Thursday, September 06, 2007

15. எட்டா எட்டு!

முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங்கவ எண்குண பஞ் சரனே!

//பொருபுங்கவரும் புவியும் பரவும் குருபுங்கவ! எண்குண பஞ்சரனே//

தேவர்களின் தொழில் ஈசனின் கார்யத்தை முடிப்பது என்றால் அதைத் தடுப்பது அசுரரின் கார்யம். தேவர்களின் துயர்துடைக்கவே அவதரித்தவன் கந்தன். தங்களை அடிமையாக்கி சேவகம் புரியவைத்த சூரனையும் அவன் படையினரையும் வதைத்து தேவலோகத்தை மீட்டுத்தந்தவன் அந்த தேவசேனாதிபதி. ஆகவே தேவர்களின் நன்றிக்கு என்றென்றைக்கும் பாத்திரமானவன் குமரன். இதில் பொரு என்றால் போர். புங்கவர் என்பது தேவர்கள். போரின் போது தேவர்கள் தொழுது துணைக்கழைக்கும் பேராற்றல் பொருந்திய வீரனும்..

புவியும் பரவும் என்றால் அனைத்து புவனங்களும் தொழும் என்று பொருள். குருபுங்கவன் - குருவென்று அறியப்படுவர்களில் முதன்மையானவன். ஈசனுக்கே குருவானவனைத்தவிர இந்தத் தகுதியுடையவன் ஒருவனும் உளனோ? அந்தச் சுவாமிநாதனே குருபுங்கவன்.

இந்தக் குருபுங்கவன் எப்பேர்ப்பட்டவன்? அஷ்ட மாகுணங்கள் என்று மானிடர்தம் வாழ்வினிலே கடைபிடிக்கவேண்டிய உயர்ந்த குணங்களைக் சொல்வதுண்டு. ஆனால் இங்கே அருணகிரியார் குறிப்பிடுவது இறைவன் என்று அறியப்படுவதற்குண்டான எட்டு குணங்கள். அவை முற்றிலுமாக நாம் அறிந்துகொள்ள முடியாது. அவற்றை அறிந்துகொள்ள இறைவனின் அனுபூதி இன்றி முடியாது. எனினும் 1. உல்லாச நிராகுலன் 2. தணியா அதிமோகன், தயாபரன் 3. அவன் உண்மையான தன்மையை அவனருளால் அன்றி அறிய முடியாதவன் 4. சிந்தாகுலமானவை தீர்த்தருளவல்லவன் 5. நெகிழ்ந்துருகத் தஞ்சத்தருள் சண்முகன்
6. சமரம் பொருதானவ நாசகன் என சிலவற்றை அருணகிரியின் பாடல்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

இதுதவிர யஜுர் வேதத்தில் நமகத்தில் அனைத்திற்கும் ஆதிபரம்பொருளான ஈசனின் குணங்களாய் பலவற்றைத் தொகுத்து மனிதர் அறியத் தரப்பட்டிருக்கிறது. (அதனாலேதான் வேத முழுவதும் கற்க முடியாதோர்கூட ருத்ராத்யாயம் செய்தாலே போதுமானது என்று சொல்லிவைத்திருக்கிறார்கள். அதுபற்றி பிறிதொரு சமயம்..)

இப்படி இறைவனின் குணங்களை வெவ்வெறு விதமாய் பெரியோர் தொகுத்திருக்கின்றனர். அனைத்தையும் அறிவதோ புரிந்துகொள்வதோ நம்மால் ஆகாத செயல். அதனால் எட்டுகுணங்கள் என்று அருணகிரி குறிப்பிடுபவை இறைவன் என்று அறியப்படுதற்கு அடிப்படை குணங்கள் என்று கொள்வோம். இப்படி சிறந்ததான எட்டுக்குணங்களை உடைய பஞ்சரன். பஞ்சரன் என்றால் உடல் அல்லது கூடு என்று பொருள். இந்த குணங்களை உடையவன் முருகன் என்று சொல்வது தவறு என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் இறைவனின் குணங்களையும் விசேஷத்தையும் வரையறுக்க மூடர்களாகிய நாம் யார்? எட்டோ நூறோ, எண்களில்தான் எண்ணிவிட முடியுமா? அடியார்களின் தலைவன் அருணகிரி தாம் உணர்ந்து அறிந்ததை, நம் பொருட்டு எளிமைப்படுத்தி தந்திருப்பார் என்றே கொள்வோம்.

