Wednesday, November 22, 2006

13. இருக்கிறானா இல்லையா?

முருகன் தனிவேல் முனிநம் குருவென்று
அருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென நின்றதுவே. 13

//முருகன் தனி வேல்முனி நம் குரு என்று அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ?//

அ, ஆ வென்று வெறும் எளிமையான எழுத்து எழுத பழக்கக் கூட ஆசிரியர் ஒருவர் வேண்டும். எழுத்துக்களை நாமே கற்றுக்கொள்ள முடியாதா? பாடங்களுக்குத்தான் புத்தகங்கள் இருக்கின்றனவே. சுயமாக படித்துக்கொள்ள முடியாதா? முடியாது. அதுதான் குருவின் மகத்துவம். ஒவ்வொரு பருவத்தில் நமக்கு ஒவ்வொரு பக்குவம். வைரத்தை தீட்டுவது போல் நிதானமாக, நேர்த்தியாக நம்மை தயார்படுத்துவது ஆசிரியர்களின் பணி. ஆரம்ப பள்ளி, உயர்நிலை, மேல்நிலை, கல்லூரி அளவு பேராசிரியர்கள் என ஆசிரியர்களில் சிலவகை. ஆனால் அடிப்படை பணியென்னவோ ஒன்றுதான் அல்லவா? நிலையற்ற உலக வாழ்க்கைக்கே ஆசிரியர்கள் வழிகாட்டிகளாய்த் தேவைப்படும் போது, ஆன்மிகத்திற்கு வழிகாட்டிகள் வேண்டாமா? இறைவனைக் குறித்த நம் தேடலுக்கு? ஒரு குரு வேண்டாமா? வாரியார் சுவாமிகள் சொல்வார்கள். மாதா பிதாவை பிள்ளைக்கு அடையாளம் காட்டுவாள். பிதா நல்ல குருவை. குருவோ தெய்வத்தையே அடையாளம் காட்டுபவர். அதனால் தான் அந்த வரிசையில் நம் பெரியவர்கள் வைத்திருக்கிறார்கள் என்று.

ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். குரு தெய்வத்தை அடைய வழி தான் காட்டுவாரே தவிர குருவே தெய்வம் கிடையாது. அப்படி எந்த ஒரு நேர்மையான குருவும் சொல்லிக்கொள்ள மாட்டார். இன்னொன்று இவர்கள் கடவுளுக்கும் நமக்குமிடையே ஆன இடைத்தரகர்கள் கிடையாது. இந்த குரு, ஆச்சாரியர்கள் யாருமே எனக்கு வேண்டாம், நானே இறைவனை அடைந்து கொள்கிறேன் என்று சொல்கிறீர்களா. அதுவும் நியாயம்தான். செய்யலாம். எப்படியென்றால் நானே சொந்தமாக E=mc^2 ப்ரூப் கண்டுபிடித்து அதன் பயனை என் சொந்த முயற்சியில் மட்டுமே அடைவேன் என்பது போன்றது. சொந்த முயற்சி என்பது வரவேற்க வேண்டிய விஷயம் என்றாலும், பலர் செய்து தெளிந்த காரியத்தை திரும்பவும் செய்தே தீர்வேன் என்பது தேவையற்ற காலவிரயம், அல்லவா? இன்னும் பல நூறு பிறப்புகள் தேவைப்படுமல்லவா?

