Monday, February 20, 2006

3. மெய்ப்பொருளாவது யாது?

வானோ புனல்பார் கனல்மா ருதமோ
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனையாண் டவிடந்
தானோ பொருளா வதுசண்முகனே. 3


எளிமையான தமிழ். எல்லாருக்கும் புரியும் வகையில். ஆனா, எது மெய்ப்பொருள்? எப்ப அது புரியுங்கற முக்கியமான தத்துவத்தை சொல்கிறார் அருணகிரிநாதர். அது புரிஞ்சா போதும். வேறொன்னும் தேவையில்லை. சரி, ஸ்கூல் தமிழ் வகுப்பு ஸ்டைல்ல பார்ப்போமா? யார்கிட்ட என்ன கேக்கறார்?

சண்முகனே - ஆறுமுகத்தோனே!

வானோ - ஆகாசமோ?

புனல் - நீர் நிலைகளோ?

பார் - இந்த உலகமோ?

கனல் - நெருப்போ?

மாருதமோ - காற்றோ?

ஞானோதயமோ - ஞானம் (விஷய) பெறும் நேரமோ?

நவில்நான் மறையோ - எல்லாரும் படிக்கும் நான்கு வேதங்களோ?

யானோ - நானா?

மனமோ - என் மனமா?

எனையாண் டவிடந்தானோ - இந்தப் பாட்டுலேயே முக்கியமானது இதுதான்.

ஆறுமுகா. மெய்ப்பொருள்னா என்ன? பஞ்ச பூதங்களா? இருக்க முடியாது. ஏன்னா, பஞ்ச பூதங்களுக்கெல்லாம் அதிபதி நீ தானேப்பா. உனக்குள்ள அடங்கற விஷயங்கள் மெய்ப்பொருளா இருக்க வாய்ப்பில்லை. அதே மாதிரி தான் வேதங்களும், ஞானமும். அவையும் உனக்குள்ள அடங்கிடும். நான்? 'நான்'கறத விட்டதால தானே எனக்கே மெய்ப்பொருளச் சொன்னாய். ஸோ, அதுவா இருக்க சான்ஸில்லை. என் மனமா? அதுக்கும் வாய்ப்பில்லை. ஏன்னா, போன பாட்டுல பார்த்த மாதிரி மனசுக்குள்ள கட்டுப்படறது பரம்பொருள் அல்ல. அதனுடைய ஒரு சின்ன அம்சமே. சரி அப்ப எதுதான் மெய்ப்பொருள்? எங்க தான் இருக்கு?

எனையாண் டவிடந்தானோ தான் இங்க முக்கியம். தானேன்னு சொல்லிருக்கணும். புதிரா இருக்கட்டுமேன்னு தானோன்னு சொல்லிட்டார் அருணகிரி. ஒருவேளை அவருக்கும் சந்தேகம் இருந்ததோ என்னவோ? ஆனா அநுபூதி எழுதுனவருக்கு சந்தேகம் வருமா? எவ்வளவு பெரிய ஞானி அவர்? மிச்ச எல்லாத்துக்கும் இல்லாம எனை ஆண்ட இடத்துக்கு மட்டும் 'தானோ' போட்டுருக்கார்? ஏன்னா, இதுல இடம் கறது physical location அ குறிக்கவில்லை. மாறாக என்னை நீ ஆட்கொண்ட சமயம்னு (event) பொருள் கொள்ளலாம். ஆட்கொண்ட சமயம்னா என்ன? போன பாட்டுல பார்த்தோமே. "என்னை யிழந்த நலம்" அதுவே தான். அதாவது நானென்பது மறைந்து பரமாத்மாவோடு ஒன்றாக கலக்கும் சமயம். அந்த நிலை. மெய்ப்பொருள்னா என்னன்னு அப்பதான் புரியும். மிச்ச எல்லாமே காலத்தால் அழிய/மாறக்கூடியவைன்னு சொல்றாரு. இதுல பொருளாவது சண்முகனேன்னு சொன்னாலும், அதாவது இதுதான் பொருளா சண்முகான்னு கேள்வி கேட்டாலும்: கேள்வி கந்தனுக்கில்லை. நமக்கே.

