறுகெட்ட பெயரெச்சமாகத்தானிருக்கவேண்டும்.

1899ல் படித்த தமிழிலக்கணம். :)

said...

அருணகிரி நாதர் 'ம்'ம விடலை. இது பாட பேதம். சில வெர்சன்ல விநோதனும் என்று இருக்கிறது. சிலவற்றில் விநோதனு நீயலையோ என்று இருக்கிறது. இரண்டுமே இலக்கணப் படி தான் உள்ளது. இராகவன் தன்னோட பதிவுல 'விநோதனும்' பாடத்தைத் தான் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

said...

அநுபூதி சொல்லுமிடத்தில் தாமதித்தேனே....மன்னிக்க....

மீண்டும் அருமையான விளக்கங்கள்.

அந்த குளோப் எடுத்துக்காட்டு மிகச்சிறப்பு. மிகவும் பொருத்தமாக வந்திருக்கிறது. உருவ வழிபாட்டின் உண்மையை எடுத்துச் சொல்கிறது. இது உருவ வழிபாடு செய்கின்ற பலருக்கே தெரிய வேண்டியுள்ளது.

தொடரட்டும் அநுபூதி. அருளட்டும் கந்தன்.

said...

// குமரன்,
நன்றி. அருணகிரிநாதர் பொதுவாக அத்வைதம் சொன்னாரா என்று எனக்கும் தெரியவில்லை. ஆனால், இந்தப்பாட்டில் அதுதான் சொல்கிறார் என்று நினைக்கிறேன். //

இராமநாதன், அருணகிரி அத்வைதமும் சொல்லியிருக்கிறார். த்வைதமும் சொல்லியிருக்கிறார். நெய்யிற்குத் தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதாரமா? அது போலத்தான் ஜீவாத்மாவும் பரமாத்மாவும். ஆகையால் அத்வைதமும் த்வைதமும் ஒரு சுவரின் இரண்டு பக்கங்கள். அருணகிரியின் நிலையில் அவருக்கு ஒரு சூப்பர் சீனியர் உண்டு. அவர் நக்கீரர். அவரும் இப்படித்தான்.

said...

விநோதனு நீயலையோ என்பது சரியே. நான் சில இடங்களில் படிப்பவர் நலன் கருதி பதம் பிரித்திருப்பேன். அதுவும் இலக்கணப் பிழையன்று.

said...

ஜிரா,
அத்வைதமோ, த்வைதமோ.. எல்லாம் பரம்பொருளான முருகனப் பத்திதானே..

அதனால எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல.! :)

said...

குமரன்,
நன்றி