பல கோடி யுகங்களாக நம் பாரதப் புண்ணியபூமியில் தோன்றி வந்துள்ள பல கோடி மகான்கள் அருந்தவங்களும், யோகமும் செய்து கற்றதுதான் இறைவனை அடையும் வழி. அவர்கள் எழுதி வைத்துச் சென்றுள்ள சூத்திரங்களிலும் மார்க்க்ம் தான் சொல்கிறார்களே தவிர, இறைவனை நேரே நமக்கு டோர் டெலிவரி செய்யவில்லை. பல மார்க்கங்களில் எந்த மார்க்கம் நமக்கு சரிப்பட்டு வருமோ, அதற்கு தகுந்த குருவின் உதவியை நாடினால் அவர் நமக்கு உபாயங்கள் அருளுவார். வாய்ப்பாடு டேபிள்ஸும், லாக் டேபிள்ஸும், கால்குலேட்டரும் எப்படி பயன் படுகின்றனவோ, அது போலவே குருவின் அறிவுரைகளும் சாதகம் செய்தால் பயன் தர வல்லன. கால்குலேட்டர் கணக்குக்கான விடையைச் சொல்லுமேயொழிய problem க்கான் தீர்வைச் சொல்லாது. ஒரு கால்குலேட்டரையோ லாக் டேபிளையோ சரியாக பயன்படுத்தி விடை காணவேண்டியது நம் வேலை. அதுவே தான் ஆன்மிகத்திலும். இவ்வாறு குருவானவர் வழிகாட்டியாக கொண்டு, சொந்த முயற்சியில் கடைத்தேற வழிகாண வேண்டும். அதோடு கூட குருவானவரின் சத்சங்கமே ஒருவனின் முயற்சிகளை நல்வழிப்படுத்தி ஒழுங்குசெய்யும். அப்படி வருவதே குருவின் தீட்சை. அதுவும் முக்கியமான component இதில்.

குருவினுடைய மகிமையைப் பார்த்தோம். இங்கே அருணகிரியார் சொல்வது ஞானத்தின் வடிவான வேலை ஏந்தி, அண்ட சராசரங்கமெங்கும் வ்யாபித்து உலகில் உள்ளவை இல்லாதவை இனிவருபவை என முக்காலமும் காரியமும் உணர்ந்தவனாய், அனைத்து ஞானத்திற்கும் சுடராய் யோக நிலையில் நின்று அருள் தரும் ஒரே பெருமான் கந்தன். அப்படி தனியொருவனாக, அனைத்தும் அறிந்தவனாக தனிமையில் நிற்பவன் கந்தவேள் மட்டுமே என்பதைக் குறிக்கவே தனி என்னும் பதத்தை பயன்படுத்தியிருக்கிறார். அப்பெருமானை குருவாய் கொண்டவர்கள் மட்டுமே மெய்ப்பொருளை உணரமுடியும். அதுவும் அவனை குருவாய்க் கொள்வதே அவன் அருள் இல்லாமல் கிடைக்காது. அந்த முருகனைக் குருவாக கொள்வதற்கு அவனை நாம் எங்கே சென்று தேடுவது? சீடனாய் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நேரில் எங்கே பார்த்து விண்ணப்பம் கொடுப்பது? முருகனை எங்கே எவ்வாறு அடையாளம் காண்பது?

//உருவன்று அருவன்று உளதன்று இலதன்று இருளன்று ஒளியன்று என நின்றதுவே//
உருவம் அன்று. அருவம் அன்று. உளது அன்று. இலது அன்று. இருள் அன்று. ஒளியும் அன்று. இப்படி எதிலும் இருப்பவன். அதே நேரம் எங்குமே இல்லாதவன். அவனைத்தேடி எங்கே அலைந்தாலும் கிடைக்கமாட்டான். அப்படியென்றால் தேடி என்ன பயன் என்று எண்ணக்கூடாது. கந்தனை நம் அறிவிற்கு எட்டிய பொருட்களில் ஒன்றாக define செய்துவிடலாம் என்று தேடினால் கண்டிப்பாக கிடைக்க மாட்டான். அது ஆணவம். ஆணவ மலம் ஒழியும் வரை இறைவனைக் காண முடியாது என்பதை முன்னரே சில பாடல்களில் பார்த்துள்ளோம்.

"அங்கே இங்கே என்று அலையாதே மனமே!
ஆழ்ந்து பார் உன்னுள்ளே ப்ருந்தாவனமே!"

