Wednesday, July 26, 2006

9. ஊசல் படும் பரிசு ஒழியுமா?

மட்டூர்குழல் மங்கையர் மையல்வலைப்
பட்டூசல் படும்பரி சென்றொழிவேன்
தட்டூடற வேல்சயிலத் தெறியும்
நீட்டூர நிராகுலநிர்ப் பயனே!


//மட்டு ஊர் குழல் மங்கையர் மையல் வலைப்பட்டு ஊசல் படும் பரிசு என்றொழிவேன்?//
மட்டு - போதையூட்டும் நறுமணம். இந்த மாதிரி மட்டு ஊர் குழலாம். மட்டு ஊறுற மாதிரி குழல் மங்கையர்கிட்டதானே இருக்கும்? போதையூட்டும்னு இங்க பொருள்ள சேர்த்திருக்கே, அத நினவுல வச்சுக்கணும். திருவிளையாடல் பாட்டு மாதிரி இயற்கையிலேயே மணமிருந்ததோ, இல்லை செண்ட் போட்டுதான் வந்ததோ... வாசனையா இருக்கறது மங்கையரின் கூந்தல் தான். ஆனா, நற்குணம் உடைய பெண்களின் கூந்தலில் நறுமணம் இருக்கும். போதை இருக்காது. போதையூட்டும்படியான நறுமணத்தின் தேவை விலைமாதர்களுக்கே.

இந்த மாதிரி மயக்கும் நறுமணத்தை கொண்ட கூந்தலை உடைய விலைமாதர்களின் மையல்வலையில் - சிலந்திகள் வலைபின்னி வச்சுருக்கும். அதுல போய் மாட்டிக்கறது பூச்சிகள் தானேயொழிய, சிலந்திகள் பூச்சிகளை பிடிக்கறதில்லை. வலைன்னாலே இதுதானே விசேஷம். ஈட்டியோ, அம்போ வேறொருவர் எய்து நம்மளை வீழ்த்த வேண்டாம். வலையில் விழுவதற்கு வேற வெளிகாரணிகளை blame செய்ய முடியாது. நாம் விழுவதற்கு நாமே தான் காரணமாகத்தான் இருக்க முடியும். நமக்கு அடுத்தவர்கள் மூலம் வரும் துன்பங்கள், கர்மபலன்கள் ஒருபுறம் என்றால் நாமே போய் விழும் வலைகள் மற்றவை. அவற்றில் முக்கியமானது காமம். இப்படி ஒருவன் சுயமாக போய் காமத்திலே விழுவதனாலேதான் காமவலை என்று பெயர் வைத்தார்கள். இதுவே இயல்பாய்த் தோன்றும் காதலை வருணிக்க காமபானம் தாக்கிற்று என்று சொல்வோம்.

ஆனா, மனித மனத்தோட இயல்ப அழகா சொல்லிருக்கார் சுவாமிகள். வலையில்பட்டு ஊசல் படும் பரிசு என்று ஒழிவேன்னு கேக்கறார். ஊசல்னா - ஊஞ்சல் மாதிரியான ஆட்டம்.

ஊஞ்சல் - அலுக்காத மகிழ்வு தரும் விளையாட்டு இல்லையா? கூட ஒருத்தர் ஆடக்கிடச்சுட்டா கேக்கவே வேணாம். ஆனா, ஊஞ்சல் விளையாட்டுல இருக்கற இடத்த விட்டு நகரவே மாட்டோம். முன்னயும் பின்னயும் போகிறா மாதிரி இருக்கும். எவ்வளவுக்கெவ்வளவு முன்னாடி போறோமோ, அவ்வளவு தூரம் மறுபடியும் நம்மை ஊஞ்சல் கயிறூ இழுத்து பின்னாடி தள்ளும். அதேபோல காமவலையில் விழுந்தவனையும் தப்பித்து போக முடியாதவாறு சிலந்தி வலையினைப் போல பிடித்துக்கொள்ளும்.

பொதுவாகவே குற்ற உணர்ச்சி என்பது மனித இயல்பில் மிகக்குறுகிய காலம் தான் நம் நினைவில் நிற்கும். இப்போ ஒரு திருட்டைச் செய்தோமானால், திருடிய ஐந்து நிமிடத்திற்கு திக் திக் என்று வேகமாக அடித்துக்கொள்ளும் மனது, அடுத்த ரெண்டு மணி நேரத்தில் ஒன்றும்தான் நடக்கவில்லையே, இன்னொரு பொருளைத் திருடித்தான் பார்ப்போமே என்று நினைக்கத் தயங்காது. அதுபோல "காமவலையிலிருந்து விடுபட வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். ஆனால், அதற்குண்டான திடத்துடனும் ஒழுக்கத்துடனும் என் மனம் தொடர்ந்து நிற்க இயலாமல், மறுபடியும் மறுபடியும் பழைய வலையில் சிக்கிய நிலைக்கே சென்று ஊசலாடுவதைப் போல் ஆடுகிறேனே. இது என்று தீரும்?" என்று அருணகிரியார் கேட்கிறார். 'ருசி கண்ட பூனை' என்று நாம் சொல்கிறோமே. அதுபோலத்தான். இது இயல்பு. இத்தகைய வலைகளிலிருந்து மீண்டு வருவது இறையருளன்றி நடக்காது.


//தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும் நிட்டூர நிராகுல நிர்பயனே//சயிலம் என்றால் மலை. இங்கே குறிக்கப்படுவது கிரவுஞ்ச மலை. தட்டுன்னா தடைகள். தட்டுகளையெல்லாம் ஊடுருவி, அவற்றை அற்றுப்போக செய்யும் படியான வேலாயுதத்தை வைத்து சூரனை அழிக்க தடையாய் வந்த கிரவுஞ்சமென்னும் பர்வதத்தையே தூளாக்கிய வடிவேலா! இந்த சிலந்தி வலையைப் போன்ற காமவலையை தகர்த்தெறிய எவ்வளவு நேரம் ஆகும். ஏன் இன்னும் செய்யாமல் என்னை இப்படி ஊசலாட விட்டு விளையாடுகிறாய்?

நிராகுலனே - என்றும் துன்பம் என்பதே இல்லாமல் இருப்பவனே. நிர்பயனே - ஏதொன்றுக்கும் பயமொன்று இல்லாதவனே..

-------------
கிரவுஞ்ச மலையை அழித்தவா! துன்பமில்லாதவா! பயமற்றவா! முருகா! காமவலையில் விழுந்து ஊசலில் தத்தளிக்கும் என் துன்ப நிலை என்று அழியும்?