பேராசை யெனும் பிணியிற் பிணிபட்
டோ ரா வினையே னுழலத் தகுமோ
வீரா முதுசூர் படவே லெறியுஞ்
சூரா சுரலோக துரந் தரனே! - 16
//வீரா! முதுசூர் பட வேல் எறியும் சூரா! சுரலோக துரந்தரனே!//
ஒரு விஷயத்தைப் பற்றி விளக்கிச் சொல்லவேண்டுமெனில் அருணகிரிக்கு அருவியெனத் தமிழ் வந்து கொட்டும். திருப்புகழ், அலங்காரம், அனுபூதி என்று எல்லாவற்றிலும் அருணகிரியின் மொழியாளுமை கொட்டிக்கிடக்கின்றது. ஆனால் அவரோ இங்கே வீரா என்று எவ்வித அலங்காரமும் அன்றி விட்டிருக்கிறார். அருணகிரிக்கு வார்த்தைத் தட்டுப்பாடா? ஆம். தட்டுப்பாடுதான். ஏன்? முருகனின் வீரம் எப்பேர்ப்பட்டது? வார்த்தைகளில் வடிக்க முடியாதது. வீரன் என்றால் முருகன். அவனை மிஞ்சிய வீரன் கிடையாது. அதன்காரணமாகவே இங்கே வீரா என்று தொடங்கி...
முது என்பது பழமையைக் குறிப்பது. சூரபத்மனை ஏன் முதுமையான சூரன் என்று குறிப்பிடவேண்டும்? சூரத்தனம் சூரபத்மனின் பிறவிகுணம். சூரத்தனத்தில் முதியவன் அவன். நூற்றியெட்டு யுகங்களாய் அனைத்து பூவுலகங்களையும் ஆட்சிசெய்தான். ஆனால் திருப்தி ஏற்படவில்லை. சுரர்களையும் (தேவர்கள்) அடிமைப்படுத்தி அவர்களுடைய சுரலோகத்தை தன்வசப் படுத்தவேண்டும் என்று பேராசை கொண்டான். இந்த பேராசை என்னும் பிணி உண்டான நிலையில் அறிவுமழுங்கி இறைவனையே எதிர்க்க துணிந்தான். அதுவே அவனுடைய அழிவிற்கு வித்தானது. இப்படி பல்யுகங்கள் தன்னுடைய சூரத்தனத்தால் உலகங்களை ஆட்சிசெய்த சூரன் பேராசையின் பயனாய் தேவர்களை அடிமையாக்க, அவர்களைக் காக்கும் பொருட்டு அவதரித்து சூரன் மேல் வேல் தொடுத்து அவனுடைய ஆணவத்தை அழித்து தேவருலகத்தை காத்து அருளினான் கந்தன்.
//பேராசை எனும் பிணியில் பிணிபட்டு ஓரா வினையேன் உழலத் தகுமோ?//
ஆசையில்லாமல் மனிதன் கிடையாது. அது அறியாதவரா அருணகிரி? ஆண்டவன் அநுபூதி வேண்டுவதும் ஆசைதானே? அது நியாயமான ஆசைதானே? அது எப்போது பேராசை ஆகிறது?
சிவலோக ப்ராப்திக்கு நாம் செய்யவேண்டிய காரியங்கள் எத்தனையோ இருக்கிறது என்கின்றன வேதங்களும் அறநெறி நூல்களும். தர்மநெறிகளின் படி வாழ்க்கை வாழ்வது, உடல் சுத்தம், பொய் புரட்டு அல்லாமல் இருப்பது, அடுத்தவரை ஏமாற்றாமல் இருப்பது, வறியவர்க்கு உதவுவது, உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தைத் தவிர நேர்மையற்ற வழிகளில் பணம் ஈட்டாமல் இருப்பது, அனைத்துயிரிலும் ஈஸ்வரனை காண்பது, பெற்றோர்களை மதிப்பது, முன்னோர்களுக்கு செய்யவேண்டியதைச் செய்வது, குருசொற்படி நடப்பது, மது மாது போன்றவற்றிற்கு அடிமையாகாமல் இருப்பது என்று நமக்கு கொடுக்கப்பட்டுள்ள வாழ்வியல் நெறிகள் எத்தனையோ. அவற்றில் முடிந்த அளவு பின்பற்றுவது அல்லது அப்படி இருப்பதற்குண்டான நேர்மையான முயற்சியாவது செய்வது; இவை இவ்வுலக பிறவிக்கென்றால் ஆத்ம சுத்திக்காக கொடுக்கப்பட்டிருக்கிற காரியங்கள் இன்னும் பல. இப்படி வாழமுற்படுவோர் இறைவனை அடையவேண்டும் என்று வேண்டுவது நியாயமான ஆசை.
அதுவே தர்மத்திற்கு நேரெதிர் கோணலாகவே வாழ்க்கை வாழ்ந்துவந்தாலும் நானும் முருகனடி சேரவேண்டும் என்றால் அது பேராசை. நான் என் நிலையை உயர்த்திக்கொள்ளவே மாட்டேன் ஆனாலும் என்னை வந்து இறைவன் ஆட்கொள்ளவேண்டும். அப்படியில்லாதவன் என்ன இறைவன் என்று கேட்கலாம். அதற்கு இறைவன் வந்து கண்முன்தோன்றி விடை சொல்லமாட்டான். சொல்லவேண்டிய அவசியமும் அவனுக்கு இல்லை. கேட்க்ககூடிய அதிகாரமும் நமக்குக் கிடையாது. அப்படிப்பட்ட இறைவன் தேவையில்லை என்று கருதுவீர்களானால் தாராளமாக. இளமையும் உடல்வலியும் இருக்கும்வரை அனைத்துமே முறுக்குதான். ஆனால் 'விழித்துப் புகையெழப் பொங்கு வெங்கூற்றன் கழுத்திற் சுருக்கிட்டிழுக்கின்ற' பொழுது முறுக்கு நமுத்துப்போயிருக்கும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும்.