என்று ஒரு பாடல் உண்டு. கண்ணன் கோகுலத்தில் இருக்கிறான், துவாரகையில் இருக்கிறான், வைகுண்டத்தில் இருக்கிறான் என்று அலைந்து அயராதே மனமே. சும்மா இரு சொல் அற என்று சென்ற பாடலில் பார்த்தோமல்லவா? அப்படி சும்மா இருந்தால் உன்னுள்ளே உன் மனம் தான் ப்ருந்தாவனம் என்று புரியும். அங்கேயேதான் கண்ணனும் இருக்கிறான் என்று பொருள் வரும். அவ்வாறே அருணகிரியாரும் சற்று விளையாடுகிறார்.

அங்கே இல்லை, அதுவும் இல்லை, இதுவும் இல்லை, இங்கேயும் இல்லை. ஆணவத்தால் விளையும் தேவையற்ற தேடலை விட்டு சும்மாயிரு சொல்லற. உன்னுள்ளே நிற்கிறான் கந்தன். அவனை தேடு. கந்தனின் அநுபூதி நாம் வேண்டும் பயன். அந்த அநுபூதி எப்படி அடைவது? அந்த முருகனையே குருவாக கொண்டால் மட்டுமே அதற்கான வழி கிட்டும்.

24 comments:

said...

அருமையான விளக்கம், தான் என்பது அழிந்தால் அந்த சிவகுருநாதனே குருவாக இருந்து அருள்வான் என்பதை அழகாக சொல்லியிருக்கின்றீர்

said...

நல்லதொரு விளக்கம் இராமநாதன். குருவைக் கொண்டு இறைவனை அறிவதால் குருவே இறைவன் அல்ல. ஆனால் இறைவன் குருவின் வழியாக அருள்வதும் விளக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

நீங்கள் சொன்னது போல...2X2=4 என்பது போல இறைவனை அடைய வாய்ப்பாடு இல்லை. எண்களைச் சொல்லித் தருவார் ஆசான். அதற்கு மேல் ஆண்டவனே சொல்லித் தரவேண்டும். தருவான்.

அநுபூதிச் செய்யுட்களைப் படிப்பதும் அதன் பொருளைப் பிறர் சொல்லக் கேட்பதும் எத்தனையின்பம். ஆகா!

said...

பராசரன்,
மிக்க நன்றி.

said...

ஜிரா,
குருவையே தெய்வமாய் பார்ப்பதன் விளைவுகளைத்தான் பார்க்கின்றோமே...

நன்றி.

said...

பன்னரும் வேதங்கள் படித்து உணர்ந்தாலும்
உன்னருள் இல்லாவிட்டால் ஒன்றுக்கும் உதவாது

என்ன புண்ணியம் செய்தேனோ? சத்குருநாதா!
எத்தனை தவம் செய்தேனோ? உன் அருள் பெறவே!

என்றும் எழுதி வைத்திருக்கிறார்கள் இராமநாதன். எல்லா குருமார்களும் இறைவனாய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இறைவன் குருவாய் வருவதுண்டு. உருவாய் அருவாய் உளதாய் ... பாடலை நினைக்க வேண்டுகிறேன். அப்படி வரும் போது குருவை இறைவன் என்னாமல் என்ன சொல்வது?

அது மட்டுமின்றி குருர் பிரம்மா சுலோகத்தில் சொல்லியிருப்பதும் ஒரு சூத்திரம் தானே. அதனைப் பின்பற்ற வேண்டாமா?

