Wednesday, September 12, 2007

16. என்கண் முன்னே வராதவன் இறைவனே அல்ல!

பேராசை யெனும் பிணியிற் பிணிபட்
டோ ரா வினையே னுழலத் தகுமோ
வீரா முதுசூர் படவே லெறியுஞ்
சூரா சுரலோக துரந் தரனே! - 16

//வீரா! முதுசூர் பட வேல் எறியும் சூரா! சுரலோக துரந்தரனே!//
ஒரு விஷயத்தைப் பற்றி விளக்கிச் சொல்லவேண்டுமெனில் அருணகிரிக்கு அருவியெனத் தமிழ் வந்து கொட்டும். திருப்புகழ், அலங்காரம், அனுபூதி என்று எல்லாவற்றிலும் அருணகிரியின் மொழியாளுமை கொட்டிக்கிடக்கின்றது. ஆனால் அவரோ இங்கே வீரா என்று எவ்வித அலங்காரமும் அன்றி விட்டிருக்கிறார். அருணகிரிக்கு வார்த்தைத் தட்டுப்பாடா? ஆம். தட்டுப்பாடுதான். ஏன்? முருகனின் வீரம் எப்பேர்ப்பட்டது? வார்த்தைகளில் வடிக்க முடியாதது. வீரன் என்றால் முருகன். அவனை மிஞ்சிய வீரன் கிடையாது. அதன்காரணமாகவே இங்கே வீரா என்று தொடங்கி...

முது என்பது பழமையைக் குறிப்பது. சூரபத்மனை ஏன் முதுமையான சூரன் என்று குறிப்பிடவேண்டும்? சூரத்தனம் சூரபத்மனின் பிறவிகுணம். சூரத்தனத்தில் முதியவன் அவன். நூற்றியெட்டு யுகங்களாய் அனைத்து பூவுலகங்களையும் ஆட்சிசெய்தான். ஆனால் திருப்தி ஏற்படவில்லை. சுரர்களையும் (தேவர்கள்) அடிமைப்படுத்தி அவர்களுடைய சுரலோகத்தை தன்வசப் படுத்தவேண்டும் என்று பேராசை கொண்டான். இந்த பேராசை என்னும் பிணி உண்டான நிலையில் அறிவுமழுங்கி இறைவனையே எதிர்க்க துணிந்தான். அதுவே அவனுடைய அழிவிற்கு வித்தானது. இப்படி பல்யுகங்கள் தன்னுடைய சூரத்தனத்தால் உலகங்களை ஆட்சிசெய்த சூரன் பேராசையின் பயனாய் தேவர்களை அடிமையாக்க, அவர்களைக் காக்கும் பொருட்டு அவதரித்து சூரன் மேல் வேல் தொடுத்து அவனுடைய ஆணவத்தை அழித்து தேவருலகத்தை காத்து அருளினான் கந்தன்.

//பேராசை எனும் பிணியில் பிணிபட்டு ஓரா வினையேன் உழலத் தகுமோ?//
ஆசையில்லாமல் மனிதன் கிடையாது. அது அறியாதவரா அருணகிரி? ஆண்டவன் அநுபூதி வேண்டுவதும் ஆசைதானே? அது நியாயமான ஆசைதானே? அது எப்போது பேராசை ஆகிறது?

சிவலோக ப்ராப்திக்கு நாம் செய்யவேண்டிய காரியங்கள் எத்தனையோ இருக்கிறது என்கின்றன வேதங்களும் அறநெறி நூல்களும். தர்மநெறிகளின் படி வாழ்க்கை வாழ்வது, உடல் சுத்தம், பொய் புரட்டு அல்லாமல் இருப்பது, அடுத்தவரை ஏமாற்றாமல் இருப்பது, வறியவர்க்கு உதவுவது, உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தைத் தவிர நேர்மையற்ற வழிகளில் பணம் ஈட்டாமல் இருப்பது, அனைத்துயிரிலும் ஈஸ்வரனை காண்பது, பெற்றோர்களை மதிப்பது, முன்னோர்களுக்கு செய்யவேண்டியதைச் செய்வது, குருசொற்படி நடப்பது, மது மாது போன்றவற்றிற்கு அடிமையாகாமல் இருப்பது என்று நமக்கு கொடுக்கப்பட்டுள்ள வாழ்வியல் நெறிகள் எத்தனையோ. அவற்றில் முடிந்த அளவு பின்பற்றுவது அல்லது அப்படி இருப்பதற்குண்டான நேர்மையான முயற்சியாவது செய்வது; இவை இவ்வுலக பிறவிக்கென்றால் ஆத்ம சுத்திக்காக கொடுக்கப்பட்டிருக்கிற காரியங்கள் இன்னும் பல. இப்படி வாழமுற்படுவோர் இறைவனை அடையவேண்டும் என்று வேண்டுவது நியாயமான ஆசை.