ஜிராவின் பதிவு

Tuesday, February 14, 2006

2. எனையிழந்த நல்ஞ் சொல்லாய்

உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனு நீயலையோ
எல்லாமற என்னை யிழந்த நலஞ்
சொல்லாய் முருகா சுரபூ பதியே. (2)

உல்லாச நிராகுல யோகவிதச் சல்லாப விநோதனு நீயலையோ?
எப்போதும் சந்தோஷமா, கவலைகளே இல்லாம இருக்கறவன் முருகன். கவலையா இருக்கும்போது முருகனோட பிம்பத்த நினச்சு பாருங்க. பன்னிரண்டு கை ஆறுமுகனோ, இல்லை கோவணத்தோட நிற்கும் பழனியாண்டியோ. உங்களுக்கு எந்த உருவம் பிடிக்குமோ அதை நினைச்சுக்கலாம். தெளிவு கிடைக்கும். அமைதி வரும். சும்மா ஒரு ஆபீஸ்ல மேனேஜருக்கே எவ்வளவு கஷ்டம். நம்ம ஜோசப் சார் 'திரும்பிப் பாக்கறேன்' படிச்சீங்கன்னா புரியும். எத்தன பேர்னால எத்தன பிரச்சனைகள். அப்படி பாத்தா, முருகன் யாரு? அண்டசராசரங்களும் அதிபதி. எல்லாதுக்கும் CEO அவன்தான். சுரபூபதி. இதுக்கு ஜிரா ஏற்கனவே சொல்லிட்டார். அதாவது தேவர்களின் தலைவன். அவர்களின் சேனாதிபதி. அவங்களோட மாப்பிள்ளை. அவன் எப்படி எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கான்? எப்படி எப்பவும் கோவமோ எரிச்சலோ படாம யோக நிலையில் இருந்துகிட்டு இதமா, பதமா அடியார்களுக்கு அருளுகிறான்? அதுக்கு அடுத்த வரிகளை படிச்சா புரியும்.

எல்லாமற என்னை யிழந்த நலஞ்சொல்லாய் முருகா சுரபூ பதியே
முருகன குழந்தைன்னு சொல்றோம். அப்படித்தான் பாக்கறோம். நினைக்கறோம். சிலைகளா வடிச்சி வெச்சுருக்கோம். அவனும் அப்படிதான் வந்து பழநி ல நிக்கலையா? ஏன் குழந்தை? ஏன் குமரன்? உருவமும் அரூபமும் எல்லாமுமாய் பிரகாசிக்கும் பரமாத்மாவுக்கு கையும், காலும் வரைஞ்சு நாம எளிதா identify பண்ணிக்கறா மாதிரி முருகனுக்கு உருவம் கொடுத்து வச்சிருக்கோம். அவ்வளவு தான். தெய்வத்தை புரிஞ்சுக்கறதுல ரெண்டு வகை இருக்கு. இதுக்கு பரமாச்சாரியாள் அழகா விளக்கம் சொல்லுவார்.

கடவுளை எப்படி புரிஞ்சிக்கிறது? பக்தி மூலமா மட்டும் தான் முடியும். ஆனா, எதுமேல பக்தி வைக்கணும், என்னன்னு பக்தி வைக்கணும்னு தெரியாம எப்படி பக்தி பண்ணுவது? இது ஒரு contradiction, இல்லியா? அதுக்காக Starter Kit மாதிரி தான் முருகன், கண்ணன், சிவன், பார்வதின்னு ஒரு உருவம் கொடுத்து, அதுல நமக்கு எது பிடிச்சிருக்கோ அதுமேல பக்தி பண்ணலாம். ஒண்ணுமேயில்லாம எப்படி செய்யறது? பக்தியில் சில நிலைகள் இருக்கு. முதல் நிலைதான் நம்முடையது. அதாவது, நான் வேறு கடவுள் வேறு பூதங்கள் வேறு என்று பிரித்து இதில் 'நான்' முக்கியமாக போய்விடுகிறது. இந்த 'நான்' இருக்கறவரைக்கும் உண்மையாக கடவுளை, அவன் தத்துவத்தை அறிய முடியாது. நான் இருக்கறவரைக்கும் பஞ்சபூதங்களால் ஆனது மட்டும் தான் புரியும், தெரியும் நமக்கு. அதனாலேயே, நம்ம மேல இருக்கற ஆசையினால இப்படி எளிதா புரிஞ்சிக்கறா மாதிரி பரமாத்மா தன் மாயையினாலே எளிய, சிறிய வடிவங்களில் நம்முன் வருகிறது. ஏன்னா, குறைஞ்சு வராமல் போனால் அவருடைய முழு சுவரூபத்தை நம்மால் comprehend பண்ண முடியாது. நம் அறிவு அவ்வளவுதான்.