நம் கண்ணில் கோளாறை வைத்துக்கொண்டு அவனை நிந்திக்கும் நம்மீதும் அந்த "வைதாரையும் வாழவைக்கும்" கந்தன் கருணைகொண்டு நமக்கு வாழ்க்கையில் பல சம்பவங்களின் மூலம் பாடங்கள் சொல்லித்தருகிறான். சிலருக்கு முற்பிறவியின் பயனாய் காட்சியும் தருகிறான். ஏன், யாருக்கு, எதற்கு, எப்படியென்றெல்லாம் கேள்விகள் கேட்கலாம். அருணகிரிக்கு அருணை கோபுரத்தில் இறைவன் காட்சிகொடுத்தானே.. நாமும் ஈபில் கோபுரத்திலிருந்து குதிப்போமா என்று குதர்க்கம் பேசுவதற்கு முன் அடியார்களின் அந்த உயர்ந்த நிலையில் (டவரின் உச்சியில் அல்ல.. :)) ) நாம் இருக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளவேண்டும். எண்ணமும் செயலும் இறைவனையே குறித்து இருந்தால் தானே வருவான் கந்தன். அதுவரையில் எல்லாமே பேராசைதான்.
இங்கே அவனருளாலே அவன் தாள் வணங்கிய அருணகிரி சொல்வது: பேராசை எனும் பிணியில் பிணிபட்டு - உலக வாழ்வில் நமக்கு வரும் பேராசைகளைப் (தகுதியைத்தேட முற்படாமல் இறைவனை அடைய வேண்டும் என்பதும் சேர்த்து) பற்றிச் சொல்லி அப்பேர்ப்பட்ட பேராசைகளின் பிடியில் சிக்கிய எனக்கு அவற்றிலிருந்து விடுவித்துக்கொள்வது எப்படி என்று அறிந்துகொள்ள முடியாவண்ணம் என் அறிவு மழுங்கிப் போய் கிடக்கிறது. இந்த ஊசலில் சிக்கி நான் இன்னும் எத்தனை நாள் உழலுவது? வந்து அருளாயோ கந்தா....
--------------------------------------------------
முதுசூரனை அழித்து தேவருலகத்தை காத்த சூரா! வீரா! பேராசையின் பிடியில் சூரபத்மனைப் போல் சிக்கி, அதிலிருந்து விடுபட வழிதெரியாமல் உழலுவது இன்னும் எத்தனை நாளைக்குத்தானோ? வந்து காத்தருளாயோ?
Wednesday, September 12, 2007
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
நன்றாக உள்ளது
நல்லாச் சொல்லீருக்கீங்க.
இந்த முதுசூர் என்பதற்காக இன்னொரு விளக்கம் சொல்லலாம். உள்ளபடிக்குப் பெரும்பாலான விளக்க உரையாளர்கள் அதத்தான் சொல்றாங்க.
சூர்னா துன்பம். முதுசூர்னா....முன்பு செய்த தவறுகளால வந்திருக்கும் துன்பம். தீதும் நன்றும் பிறர் தர வாரா. அப்படி நாம முன்னாடி செஞ்ச தப்புகளால விளையிற துன்பத்தைத் துடைக்கிற முருகன்னு பொருள்.
பேராசைக்கான விளக்கம் புதுமையா நல்லாருந்தது.
வந்தேன் ஐயா ! தன்யனானேன்.
என்னார்,
நன்றி.
மணியன்,
தன்யனாகறதுக்கெல்லாம் என்ன?? வ.பு ஜாஸ்தியாயிருச்சு??? :))))))))
இராமநாதன்,
அருமையான விளக்கம். மிக்க நன்றி.
//தகுதியைத்தேட முற்படாமல் இறைவனை அடைய வேண்டும் என்பதும் சேர்த்து//
//நான் என் நிலையை உயர்த்திக்கொள்ளவே மாட்டேன் ஆனாலும் என்னை வந்து இறைவன் ஆட்கொள்ளவேண்டும்//
பேராசையின் விளக்கங்கள் மிக நன்று மருத்துவரே! ஆழ்ந்த பக்தியில் தான் தன்னிலை அறிதல் தென்படும். அந்த நிலை அறிந்த பின்னர் தான், ஐயோ என்னிலை இழிநிலையாய் இப்படி இருக்க, நான் எப்படி எல்லாம் அவனிடம் உரிமை எடுத்துக் கொண்டேன் என்று மனம் கூவும்! எலுமிச்சம் பழத்தைத் தானமாகக் கொடுத்து விட்டு எட்டுத் திக்கும் பரிசாய்க் கேட்டானாம் என்று ஆயிரப் படி ஆசிரியர்கள் சொல்லுவார்கள்.
"பிணியில் பிணிபட்டு" என்கிறார் பாருங்கள்.
நோயினால் நோய் வாய்ப்பட்டேன்னு சொல்லுவோமா?
ஏன் அப்படிச் சொல்கிறார் அருணகிரி?
ஜிரா, குமரன், ராம்ஸ் - விளக்கம் ப்ளீஸ்!
கொத்தனாரின் குயிஜைல ஜெய்ச்சதுக்கு வாழ்த்துக்கள். :)
Post a Comment