அதுவே தர்மத்திற்கு நேரெதிர் கோணலாகவே வாழ்க்கை வாழ்ந்துவந்தாலும் நானும் முருகனடி சேரவேண்டும் என்றால் அது பேராசை. நான் என் நிலையை உயர்த்திக்கொள்ளவே மாட்டேன் ஆனாலும் என்னை வந்து இறைவன் ஆட்கொள்ளவேண்டும். அப்படியில்லாதவன் என்ன இறைவன் என்று கேட்கலாம். அதற்கு இறைவன் வந்து கண்முன்தோன்றி விடை சொல்லமாட்டான். சொல்லவேண்டிய அவசியமும் அவனுக்கு இல்லை. கேட்க்ககூடிய அதிகாரமும் நமக்குக் கிடையாது. அப்படிப்பட்ட இறைவன் தேவையில்லை என்று கருதுவீர்களானால் தாராளமாக. இளமையும் உடல்வலியும் இருக்கும்வரை அனைத்துமே முறுக்குதான். ஆனால் 'விழித்துப் புகையெழப் பொங்கு வெங்கூற்றன் கழுத்திற் சுருக்கிட்டிழுக்கின்ற' பொழுது முறுக்கு நமுத்துப்போயிருக்கும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும்.

நம் கண்ணில் கோளாறை வைத்துக்கொண்டு அவனை நிந்திக்கும் நம்மீதும் அந்த "வைதாரையும் வாழவைக்கும்" கந்தன் கருணைகொண்டு நமக்கு வாழ்க்கையில் பல சம்பவங்களின் மூலம் பாடங்கள் சொல்லித்தருகிறான். சிலருக்கு முற்பிறவியின் பயனாய் காட்சியும் தருகிறான். ஏன், யாருக்கு, எதற்கு, எப்படியென்றெல்லாம் கேள்விகள் கேட்கலாம். அருணகிரிக்கு அருணை கோபுரத்தில் இறைவன் காட்சிகொடுத்தானே.. நாமும் ஈபில் கோபுரத்திலிருந்து குதிப்போமா என்று குதர்க்கம் பேசுவதற்கு முன் அடியார்களின் அந்த உயர்ந்த நிலையில் (டவரின் உச்சியில் அல்ல.. :)) ) நாம் இருக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளவேண்டும். எண்ணமும் செயலும் இறைவனையே குறித்து இருந்தால் தானே வருவான் கந்தன். அதுவரையில் எல்லாமே பேராசைதான்.

இங்கே அவனருளாலே அவன் தாள் வணங்கிய அருணகிரி சொல்வது: பேராசை எனும் பிணியில் பிணிபட்டு - உலக வாழ்வில் நமக்கு வரும் பேராசைகளைப் (தகுதியைத்தேட முற்படாமல் இறைவனை அடைய வேண்டும் என்பதும் சேர்த்து) பற்றிச் சொல்லி அப்பேர்ப்பட்ட பேராசைகளின் பிடியில் சிக்கிய எனக்கு அவற்றிலிருந்து விடுவித்துக்கொள்வது எப்படி என்று அறிந்துகொள்ள முடியாவண்ணம் என் அறிவு மழுங்கிப் போய் கிடக்கிறது. இந்த ஊசலில் சிக்கி நான் இன்னும் எத்தனை நாள் உழலுவது? வந்து அருளாயோ கந்தா....

--------------------------------------------------
முதுசூரனை அழித்து தேவருலகத்தை காத்த சூரா! வீரா! பேராசையின் பிடியில் சூரபத்மனைப் போல் சிக்கி, அதிலிருந்து விடுபட வழிதெரியாமல் உழலுவது இன்னும் எத்தனை நாளைக்குத்தானோ? வந்து காத்தருளாயோ?

Thursday, September 06, 2007

15. எட்டா எட்டு!

முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங்கவ எண்குண பஞ் சரனே!