நீங்கள் சொல்லும் விளைவுகள் குருவைத் தெய்வமாய் பார்ப்பதால் வந்தவை இல்லை. சத்குருக்கள் குறைந்து மாயாகுருக்கள் நிரம்பிவிட்டதால் வந்த விளைவு. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று சொன்ன மூதுரையைப் பின்பற்ற நமக்கு இப்போது எந்தத் தடையும் இல்லை. ஆனால் அன்னையும் பிதாவும் தங்களுக்குள் ஒத்துப் போக முடியாமல் சண்டை போட்டுக் கொண்டு மணமுறிவு செய்து தனித்தனியே வாழும் போது அந்தக் குழந்தைகளிடம் 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்றால் அடிக்க வருவார்கள். ஆனால் அவர்கள் நிலை இப்படி இருப்பதற்கு மூதுரை காரணமா இல்லை அன்னை தந்தையர்களா? அதே போல் குருவைத் தெய்வமாகப் பார்ப்பதில் தவறில்லை. சத்குரு கிடைத்தால் அது மிகப் பொருத்தமே. நம் வினைக்கேற்ப நம் தேடுதலுக்கேற்ப சத்குரு கிடைப்பார். அவரைத் தெய்வம் எனல் சரியே.

said...

மிக நன்றாக விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள் இராமநாதன். எந்தப் பாடலும் ஆழ்ந்து படித்தால் தான் புரியும்; மனத்தில் நிற்கும் என்பதற்கு உங்கள் எல்லோரின் கந்தரனுபூதி விளக்கங்களும் எடுத்துக்காட்டுகள்.

said...

குமரன்,
'குருவாய் வருவாய் அருள்வாய் குகனே' விலும் குருவாய் வந்து வழிகாட்டு என்று பொருள்படத்தான் அருணகிரி சொல்கிறார் என்பது என் எண்ணம். இப்பாடலிலும் 'குருவாய் நீ வராவிட்டால் பரம்பொருளான உன்னை அடையும் வழியை எப்படி பெற முடியும்' என்றுதானே கேட்கிறார்.

இதில் குருவாய் கந்தனே வரும் வேளையில் குழப்பமில்லை. மானிடர் குருவாய் வருகையில் நாம் தேடும்பொருள் கந்தனா அல்லது அந்த குருவா என்று குழப்பம் வரத்தானே செய்யும்.

குருவிற்கு தரவேண்டிய மரியாதையை குறைத்துச் சொல்லவில்லை. ஆனால் கடவுள் என்று உயர்த்துதல் வேண்டாம் என்கிறேன். நம் வாழ்வில் அன்னைக்கென்று ஒரு ஸ்தானம். தந்தைக்கென்று ஒரு ஸ்தானம். அதே போல குருவுக்கென்று ஒரு உயர்ந்த ஸ்தானம் உள்ளது. எத்தகைய நல்ல அன்னையாக இருந்தாலும் தந்தையாக முடியாது. தந்தையும் அன்னையாக முடியாது. ஒரு குரு எத்தகைய மேன்மையுடையவராக இருந்தாலும் நம் தாயாக முடியாது. தந்தையாக முடியாது. ஆனால் 'எந்தாயும் எனக்கருட்தந்தையுமாகி' 'குருவுமாகி வந்தருள' வல்லான் கந்தன் ஒருவன் தானே? இதில் இருவேறு கருத்தும் இருக்கிறதா குமரன்?

said...

மிக்க நன்றி கும்ஸ்.

(ஹி. ஹி. பி. க. கண்டுக்காதீங்க!)

said...

// குருவிற்கு தரவேண்டிய மரியாதையை குறைத்துச் சொல்லவில்லை. ஆனால் கடவுள் என்று உயர்த்துதல் வேண்டாம் என்கிறேன். நம் வாழ்வில் அன்னைக்கென்று ஒரு ஸ்தானம். தந்தைக்கென்று ஒரு ஸ்தானம். அதே போல குருவுக்கென்று ஒரு உயர்ந்த ஸ்தானம் உள்ளது. எத்தகைய நல்ல அன்னையாக இருந்தாலும் தந்தையாக முடியாது. தந்தையும் அன்னையாக முடியாது. ஒரு குரு எத்தகைய மேன்மையுடையவராக இருந்தாலும் நம் தாயாக முடியாது. தந்தையாக முடியாது. ஆனால் 'எந்தாயும் எனக்கருட்தந்தையுமாகி' 'குருவுமாகி வந்தருள' வல்லான் கந்தன் ஒருவன் தானே? இதில் இருவேறு கருத்தும் இருக்கிறதா குமரன்? //

