Tuesday, April 18, 2006

8. பிமரங்கெட மெய்ப்பொருள் பேசியவா!

அமரும் பதிகே ளகமா மெனுமிப்
பிமரங் கெட்மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே. (8)

//அமரும் பதிகேள் அகம் ஆம் எனும் இப்பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா//
அமரும் பதி - நாம் இருக்கற ஊர். கேள் னா நம் சொந்தங்கள். யாதும் ஊரே நியாபகம் வருதில்லையா? அகமாம் - அகம்+ஆம் - அகம் கறது இங்க குறிக்கறது நம் மனத்தை, நாம் என்னும் எண்ணத்தை. இப்போ மேல படிக்கறதுக்கு முன்னாடி ஒரு சின்ன விஷயம் பண்ணிப்பாருங்க. இப்போதைக்கு நீங்க எங்க இருக்கீங்க, என்ன சம்பாதிக்கறீங்க, ஸ்டேட்டஸ் இன்னபிற, எவ்ளோ வசதி வாய்ப்புகளோட இருக்கீங்கன்னெல்லாம் நினச்சு பாருங்க ஒரு நிமிஷம். சுகமா இருக்கா? எல்லாருக்கும் சுகமா இருக்கறதுதானே.. தப்பில்லை. உங்க மொபைல் போனிலோ, கணினியோ .. அதுல காலெண்டரத் தொறங்க. கொஞ்சம் டேட் மாத்துங்க. என்னோட விண்டோஸ் XP-ல 2099 ஆம் வருஷம் வரை இருக்கு. 2099-ல நான் இருக்கப்போறேனா? இல்லை என்னையப் பத்தி யாராவதுதான் ஒருநொடி யோசிக்க போறாங்களா? இப்போ நான் பெருமையா ஸொஸைட்டில இதுவாக்கும்னு தானே நாமெல்லாம் நினச்சுகிட்டிருக்கோம். அதுவே 2099 வேண்டாம், 2050 வரைக்குமாவது தாங்குமா? நம்ம பதவியும் பணமும் ஆடம்பரமும்? எதுக்கு காலெண்டர் பாக்கச் சொன்னேன்னா, வெறும்ன நினச்சு பாத்தா பெரிய விஷயமா இது தெரியது. அதுவே இதே ஏப்ரல் 17 ஆம் தேதின்னு ஒண்ணு 2099 லேயும் வரப்போது. அப்போ இப்ப நம்ம கிட்ட இருந்ததெல்லாம் எங்க போச்சு? நாம தான் எங்க போனோம்? இல்லை, நம்மகிட்ட இப்போ இருக்கறதெல்லாம் பொய்யா? னு நினைக்கத் தோணும்.

இது எதுவுமே நிரந்தரமில்லை, வெறும் மாயைங்கறதுதான் உண்மை. அதப் புரிஞ்சுக்கிட்டாலே இறைவனை பாதியடைஞ்சா மாதிரிதான். இதத்தான் என் ஊர், என் சொந்தம், நான் என்று எனக்குஇருக்கும் பிரமைகள் எல்லாம் முற்றிலும் கெட உண்மையான பொருளை, எது நிரந்தரமானதென்று என்னிடம் பேசியவான்னு முருகனைப் பாடறாரு இங்கே.

//குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பொரு தானவ நாசகனே//

அடுத்த வரிக்கு வருவோம் இங்கே. இதில் மூன்று வித adjectives உபயோகப்படுத்தறாரு. குமரன். இதுக்கு பொருள் தேவையில்லை. கிரிராச குமாரி - நம்ம பர்வத ராஜனோட பொண்ணான பார்வதி. அவங்களோட மகனே.

சமரம் பொரு தானவ நாசகனே - போரிட வந்த அசுரர்களை அழித்தவனே.

சரி.. ஏன் இப்படி மூன்று உருவங்கள் கொடுக்கிறார் அருணகிரி? எது மெய்ப்பொருள் என்று அசரீரியாய் கந்தன் பேசவில்லையே. உங்களுக்கு எப்படியோ? அசரீரியெல்லாம் இந்தக்காலத்துல கேட்டா, யாராவது லவுட் ஸ்பீக்கர் வச்சு விளையாடறாங்களோன்னு நினச்சுட்டு போயிடுவேன். அப்படியெல்லாம் PA வில் அறிவிக்காமல், இங்க பாருங்க, கந்தன் என்ன செய்யறான்னா, வேலை மெனக்கெட்டு அருணகிரியும் உண்மையத் தெரிஞ்சுக்கணுமேங்கற ஆசையில் அவரும் உணரக்கூடிய ஒரு சிறு உருவம் எடுத்துகிட்டு நேர்ல வந்து, எது நிரந்தரம் எது உண்மையான பொருள்னு சொல்லிட்டு போயிருக்கான். அவருக்குச் சொன்னவன், நமக்கும் சொல்வான். அவரைப் போலவே நிதமும் அவன் தாள் பணிந்தால்.

----
பார்வதியின் மகனே! குமரனே! போரிடவந்த சூரரை அழித்தவனே! என் ஊர், என் சுற்றம், நான் என்பது மாதிரியான உலக மாயைகள் என்னைவிட்டு அகன்றொழிந்திட மெய்ப்பொருளை பேசியவா!


--------
கொஞ்சம் நாட்களாக வேலை காரணமாக முன்பு போல் பதிய முடிவதில்லை. பொதுப்பாட்டு மெதுப்பாட்டாய் ஆனதுக்கு அதான் காரணம். கூடிய சீக்கிரம் திரும்ப பார்முக்கு வருவேன்னு நம்பறேன். பாப்போம்.