எளிய உதாரணம். நிறைய பேர் உங்க டேபிள்ல globe வச்சுருப்பீங்க. அது இந்த உலகத்தோட desktop version. நமக்கு எளிதா புரியறதுக்காக simplify பண்ணி வச்சுருக்கோம். அதுவே உலகமாகாது. அதுவே உலகம்னும் நினைக்கமுடியாது. அதே மாதிரி தான். கிருஷணனை யசோதா உரலில் கட்டிப்போட்டாளா? அவ கட்டிப்போட்டது வேதங்களின் சாரம், உபநிஷத்துகள் பேசும் தத்துவம் மற்றும் எல்லாம் இருப்பதுவும் இல்லாததுமாக இருக்கற பரமாத்மாவா? அவ்ளோ பெரிய பரமாத்மாவை வெறும் உரலில் கட்டிப்போட முடியுமா? முடியாதில்லியா? அப்புறம் எப்படி கண்ணனைக் கட்டிப்போட்டாள்? உபநிஷத்துகளின் தத்துவத்தை கட்டிப்போட முடியுமா? ஏன் கட்டிப்போட முடிஞ்சதுன்னா, வந்தது முழு ரூபம் இல்ல. தன் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட சுயரூபத்தை சின்னதாக நமக்கு புரியும் வகையில் தன்னைக் குறுக்கிக்கொண்டு வந்ததால் தான் கட்டிப்போட முடிந்தது. அது மாதிரி 'நான்' இன்னும் இருக்கும்வரையில் நம் மனசுக்குள் பூரணமான பரமாத்மாவைக் கட்டிப்போட முடியுமா? முடியவே முடியாது. நாம் அவனை பார்க்கவேண்டும் என்கிற ஆசையினால் தன்னைக் குறுக்கிக்கொண்டு, நமக்கு புரியும் வகையில், பஞ்ச பூதங்களின் அடிப்படையில் வந்து காட்சி தருகிறான் இறைவன். நம்மால் கட்டிப்போடக் கூடிய குட்டி சைஸில் வந்து நம் மனதில் உக்கார்ந்து கொள்கிறான். இது ஆரம்ப நிலை. இந்த நிலையில் கடவுள் மேலும் அன்பு உண்டு. மற்ற worldly விஷயங்களிலும் அன்பு சம அளவில் இருக்கும்.

அடுத்த நிலையில், மற்ற அன்புகள் மறைந்து முழுமையாக இறைவன் மேல் மட்டுமே அன்பு வைத்தால், 'நாம், நான்' என்பதெல்லாம் மறைந்துவிடும். 'ஆஹா, இத்தன நாள் உன்னை இதுன்னு நினச்சேனே. நீயாரு, உன் தத்துவம் என்ன என்று புரிகிறதே' என்று பாடத்தோன்றும். பரமாத்மாவோடு முழுமையாக கலந்துவிடும் உன்னத நிலையது. அவனுடைய தத்துவம் புரியும் சரி, அப்ப என்ன விசேஷமா புரியும்? பார்க்கறதெல்லாம் பரமாத்மா என்ற தெளிவோடு, பார்க்கிறதும் பரமாத்மா என்று புதிதாக புரிய வரும். கடலில் மிதக்கும் ஐஸ்கட்டி மாதிரி தான் நாமும் இருக்கிறோம்னு புரியும். அது என்னிக்கு புரிகிறதோ, நான் என்பது மறைந்து, ஐஸ்கட்டி உடனே பரமாத்மா என்னும் கடலில் கலந்துவிடும். அப்படி கரைஞ்சவர் அருணகிரிநாதர். அதைத்தான் "எனை இழந்த நலம்"னு சொல்றார். அவருக்கு புரிஞ்சுடுச்சு. ஆனா, அடுத்தவங்களுக்கு, நம்மளப் போன்ற சாமானியர்களுக்கு எப்படி விளக்கறதுன்னு நீயே சொல்லிடுப்பா முருகான்னு முருகன் கிட்ட சொல்றாரு.

Monday, February 06, 2006

10. உவட்டாமல் இனிப்பதுவே!

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுஞ்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.