இறைக் குணங்களின் ஊற்று முருகன் என்று சொல்வதுதான் பொருத்தம். ஏனெனில் தெய்வங்களில் முதன்மையானவன் சர்வேஸ்வரன். சர்வம் சிவமயம் என்று சொல்லாமல் சிவமயம் என்றே அடியார்கள் கூறுவதன் தத்துவம் அனைத்துமான சர்வமும் சிவனுள் அடக்கம் என்பதனால்தான். அனைத்துயிரின் மேலும் ஈசனின் 'பால்நினைதூட்டும் தாயினும் சாலச்சிறந்த' கருணையின் வடிவே முருகன். ஆக அவனே அனைத்து இறை குணங்களுக்குமான ஊற்று.

இப்படி போர்சமயத்திற் தேவர்களால் தொழப்படுபவனும், அகிலபுவனங்களாலும் வணங்கப்படுபவனும், குருசிரேஷ்டனும், எட்டு இறைகுணங்களின் பிறப்பிடமானவனுமான அந்த ஞானபண்டிதனை......

//முருகன் குமரன் குகனென்று மொழிந்து உருகுஞ் செயல்தந்து உணர் வென்றருள்வாய்//
முருகன் என்ற சொல்லிற்கு மட்டும் ஒரு நாள் பொழுது பொருள் சொல்லிக்கொண்டே போகலாம். குமரன் குகன் என்றே உன் திருப்பெயர்களை மட்டுமே சதா சர்வகாலமும் வெறும் வாய்ப்பேச்சாய் மட்டும் அல்லாமல் எழுத்தாயும் எண்ணமாயும் கொண்டு (அதனாலேயே மொழிந்து) என் எலும்பெலாம் உருகும்படிச் செய்து மெய் வழியை அருளி எனக்கு அந்த பேரானந்த உணர்வை தந்தருளாயோ கந்தா என்று கேட்கிறார் அடிகளார்.

---------------
'தேவரும் மனிதரும் போற்றி வணங்கும் முருகனை, குருஸ்ரேஷ்டனை, எண்குணத்திற்கும் உறைவிடமாய் திகழ்பவனை; எந்நேரமும் அவன் நாமாக்களை மட்டுமே சொல்லும் திறத்தைத் தந்து; மெய்ப்பொருள் காணும் வழியை தாராயோ கந்தா' என்று வணங்குகிறார் அருணகிரியார்.

7 comments:

said...

பெயர்கள்ளயே முருகன் அப்படீங்குற பெயர் ரொம்ப சிறப்பானது. அதுனாலதான கூப்புடும் போது முருகாங்குற பேரு முன்னால வருது. நல்லா யோசிச்சிப் பாருங்க...நம்மாளா நம்மள அறியாமச் சொல்லும் போது...முருகான்னுதானே வாயில வருது.

எட்டு பண்புகள்....நமக்கு எட்டும் பண்புகள். அதாவது இறைவனின் பண்புகள் எட்டாதவை. ஆனா புரிய வைக்கனுமே. கம்பீல கண்ணுக்குத் தெரியாம ஓடுற மின்சாரத்தத் தொலைக்காட்சியில வண்ணவண்ணமா உணர்ரோமே. வானொலில ஒலியா உணர்ரோமே. அந்த மாதிரி கடவுள உணர இது எட்டு வழி. ஆனா...இந்த எட்டுதான் கடவுள்னு நெனைச்சிறக்கூடாது.

ரொம்ப நாள் கழிச்சித் தொடங்கீருக்கீங்க. படிக்க ரொம்பச் சந்தோசமா இருக்கு.

said...