//பொருபுங்கவரும் புவியும் பரவும் குருபுங்கவ! எண்குண பஞ்சரனே//

தேவர்களின் தொழில் ஈசனின் கார்யத்தை முடிப்பது என்றால் அதைத் தடுப்பது அசுரரின் கார்யம். தேவர்களின் துயர்துடைக்கவே அவதரித்தவன் கந்தன். தங்களை அடிமையாக்கி சேவகம் புரியவைத்த சூரனையும் அவன் படையினரையும் வதைத்து தேவலோகத்தை மீட்டுத்தந்தவன் அந்த தேவசேனாதிபதி. ஆகவே தேவர்களின் நன்றிக்கு என்றென்றைக்கும் பாத்திரமானவன் குமரன். இதில் பொரு என்றால் போர். புங்கவர் என்பது தேவர்கள். போரின் போது தேவர்கள் தொழுது துணைக்கழைக்கும் பேராற்றல் பொருந்திய வீரனும்..

புவியும் பரவும் என்றால் அனைத்து புவனங்களும் தொழும் என்று பொருள். குருபுங்கவன் - குருவென்று அறியப்படுவர்களில் முதன்மையானவன். ஈசனுக்கே குருவானவனைத்தவிர இந்தத் தகுதியுடையவன் ஒருவனும் உளனோ? அந்தச் சுவாமிநாதனே குருபுங்கவன்.

இந்தக் குருபுங்கவன் எப்பேர்ப்பட்டவன்? அஷ்ட மாகுணங்கள் என்று மானிடர்தம் வாழ்வினிலே கடைபிடிக்கவேண்டிய உயர்ந்த குணங்களைக் சொல்வதுண்டு. ஆனால் இங்கே அருணகிரியார் குறிப்பிடுவது இறைவன் என்று அறியப்படுவதற்குண்டான எட்டு குணங்கள். அவை முற்றிலுமாக நாம் அறிந்துகொள்ள முடியாது. அவற்றை அறிந்துகொள்ள இறைவனின் அனுபூதி இன்றி முடியாது. எனினும் 1. உல்லாச நிராகுலன் 2. தணியா அதிமோகன், தயாபரன் 3. அவன் உண்மையான தன்மையை அவனருளால் அன்றி அறிய முடியாதவன் 4. சிந்தாகுலமானவை தீர்த்தருளவல்லவன் 5. நெகிழ்ந்துருகத் தஞ்சத்தருள் சண்முகன்
6. சமரம் பொருதானவ நாசகன் என சிலவற்றை அருணகிரியின் பாடல்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

இதுதவிர யஜுர் வேதத்தில் நமகத்தில் அனைத்திற்கும் ஆதிபரம்பொருளான ஈசனின் குணங்களாய் பலவற்றைத் தொகுத்து மனிதர் அறியத் தரப்பட்டிருக்கிறது. (அதனாலேதான் வேத முழுவதும் கற்க முடியாதோர்கூட ருத்ராத்யாயம் செய்தாலே போதுமானது என்று சொல்லிவைத்திருக்கிறார்கள். அதுபற்றி பிறிதொரு சமயம்..)

இப்படி இறைவனின் குணங்களை வெவ்வெறு விதமாய் பெரியோர் தொகுத்திருக்கின்றனர். அனைத்தையும் அறிவதோ புரிந்துகொள்வதோ நம்மால் ஆகாத செயல். அதனால் எட்டுகுணங்கள் என்று அருணகிரி குறிப்பிடுபவை இறைவன் என்று அறியப்படுதற்கு அடிப்படை குணங்கள் என்று கொள்வோம். இப்படி சிறந்ததான எட்டுக்குணங்களை உடைய பஞ்சரன். பஞ்சரன் என்றால் உடல் அல்லது கூடு என்று பொருள். இந்த குணங்களை உடையவன் முருகன் என்று சொல்வது தவறு என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் இறைவனின் குணங்களையும் விசேஷத்தையும் வரையறுக்க மூடர்களாகிய நாம் யார்? எட்டோ நூறோ, எண்களில்தான் எண்ணிவிட முடியுமா? அடியார்களின் தலைவன் அருணகிரி தாம் உணர்ந்து அறிந்ததை, நம் பொருட்டு எளிமைப்படுத்தி தந்திருப்பார் என்றே கொள்வோம்.

இறைக் குணங்களின் ஊற்று முருகன் என்று சொல்வதுதான் பொருத்தம். ஏனெனில் தெய்வங்களில் முதன்மையானவன் சர்வேஸ்வரன். சர்வம் சிவமயம் என்று சொல்லாமல் சிவமயம் என்றே அடியார்கள் கூறுவதன் தத்துவம் அனைத்துமான சர்வமும் சிவனுள் அடக்கம் என்பதனால்தான். அனைத்துயிரின் மேலும் ஈசனின் 'பால்நினைதூட்டும் தாயினும் சாலச்சிறந்த' கருணையின் வடிவே முருகன். ஆக அவனே அனைத்து இறை குணங்களுக்குமான ஊற்று.