போன பதிவில எப்படி இறைவனை வணங்க வேண்டுமென்று வள்ளலார் சொல்லியிருந்தார் என்று பார்த்தோமில்லியா? இந்தப் பாட்டுல பாருங்க. இறைவனப் பாடினா எப்படி இனிக்கும், எப்படி சுவைக்கும்னு உவமைகள் சொல்றாரு. அந்த அநுபவத்திற்கு ஈடு இணை கிடையாதுன்னாலும், எப்படி இனிக்கும்னு நமக்குப் புரியறா மாதிரி தோராயமா சொல்றார்.

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
இதுக்கு ரெண்டு விதமா பொருள் எடுத்துக்கலாம். ஆனா, அடிப்படைக் கருத்து ஒன்றே.

வானில் கலந்திருக்கும் மாணிக்கம் போன்ற விலைமதிக்க முடியாதவனே, அளவறிய முடியாதவனே உன் அருளால் நமக்குக் கிடைக்கப்பெற்ற திருப்பாடல்களை...

இன்னொன்னு, மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம். திருவாசகத்துக்கு உருகாதார்னு தமிழில் ஒரு சொலவடை கூட இருக்கே. அப்படி எத்தனை கனமான மனதையும் உருக்கக்கூடிய தன்மையைப் பெற்றது திருவாசகம். அது இறைவனைப் பற்றியே பாடுவதாலே தான் அத்தனை சிறப்பு. அம்மாதிரி இறைவனைப் பாடி அவனோடவே இரண்டறக் கலந்த மாணிக்கவாசகா! உன் திருவாசகத்தை நான் படிக்கும்போது...


நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
நான் என்னை மறந்து அவனுடன் கலந்து திருப்பாடல்களை (or திருவாசகத்தை) பாடும்போது எப்படி இருக்கு? கருப்பஞ் சாறுன்னா கரும்பு ஜூஸ். நம்மூர் திருவிழாலேலாம் பாத்தா நீலக் கலர்லே ஒரு மஷின் இருக்கும். அதுல கரும்ப இந்தப் பக்கம் உட்டாக்க, அந்தப் பக்கம் ஜூஸா வரும். கரும்போட சுவை எப்படி இருக்கும்னு சொல்லனுமா என்ன? எல்லா கரும்பும் நல்ல கரும்பில்ல. சிலதுக்கு ஸ்பெஷல் டேஸ்ட் இருக்கும். மலைப்பழம், ரஸ்தாளின்னு நாம தேடிப்போய் வாங்கறதப் போல. இல்ல? வெளிநாட்டுல கிடைக்கற, ஈக்குவேடார் ப்ரேஸிலேர்ந்து வர்ற வாழைப்பழமெல்லாம் பெரிசா இருக்குமே தவிர நம்மூர்ல கிடைக்கற அளவிற்கு சுவையா இருக்காது.

அந்த மாதிரி நல்ல கரும்பு ஜூஸோட...


தேன்கலந்து பால்கலந்து செழுஞ்கனித்தீஞ் சுவைகலந்
கரும்பு ஜூஸே இனிப்பா இருக்கும். ஆனா அந்த இனிப்பு இறைவனப் பாடும்போது கிடைக்கும் இனிப்புக்கு இணையாகாதாம். அதனால அந்த மாதிரி நல்ல கரும்பு ஜூஸுலே தேன் கலந்த மாதிரி இருக்கு. தேன் மட்டுமா? நல்ல அருமையான கெட்டி எருமைப் பாலையும் லிஸ்ட்ல சேர்த்திருக்காரு. இதுவே திகட்டும்னு நினைக்கறவங்கள பார்த்து கிண்டல் செய்யறா மாதிரி கரும்பு ஜூஸ், தேன், பாலோட சேர்த்து உலகத்துல இருக்கற அத்தனை சுவையான பழங்களையும், அவற்றின் சுவைகளையும் சேர்த்து மிக்ஸியில் ஒரு அடி அடிக்கறார். படிக்கறத நிறுத்திட்டு வள்ளலார் சொல்ற cocktailஓட திதிப்பு எப்படி இருக்குமுன்னு ஒரு நிமிஷம் கற்பனை பண்ணிப்பாருங்க. திகட்டுதில்ல?