ஆமாம் ஜிரா.. முருனருள் முன்னிற்பதைப் போலவே 'முருகா'வும் முன்னதான் நிக்குது...

//ஆனா...இந்த எட்டுதான் கடவுள்னு நெனைச்சிறக்கூடாது.
//
அதே அதே..

நன்றி.

said...

வணக்கம் ராமனாதன்,அருமையான பதிவு.
அடியார்களின் தலைவன் அருணகிரி தாம் உணர்ந்து அறிந்ததை, நம் பொருட்டு எளிமைப்படுத்தி தந்திருப்பார் என்றே கொள்வோம்

நானும் அறியும் வண்ணம் நீங்கள் எளிமைபடுத்தியது மிகவும் நன்று

said...

ராமநாதன்,

ரொம்ப நாள் கழிச்சு மீண்டும் அநுபூதி வலம் வருகிறதா! மகிழ்ச்சி! இனிமை! இன்பம்!

எண்குணத்தான் தாளை வணங்காத் தலை என்று வள்ளுவரும் குறிப்பிடுகிறார். அதற்கு உரையாசிரியர்கள் கொடுக்கும் குணங்களின் லிஸ்ட் சற்றே மாறுபடும்! :-)

//நல்லா யோசிச்சிப் பாருங்க...நம்மாளா நம்மள அறியாமச் சொல்லும் போது...முருகான்னுதானே வாயில வருது//

இன்னொரு சிறப்பம்சம் இந்த "முருகா" திருநாமத்தில்!
இறைவனிடம் என்னைக் காப்பாற்று என்று வேண்டிக் கொண்டால் தான் காப்பாற்றுவான் என்றில்லை!
ஆனாலும் அழும் குழந்தையைப் போல் நாமளும் என்னைக் காப்பாற்று காப்பாற்று என்று வேண்டிக் கொள்கிறோம்!

முரு கா என்று நாமத்திலேயே காத்தலும் அடங்கி விடுகிறது!
வீடும் வேண்டா விறலின் விளங்கினார் என்று தனியாகக் காப்பாற்றிக் கொள்ளக் கூட ஒரு சரணாகதி என்று ஆழ்வார்களும் இதையே பேசுகின்றனர்!

said...

தி. இரா. ச,
உங்கள் அன்பிற்கு ரொம்ப நன்றி சார்.

said...

KRS,
ஆமாம்.. ரொம்ப நாள் ஆச்சு.. உளறிக்கொட்டாம சித்த நேரம் சும்மா இரேண்டானு முருகன் சொன்னதா நினைச்சுக்கறேன். :)))))

முருகாவிற்கு உங்கள் விளக்கம் அருமை.

அப்புறம் வணங்கினாத்தான் காப்பாத்துவான்னு நிறைய பேரு தெய்வத்தை என்னவோ கிவ்-அண்ட்-டேக் பாலிஸி பிஸினஸ்மேன் போல் தப்பர்த்தம் பண்ணிக்கொள்கிறார்கள். ஆஸ்தீகர்களே இந்த நிலையில் என்றால் நாஸ்தீகர்களுக்கு இது அல்வா சாப்பிடுவது போல.

இதுபற்றி நீங்களும் குமரனும் ஜிராவும் விரிவாய் எழுதவேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்.

said...

இராம்ஸ். நிறைய சொல்லியிருக்கீங்க. எழுதும் போது எண்ணங்கள் எழுத்தில் வருவதற்குள் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தன போலும். ஒரு எண்ணத்திலிருந்து இன்னொரு எண்ணத்திற்கு, ஒரு கருத்திலிருந்து இன்னொரு கருத்திற்கு டப்பு டப்புன்னு தாவியிருக்கீங்க. :-)

ரொம்ப நாளைக்கப்புறம் நீங்க வந்திருக்கீங்க. வந்து எழுதுனவுடனேயே படிக்கப் பிரதி எடுத்து வச்சுக்கிட்டேன். இன்னைக்குத் தான் படிச்சு பின்னூட்டம் இட முடிஞ்சது.

தொடர்ந்து எழுதுங்க.