Friday, January 19, 2007

14. மெய்யா பொய்யா?

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே ஒழிவா யொழிவாய்!
மெய்வாய் விழிநாசி யொடும் செவியாம்
ஐவாய் வழிசெல்லும் அவாவினையே! (14)

//ஒழிவா யொழிவாய்! மெய்வாய் விழிநாசி யொடும் செவியாம் ஐவாய் வழிசெல்லும் அவாவினையே!//

இந்திரியங்கள் நமக்கு ஐந்து. அவை கண், காது, மூக்கு, வாய், உடல்.

உடல் என்பது இங்கே பிரதானம். அதைச் சார்ந்து மற்ற நான்கும் இருக்கின்றன. இப்போது சற்றே உடல் என்பது என்ன என்று பார்ப்போம். நம் ஆன்மா பிறவியெடுக்க ஒரு சாதனமாய் சற்றேறக்குறைய எழுபது ஆண்டுகள் மட்டுமே இருந்து அழுகும் ஒரு ஜடப்பொருள். இது இப்படியிருக்க உடலுக்கு நாம் வைத்திருக்கும் மற்றொரு பெயர்? மெய். நகைமுரணாக இல்லை? மெய் என்றால் என்றென்றைக்கும் நிலைத்து நிற்பது, அசையாதது, மாறாதது என்று பொருள். ஆனால் தோன்றி மறையும் ஒரு தேகத்திற்கு மெய் என்று பெயர் கொடுத்து கொண்டாடுவதிலிருந்தே அடிப்படையிலேயே கோணல் இருப்பது தெளிவாகிறதல்லவா? நிலையற்ற ஒரு வஸ்துவை நிலையானது, மெய்யானது என்று புகழ்வது அறிவார்ந்த செயலா?

மனித உடல் என்பது ஒரு மோட்டார் காரைப் போன்றது. பாகங்கள் நிறைந்தது. பழுதடையக்கூடியது. அழியக்கூடியது. இயங்க சக்தி தேவைப்படுவது. இப்படி பல பலவீனங்களைக் கொண்ட உடல் எப்படி மெய்யானதாக முடியும்? முன்னோர்கள் முட்டாள்களா என்ன? வெள்ளைத்துணியில் கரும்புள்ளியைப் போல இப்படி பளிச்சென்று ஒரு தவறைச் செய்தால் அது நம் கண்களில் படாமல் போய்விடாது என்று புரிந்துதான் செய்துள்ளார்கள். உடல் மெய்யல்ல என்பது - மெய் என்றால் என்ன, உடல் என்றால் என்ன என்று இம்மாதிரி ரெண்டு நிமிடம் சிந்தித்தாலே புரிந்துவிடும். பிறவாதிறவா இறைவனை மெய்ப்பொருள் யாதென கேட்க நினைக்கையில் பொய்யான இவ்வுடலை மெய்யென நினைந்து பலகாலம் திரிந்த காலமும் நினைவிற்கு வருமல்லவா? அப்படி வருகையிலேதான் அருணகிரி இங்கே சொல்கிறார்...

வாழ்க்கையில் துணையாய் இருக்கவேண்டிய இந்திரியங்கள் என்பது போய் இந்திரிய சுகத்திற்கென வாழ்வதே மெய்யெனும் பொய்யில் களித்து நிற்கவைப்பது ஆசையெனும் பேய். இப்பேய் துன்பத்திற்கெல்லாம் மூலாதாரம். இப்பேய் வெளிப்படுவது இந்திரியங்களின் மூலமாக. பெண், பொன், மண் என்று மூவாசைகள் தவிர இப்போது எதன்மேல் தான் ஆசைவைப்பது என்று தெரியாமல் தவிக்கும் அளவுக்கு நம்மை இந்திரியங்கள் ஆட்டிப்படைக்கின்றன. இதற்கு என்ன தீர்வு? எப்படி போக்குவது?

//கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று உய்வாய் மனனே//
மெய்யறிவெனும் கதிர்முத்தி நினைத்தோர்க்கு முக்தியளிக்க காத்திருக்கும் ஞானவேலை தன் கையில் உடைய வேலவனின் செம்மையான பாதக்கழல்களை நினைந்து நினைந்து உய்திடுவாய் மனமே! அவற்றையே நினைத்து ஜபிப்பதன் மூலம் ஐந்து இந்திரியங்களின் வழியாக வெளிப்பட்டு நம் வாழ்வைப் பாழாக்கும் ஆசையை ஒழித்துக்கட்டுவாய்! என்று சுவாமிகள் ஆசைப்பிணியிலிருந்து விடுபெற முருகனின் பாதங்களை நினைத்து தியானம் செய்க என்று உபாயம் அருளுகிறார்.

6 comments:

said...

பாடலே வெகு எளிமை! அதனால் புரிதல் கடினமாக இல்லை. உங்கள் விளக்கத்தைப் படித்த பின் வாழைப்பழத்தை உரித்துக் கொடுத்தது போல் தோன்றியது!

said...

இராமநாதன்,
என் போன்ற முருக பக்தர்கள் தமிழ் ஆவலர்கள் அனைவருக்கும் நல்ல விருந்து உங்கள் பதிவு. அருமையான விளக்கம். பொருளும் விளங்கிப் பாடும் போது எவ்வளவு இன்பமாக இருக்கிறது. மிக்க நன்றி.

தொடருங்கள்...

said...

வாழைப்பழத்தையும் முழுதாக அவசரத்தில் முழுங்கிட இயலாதே கொத்ஸூ!

அதான் பிய்த்து பிய்த்து bite sized ஆக தரவேண்டியிருக்கிறது!

(அடடா.. இந்த பதிலப் பார்த்து என் கண்ணே பட்டுடும் போலிருக்கு)

said...

உண்மையிலே உங்கள் பதிவுகளைப் படிக்கும் என் கண் தான் பட்டுடும் போல் இருக்கு. இந்தச் சின்ன வயசில் உங்களைப் போன்ற இளைஞர்கள் இவ்வளவு ஆன்மீகம் சார்ந்து இருப்பதில் பெருமையாகவும் இருக்கிறது.

நல்லதொரு விளக்கம். உங்கள் பாணியில் அருமையாகக் கொடுத்திருக்கிறீர்கள். உடலைப் பற்றிய உண்மை தெரியாமல் தான் இங்கே எல்லாரும் தவிக்கிறோம். நீங்கள் கூடுதலாய் உடல்கூறு படிக்கும் மருத்துவர் வேறே. நல்லாப் புரிஞ்சு வச்சிருக்கிறதோடு இல்லாமல் புரியவும் வைக்கிறீங்க. வாழ்த்துக்கள்.

said...

பாடலோ மிக எளிமை ஆனால் செயல் படுத்துவதோ மிக கடினம். வரவுக்கு மகிழ்ச்சி.என்னைப் போன்றவர்களை பட்டினி போடுவதில் அப்படி என்ன பெரிய ஆனந்தம் உங்களுக்கு. தஞ்சையில் காவிரிக்குத்தான் தட்டுப்பாடு ராமனாதன் தமிழுக்குமா?

said...

நல்ல விளக்கம். மெய்யே பொய்யாம். அப்படியிருக்க மெய் நுகரும் இன்பம் மட்டும் மெய்யாகுமா? மெய்யாக நுகர வேண்டும் என்றால் முருகந்தான் உதவ வேண்டும். முருகன் கைவேல் பேச வேண்டும். அதுதான் கைவாய்க் கதிர்வேல். நம்முடைய மூளை விரும்புவதை வாய் சொல்வது போல முருகன் கை விரும்பதை வேல் சொல்கிறது. ஆகையால்தான் கைக்கு வாய் வேல்.

வாழைப்பழத்தை நுணுக்கி நுணுக்கித் தர வேண்டியுள்ளதும் உண்மைதான். பல்லும் சொல்லுமொன்றுதானே. ஆகையால்தான் சொல்லும் பொருளும் போனபின்...பல் போன வாய்க்கு வாழைப்பழத்தை நுணுக்கி நுணுக்கிக் கொடுக்க வேண்டியுள்ளது.