தென் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.
இதோட நிறுத்திட்டா எப்படி? பாடும் போது அவரோட உடலும், உயிரும், ஆன்மாவும் கலந்தில்ல பாடுது? அதத்தானே போன பதிவில சொன்னாரு. இத்தனை இனிமையான விஷயங்கள் கலந்தா மாதிரி இருக்கு. சுடச்சுட ஜாங்கிரி பண்றாங்கன்னு வச்சுக்கோங்க வீட்ல. ரொம்ப பிடிக்கும்னு சொல்லி எவ்வளவு திம்பீங்க? அஞ்சு ஆறுக்கு மேல உள்ள போகாதில்லீயா? ஏன்னா, எவ்ளோ தான் புடிக்கும்னாலும் திகட்டிப்போயிடும். அளவுக்கு மிஞ்சினால்னு நம்ம மக்கள் சொல்லி வச்சுட்டு போயிருக்காங்களே. ஆனா, இதெல்லாம் சேர்த்து இவ்ளோ இனிமையா இருக்குது உன்னப் பத்திப் பாடறது. ஆனாலும், எவ்வளவு இனிமை, திதிப்புன்னு சொன்னாலும் திகட்டாமல் இனிச்சிகிட்டே இருக்கே உன் பாட்டெல்லாம்னு சொல்றார்.


-------
இந்தப்பாட்டும் நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும். இதே போல இன்னொரு பாட்டும் இருக்கு. அதுதான் அடுத்தது. ஸ்கூல்-ல படிக்காம போனவங்களே கிடையாதுன்னு சொல்லலாம்னு வச்சுக்கங்க. ஈஸியா guess பண்ணலாம். யாராவது பண்றீங்களான்னு பார்ப்போம்.

Thursday, February 02, 2006

9. அனுபவங்காண் பெருந்தகையே!

வள்ளலாரின் பிரபலமான பாடல்களில் ஒன்று இது. நம்மில் பெரும்பாலானோர் பள்ளிநாட்களில் இப்பாடலை மனப்பாடம் செய்திருப்போம்.

தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத் தினந்தோறும்
நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாஒன்றோ
ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும்
தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே.

தேன்படிக்கும் அமுதாம் உன்திருப்பாட்டைத் தினந்தோறும்
பரமேஸ்வரனின் புகழ்ப்பாடும் பாட்டெல்லாம் பொதுப்பாட்டே. புதுப்பாட்டே என்று முன்னர் பார்த்தோம். அவை திருப்பாட்டும் அல்லவா? இங்கு திரு என்பதற்கு புனிதமான என்று அர்த்தம் கொள்வோம். அவனைப் பாடும் பாட்டுகள் எத்தகையவை? பொதுவாகவே, ஒரு மனிதரைக் குறித்த பாட்டைவிடவும் இறையின் மீது பாடப்படும் பாடல்களுக்கு சுவை அதிகம். இந்த ஒப்பீடே தவறு என்று நீங்கள் சண்டைக்கு வரலாம். ஆனாலும், வித்தியாசத்தை உணர்ந்துகொள்ள உதவும் என்பதால்.

'என் தலைவா, நீ இருக்க எனக்கு என்ன கவலை? என் மன்னவா, உன்னை இந்த நாடே போற்றுதே!' என்று இளையத் தளபதி விஜயைக் குறித்து பாடலாம். அப்படி பாடல்கள் வந்தும் உள்ளன. இவர் தமிழ்சினிமாவின் இளையதளபதி. இன்னொரு இளைய தளபதி இருக்கிறான். அவனே அண்டசராசரங்களுக்கும் உண்மையான இளைய தளபதி. வேறு யார்? என்றும் இளையவனான தேவசேனாதிபதியான முருகனே. ஒருவர் மேல் பாடப்படும் பாடலை ஒரு வரிகூட மாற்றாமல் மற்றவர்க்கும் பாடமுடியும். மேற்சொன்ன உதாரணப் பாடலையே எடுத்துக்கொள்ளுங்கள். அது விஜயின் அடுத்த படத்தில் அதிரடி எண்ட்ரி பாடலாக இருக்கலாம். அல்லது, கோயிலில் முருகனை நினைத்து இட்டுக்கட்டியும் பாடலாம். இல்லையா? ஆனால், எது தித்திக்கும்? பக்தியுடன் பாடப்படும் கந்தனைக்குறித்த பாடலே தித்திக்கும் என்ற முடிவுக்கு வர சிந்திக்கவும் வேண்டுமா? ஏன் என்ற கேள்வியும் வருகிறதல்லவா? காரணம் ஒன்றுமில்லை. இறைவனின் திருநாமங்களையும், அவன் புகழையும் பாடும்போது அவனின் அருளையும் இயல்பிலேயே அப்பாடல் பெற்றுவிடுகிறது. சுருதிச் சுத்தமாக பாடவேண்டுமென்பது கூட இல்லை. பஜனைக் கோஷ்டிகளை கேட்டிருக்கிறீர்கள் தானே? ஆளாளுக்கு ஒரு கட்டையில் பாடிக்கொண்டிருப்பார்கள். இருந்தும் காதுக்கு இனிமையாகத்தான் இருக்கும். அதுவே இறைவனின் கடாக்ஷம். பாடல் சுத்தமான சங்கத்தமிழில் இருக்கவேண்டுமென்பதும் இல்லை. 'பழம் நீயப்பா', 'திருச்செந்தூரின் கடலோரத்தில்' ஆரம்பித்து அண்மையில் வந்த 'அன்பென்ற மழையிலே' வரை இதைக்காண முடியும். விஷயத்தை விட்டு ரொம்ப தூரம் போய்விட்டோமென்று நினைக்கிறேன்.