இப்படி போர்சமயத்திற் தேவர்களால் தொழப்படுபவனும், அகிலபுவனங்களாலும் வணங்கப்படுபவனும், குருசிரேஷ்டனும், எட்டு இறைகுணங்களின் பிறப்பிடமானவனுமான அந்த ஞானபண்டிதனை......

//முருகன் குமரன் குகனென்று மொழிந்து உருகுஞ் செயல்தந்து உணர் வென்றருள்வாய்//
முருகன் என்ற சொல்லிற்கு மட்டும் ஒரு நாள் பொழுது பொருள் சொல்லிக்கொண்டே போகலாம். குமரன் குகன் என்றே உன் திருப்பெயர்களை மட்டுமே சதா சர்வகாலமும் வெறும் வாய்ப்பேச்சாய் மட்டும் அல்லாமல் எழுத்தாயும் எண்ணமாயும் கொண்டு (அதனாலேயே மொழிந்து) என் எலும்பெலாம் உருகும்படிச் செய்து மெய் வழியை அருளி எனக்கு அந்த பேரானந்த உணர்வை தந்தருளாயோ கந்தா என்று கேட்கிறார் அடிகளார்.

---------------
'தேவரும் மனிதரும் போற்றி வணங்கும் முருகனை, குருஸ்ரேஷ்டனை, எண்குணத்திற்கும் உறைவிடமாய் திகழ்பவனை; எந்நேரமும் அவன் நாமாக்களை மட்டுமே சொல்லும் திறத்தைத் தந்து; மெய்ப்பொருள் காணும் வழியை தாராயோ கந்தா' என்று வணங்குகிறார் அருணகிரியார்.

Thursday, June 07, 2007

26. அறிந்ததும் அறியாததும்...

இணக்கறியீர் இதமறியீர் இருந்தநிலை அறியீர்
          இடமறியீர் தடமறியீர் இவ்வுடம்பை யெடுத்த
கணக்கறியீர் வழக்கறியீர் அம்பலத்தே மாயைக்
          கலக்கமற நடிக்கின்ற துலக்கமறி வீரோ?
பிணக்கறிவீர் புரட்டறிவீர் பிழைசெயவே யறிவீர்
         பேருணவைப் பெருவயிற்றுப் பிலத்திலிட அறிவீர்
மணக்கறியே பிணக்கறியே வறுப்பேபேர்ப் பொரிப்பே
         வடைக்குழம்பே சாறேவென் றடைக்க அறிவீரே
                                                                                                 -வள்ளலார்


பலபிறவிகளுக்குப் பிறகு மானுடப் பிறப்பை அடைந்த நாம் நம் வாழ்க்கையில் எதை விடுத்து, என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று சற்றே கடுமையான மொழியில் கடிந்துகொள்கிறார் அடிகளார் இப்பாடலில். எளிமையான பாடல்தான்.


//இணக்கறியீர் இதமறியீர் இருந்தநிலை அறியீர் இடமறியீர் தடமறியீர் இவ்வுடம்பை யெடுத்த கணக்கறியீர் வழக்கறியீர்//


இணக்கறியீர் - இணக்கம் அறியீர். ஒருவருக்கு ஒருவர் அநுசரணையாய் உதவி செய்து இணக்கமாக வாழ அறியவில்லை நாம். மாறாய், இருக்கும் குறைந்த வாழ்நாளில் பக்கத்துவீட்டினருடன் நடக்கும் குழாயடிச்சண்டை தொடங்கி அண்டைநாட்டின் வளம்சுருட்ட உலகப்போர் வரை நடத்துகிறோம்.

இதமறியீர் - இதமாய் பதமாய் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டாலே உலகில் பலபிரச்சனைகள் தீர்ந்துவிடும். ஒவ்வொருவரும் முறுக்கிக்கொண்டு வறட்டுப் பிடிவாதம், விதண்டாவாதம் என ஈகோவை திருப்திசெய்ய வீண் சவடால் செய்வதாலேயே பிரச்சனைகள் பெரிதாகின்றன. முடிவற்று நம்மை அலைக்கழிக்கின்றன.