அம்மாதிரி தினந்தோறும் தேனினும் இனிய அமுதம் போன்ற உன் புகழ்போற்றும் பாடல்களைப் பாடும்போது..

நான்படிக்கும் போதென்னை நானறியேன்
நான் பாடும்போது என்னையே பக்தியில் மறந்து எனக்கே நான் யார் என்று அறியாத ஆனந்த நிலையில் மூழ்கிவிடுகிறேன்.

நாஒன்றோ ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும்
நா என்றால் நாக்கு. ஒலி வருவது நாக்கிலிருந்துதான். ஆனால் என் நாக்கு ஒன்று மட்டுமா உன்னைப் பாடுகிறது? இல்லை என் ஊனின் (உடல்) ஒவ்வொரு அணுவும் உன் புகழ்பாடுகிறது. என் உள்ளம் உன்னையே நினைத்து நாவோடும் உடலோடும் சேர்ந்து உன் திருப்பாட்டை படிக்கிறது.

உயிர்க்குயிரும் தான்படிக்கும்
உயிருக்குயிர் என்பது என்ன? நம்ம ஆன்மாவே. அது இல்லாமல் உயிர் என்பது இல்லை. நமது உயிருக்கு ஆதாரமானது ஆன்மா. நம்மின் உள்ளுக்குள்ளே இருந்து நம்மை ஆட்டிவைப்பது அதுவே.

மேற்சொன்னவற்றோடு, என் ஆத்மாவும் சேர்ந்து உன் புகழ் பாடுகிறது.

அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே
உடல், உயிர், ஆவி கொண்டு நான் அடையும் இந்த பேரினிய அனுபவம் நீ காணமாட்டாயோ? கண்டருள மாட்டாயோ? தனிப் பெருந்தகையே. ஈடு இணையில்லாத கருணையை உடையவனே.

----
அம்மாதிரி தினந்தோறும் தேனினும் இனிய அமுதம் போன்ற உன் புகழ்போற்றும் பாடல்களைப் பாடும்போது..
என் உள்ளம் உன்னையே நினைத்து நாவோடும் உடலோடும் சேர்ந்து உன் திருப்பாட்டை படிக்கிறது.
மேற்சொன்னவற்றோடு, என் ஆத்மாவும் சேர்ந்து உன் புகழ் பாடுகிறது.
நான் அடையும் இந்த பேரினிய அனுபவம் நீ காணமாட்டாயோ? தனிப் பெருந்தகையே. ஈடு இணையில்லாத கருணையை உடையவனே.
----

இப்பாடல் மூலம் வள்ளலார் தான் அனுபவிப்பதை இறைவனுக்கு சொல்வதாய் பாடி, நம்மைப் போன்றவர்களுக்கு இறைவனின் பாடல்களை எத்தனை சிரத்தையுடன் எப்படி அவனிடமே ஊன்றிப்போய் பாட வேண்டும் என்று சின்னப்பிள்ளைகளுக்கு பாடம் எடுப்பது போல் எளிதாக விளக்குகிறார். நாளைக்கு இறைவனின் திருப்பாடல்களை பாடுகையில் எப்படி இனிக்கிறது என்று சொல்லுவார். அது என்ன பாட்டுன்னு யூகியுங்களேன். நிறைய பாடல்கள் இருக்கிறதே.

Wednesday, February 01, 2006

8. பாடும் பணியே பணியா யருள்வாய்!

ஆடும் பரிவே லணிசே வலெனப்
பாடும் பணியே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற்
காடுந் தனியா னைசகோ தரனே. (1)

//ஆடும் பரிவே லணிசே வலெனப்//

இதுல பரியென்று மயிலைத்தான் குறிப்பிடுகிறார் அருணகிரியார். பரின்னா குதிரையாச்சே? ஏன் மயில்னு சொல்றார்னு நானும் குழம்பியியிருந்தேன். ஆனால் நம்ம ஜிரா அழகா சொல்லிட்டாரு. அழகிய நடனமாடும் மயில். முருகப்பெருமானின் மயில் என்ன வகை நடனமாடும்? தஞ்சாவூர் கோயிலைப் பார்த்தவர்களுக்கு விளக்கவே வேண்டாம். ஓம் எனும் மந்திரத்திற்கு ஒப்ப வடிவில், அந்த சூட்சும மந்திரத்தையே விளக்கும் வகையில் ஆடும் மயிலும்...

முருகன் தன் சின்னமாய் அணிந்திருக்கும் சேவலின் வேலை எத்தகையது? அவனையே நினைத்துருகும் அன்பர்களுக்கு அவன் அருள் கிட்டியது குறித்து கொக்கரித்து அவர்களுக்கு உணர்த்துவதே ஆகும். கொஞ்சம் சிந்திப்போமாயின் (அதான், என் கற்பனை!)

தினமும் காலைல சேவல் கூவுதே, எதுக்கு? 'மனிதர்களே கேளுங்கள்! முருகனின் அருள் உங்களை என்றென்றும் காக்கும்' என்று சொல்வதற்கே. ஏன் அருள் பெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்கும் பொதுவாய் பின்னே கொக்கரிக்கிறது? 'முருகன் அருள் பெறுவதொன்றும் கஷ்டமான காரியமில்லை. உங்க ஊரிலேயே நிறைய பேர் பெற்றிருக்கின்றனர்.' அதனால, அவங்களை எழுப்புற சாக்குல.. முருகன் தாளை நினைக்காதவங்களுக்கும் அறைகூவலாய் முருகனைப் பணிந்து நற்கதி அடையுங்கள் என்று தினந்தினமும் காலையில் நமக்கு சொல்கிறது சேவல். தன்னைப் பணிந்தோர் மட்டுமன்றி, மற்றோரும் தம்மை நாடி நற்கதி அடையவேண்டும் என்ற கந்தனது அளவற்ற கருணையே அதற்கு காரணம். (இதற்கும் குமரனும் தி.இரா.சவும் வேறு அழகிய விளக்கங்களை இராகவனின் பதிவில் சொல்லியிருக்கின்றனர்)

மேலும் சேவல்-சேவகம்-சேவகன் என்பது போன்ற சொற்களிலிருந்து அடிப்படை பொருளை அறிந்து கொள்ளலாம். முருகனுக்கு சேவகம் என்பதே கருத்து. இவற்றிற்கு மூலம் எல்லாம் ஆராயாமல், மேலோட்டமாக பார்க்கையில் தோன்றுவதைத்தான் எழுதுகிறேன்.

இப்படி ஆடிடும் மயிலையும் வேலையும் சேவலையும் அணிந்திருப்பவனே..

பாடும் பணியே பணியா யருள்வாய்
இப்படி முருகனுக்கு சேவகம் புரியும் மயிலும் சேவலும்.. இதில் சேவல் யார்? சூரபத்மனின் நீட்சியல்லவா? தன்னை எதிர்த்து சண்டை போட்டவனேயே தன் பக்கத்தில வச்சுக்கறவர் நாம பக்தியோட தினமும் அவர் புகழ் பாடுனா வேணாம்னா சொல்லப் போறாரு?

என்றென்றும் உன்னைப்பாடும் பணியே என் வாழ்வின் தலையாய பணியாய் அருள்வாய்...

'நின் இணையடிகள் மறவாத மனம் மாத்திரம் எனக்கடைதல் வேண்டுமரசே' என்று அடிகளார் கூட இதே போன்ற கருத்தை உடைய பாடலை பாடியிருக்கிறார். எத்தனை பிறவியெடுத்தாலும் நல்லது/கெட்டது,செல்வம்/வறுமை எதுவந்தாலும் உனை மறவாத நிலையொன்றை மட்டுமே வேண்டுவேன் என்று. அதுபத்தி விரிவா இன்னொரு நாளைக்கு.