இருந்தநிலை அறியீர் -
நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கைக்கு அடிப்படையானது என்ன என்பது அறியோம். இடமறியீர் - நாம் போய்ச் சேரவேண்டிய இடம் யாது என்பது அறியோம். இது என்னடா, போகவேண்டிய இடம் தெரியாதா என்று நினைக்கலாம். அது இறைவனது திருவடி என்பதில் சந்தேகமில்லாமல் இருந்தாலும் எந்த ஞானவழியில் சென்றால் அதை அடையாலாம் என்று அறிய முற்பட மாட்டோம். முயற்சி அற்ற நிலையில் போகவேண்டிய இடமும், பற்ற வேண்டிய தடமும் மறந்து இகமே பரமென மாயையில் வீழ்ந்து காலத்துக்கும் பிடிப்பின்றி அலைவோம்.

இவ்வுடம்பை யெடுத்த கணக்கறியீர் - நாம் யார் என்று தொடங்கி ஏன் இந்த பிரபஞ்சத்தில் இந்த உடலில் நாம் இருக்கின்றோம் என்ற இறைவனின் கணக்கையாவது அறிவோமா? அல்லது அறியத்தான் முயல்வோமா? மாட்டோம்.

வழக்கறியீர் - ஒரு வழக்கு என்று வந்தால் அத்தியாவசியமானவை: நீதியும், தர்மமும், நேர்மையும், நியாயமும், கருணையும், அஹிம்சையும், மன்னிக்கும் குணமும்: இவற்றில் ஒன்றாவது அரியதான மானிடப்பிறவி பெற்ற நாம் அறிவோமா? மாறாய் குரோதமும், கோபமும், கர்வமும், வன்முறையும், வஞ்சனையுமே அறிவோம்.


//அம்பலத்தே மாயைக் கலக்கமற நடிக்கின்ற துலக்கமறி வீரோ?//


இப்படி நம் பிறப்பிற்கும், வாழ்விற்கும், உய்விற்கும் அடிப்படையான ஒன்றையுமே அறியாத நாம், மாயை என்னும் திரைவிலகாமல் சிற்சபையில் பிரபஞ்சமும் மயங்க ஆடுகின்ற நாயகனின் ஆட்டத்தின் தன்மையை, அதன் அருமையை, அதன் கம்பீரத்தை, அதன் முழுமையை: அவன் ஈடற்ற விளையாட்டை அறியவும் முடியுமோ?

அதிமுக்கியமான இறைவனை நாடும் வழியை விட்டு எதை தேடுகிறோம்? எதில் திளைக்கிறோம்?


//பிணக்கறிவீர் புரட்டறிவீர் பிழைசெயவே யறிவீர்//


பிணக்கறிவீர்
- சண்டை சச்சரவு செய்ய முழுவதும் அறிவோம்.

புரட்டறிவீர் - பொய், புரட்டு, சூது, ஏமாற்றுவித்தைகளை கற்றுத் தேர்ந்தோம். பிழைசெயவே அறிவீர் - நல்லது எது உகந்தது எது உய்விக்கும் வழியெது எனத் தெரிந்தும் முன்னோர்வழி படித்தும்; அறிந்த நல்வழியை முற்றிலும் துறந்து, அவ்வழிக்கு எதிர்மறையாக எது பிழையானதோ எது பாவமோ அதைச் செய்வதையே தொழிலாய் அறிந்தவர்கள் நாம்.

இவையெல்லாவற்றையும் விட நாம் நன்கு அறிந்தது எது?


//பேருணவைப் பெருவயிற்றுப் பிலத்திலிட அறிவீர் மணக்கறியே
பிணக்கறியே வறுப்பேபேர்ப் பொரிப்பே வடைக்குழம்பே சாறேவென் றடைக்க அறிவீரே//




பெரும் கொள்திறன்கொண்ட வயிற்றிற்கு மூச்சுமுட்ட உணவிட அறிவோம். ஊன்கறியும், மரக்கறியும் அதை வகைவகையாய் பொரித்தும் வறுத்தும் வாட்டியும் வதக்கியும் சாறெடுத்தும் வாயில் மூச்சுமுட்ட முட்ட அடைக்க நன்றாய் அறிவோம்.

இந்த அரியவாய்ப்பான மனித்தப்பிறவியிலும்; அடுத்தவேளை உணவிற்கும், பொழுதுபோக சூதும், பொருளீட்ட பொய்யும் போரும் எனச் செய்துவந்தால் அண்டமெங்கும் அதிர ஆடும் அம்பலத்தரசனின் விளையாட்டைப் புரிந்து அவன் கழல்நாடி அவனை அடையும் பிறவிதான் பின்னெப்போது என்று சற்றே கடுமையாக நம்மிடம் கேட்கிறார் அடிகளார்.