தேடுங் கயமா முகனைச் செருவிற் காடுந் தனியா னைசகோ தரனே
கயமா முகன்னு அருணகிரிநாதர் சொல்றது ஒரு நல்ல கதை. கஜமுகாஸுரன் என்று ஒரு அசுரன் இருந்தான். பல அசுரர்களைப் போல early days இல் சிவனைக்குறித்து கடுந்தவம் புரிந்தான். அப்பன் எவ்வழியோ பிள்ளை அவ்வழின்னு சொல்லிருக்காங்களே. முருகனின் கருணையெல்லாவற்றிற்கும் ஊற்று அந்த பரமேஸ்வரனே அல்லவா? சர்வேஸ்வரனும் கஜமுகாசுரன் கேட்ட வரங்களை அளித்தார். ஒரு விஷயம், சிவபெருமான் வரம் கொடுக்கும் விஷயத்தில் கொஞ்சம் மக்குன்னு நம்ம புராணங்கள கேட்டாலே புரிஞ்சிக்கலாம். எவ்வளவு மோசமான வில்லன் கேரக்டர் வந்தாலும், அவனுக்கு இவ்ளோ சக்தி கொடுத்தா அடுத்து அவன் என்ன பண்ணுவான்னு தெரிஞ்சும், நமச்சிவாயன்னு நாலுவாட்டி சொன்னா "பக்தா உன் பக்தியை மெச்சினோம். கேள், என்ன வேண்டும்?"னு கேட்டுக்கொடுத்துட்டு போயிடுவார். அப்புறமா யாராவது இப்படி செஞ்சிட்டேங்களேன்னு அவர்கிட்ட போய் அழுதா, 'எல்லாம் என் விளையாட்டு'ன்னு ஒரு பிட்டு போட்டுடுவார். இராவணன் தொடங்கி பல அசுரர்கள் குதியாட்டம் போட்டதுக்கு காரணமே சிவனின் வெள்ளை மனம் தான். (இது விளையாட்டுக்காக சொல்வது. பிரணவத்தின் தத்துவமான அவருக்குத் தெரியாமல் இருக்க முடியுமா?) அதேமாதிரி, பெரும்பாலான அசுரர்களைப் போல பின்னாளில் தன் பலத்தின் போதை தலைக்கேறி தேடித் தேடிச் சென்று முனிவர்களையும் அவர்களின் தவங்களையும் அழிக்க, கஜமுகாசுரனை ஒழிக்க சிவபெருமான் பிள்ளையாரை தன் கணங்களோடு (அவர்தான் கணபதி ஆயிற்றே) அனுப்பினார். பிள்ளையார் பற்றி பல்வேறு கதைகள் உண்டென்றாலும்... க.மு.அசுரன்(:)) சிவபெருமானிடத்து பெற்ற வரத்தின் படி எந்தவொரு ஆயுதத்தாலும் அழிக்கமுடியாதவனாய் இருந்தான். அதனாலேயே விநாயகர் தன் வலது தந்தத்தை உடைத்து அதைக்கொண்டு அவனைக்கொன்றார் என்று ஒரு கதை. விநாயகரின் வரலாற்றில் பல வித கதைகள் உண்டு. இந்துமதத்தின் பிதாமகரான வேதவியாசர் பாரதத்தை எழுதச் சொன்ன போது தன் தந்தத்தை உடைத்து எழுதினார் என்றும் ஒரு கதை உண்டு. எதுவாகினும்....

நல்லோர்களைத் தேடிச் சென்று தொல்லைக் கொடுத்த கஜமுகாசுரனை, சிவனின் ஆணையால் அழித்தொழித்த யானைமுகத்தானின் சகோதரனே!

----
நல்லோர்களைத் தேடிச் சென்று தொல்லைக் கொடுத்த கஜமுகாசுரனை, சிவனின் ஆணையால் அழித்தொழித்த யானைமுகத்தானின் சகோதரனே!
ஆடிடும் மயிலையும் வேலையும் சேவலையும் அணிந்திருப்பவனே..
என்றென்றும் உன்னைப்பாடும் பணியே என் வாழ்வின் தலையாய பணியாய் அருள்வாய்...


--
தமிழ்மணத்தில் சேர்வதற்கு முன் கருத்துள்ள (!) மூன்று நான்கு பதிவுகளாவது போட்டிருக்க வேண்டும் என்ற விதியால் நேற்றைக்கு ஏகப்பட்ட பதிவுகள் போட்டு ஓவர்டோஸ் கொடுத்துட்டேன். இதுக்கே உஷா அக்கா ஞே ன்னு விழிச்சதால, இனிமே தினமும் ஒரு பதிவுக்கு மேல போடப்போறதில்லை. :)