அருமை. அருமை. மிக அருமை. இராமநாதன் தஞ்சை உங்களுக்கு நெஞ்சை நிறைக்கும் தமிழை நிறையவே தருகிறது என்று நினைக்கிறேன். மிகச்சிறப்பான விளக்கம். முருகன் அருள் உங்களைச் சேரட்டும்.

said...

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஜிரா

said...

இராமநாதன்,
அருமையான பதிவு. அற்புதமான விளக்கம். மிக்க நன்றி.

said...

மிக்க நன்றி வெற்றி.

said...

உருவாய் அருவாய் உளாதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

குமரன், இதுதானே பாடல். இங்க என்ன சொல்லி இருக்காரு. முருகா நீயே எனக்கு குருவாய் வந்து அருள் புரிய வேண்டும் எனத்தானே சொல்லி பாடி இருக்காரு.

இதைத்தானே ராமநாதனும்
//அப்பெருமானை குருவாய் கொண்டவர்கள் மட்டுமே மெய்ப்பொருளை உணரமுடியும். அதுவும் அவனை குருவாய்க் கொள்வதே அவன் அருள் இல்லாமல் கிடைக்காது.// எனச்சொல்லி இருக்கிறார்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

இந்தப் பாடலுக்கு, இதில் சொல்லி இருக்கும் அத்தனையுமாய் எனக்குக் கிடைக்க, என் வினையழித்து நீ அருள வேண்டும் குகனே என்றும் பொருள் கொள்ள முடியுமே!

நம்மைப் பாட்டிக்காத, நாம் பின்பற்றாத குருவைப் பற்றி நாம் கவலைப் படத் தேவையில்லை. அவர் நம் குருவாய் வராதது குகன் அருள் எனக் கொள்ளலாம்.

அப்படியே வாய்க்குமாலும், அதுவும் நம் வினைப்பயனே என்றறிந்து, இனியாவது உன்னருளால், நல்ல குரு வாய்க்க அருள்வாய் என்றே இப்பாடல் சொல்வதாய் நான் கருதுகிறேன்!

ஏனெனில் குருவருள் இன்றி இறையருள் சித்திக்காது என்பதே விதி!

அதுதான் காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே~!

குஹன் வர மாட்டான்
அனுப்பி வைப்பான்

ஒரு சிலருக்கே அது நிகழும்!
அருணையார் போல!

பட்டினத்தாருக்குக் கூட மகன் மூலம் தான் இறையருள் கிடைத்தது

said...
This comment has been removed by a blog administrator.
said...

மன்னுபிறவி பல இருப்பினும், மானுடப்பிறவி ஒன்றின் மூலமே இறையை உணர முடியும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட பிறவி நமக்கு வாய்க்கவென நம்மீது கருணை கொண்டு, பத்துமாதம் வயிற்றில் சுமந்து நம்மைப் பெற்றவள் அன்னை.

பெற்றெடுத்த பிள்ளை பேர் சொல்ல்லும் பிள்ளையாக வேண்டுமே என்று, பல்லிடம் திரிந்து தக்கதொரு குருவிடம் நம்மைச் சேர்க்கப் பாடுபடுபவர் தந்தை.

நல்லதொரு குருவோ, தான் கற்ற வித்தையை, தான் கற்றதைவிட எளியதாக்கி தம் மாணவர்க்குப் போதித்து, இறையைக் காட்டத் துணை செய்கிறார்.

இறையருளைக் காட்டுவதில் இம்மூவரும் உதவுவதாலேயே, "மாதா, பிதா, குரு..தெய்வம்" என்று போற்றப்படுவர்!

இவர்கள் தயவின்றி, இறையை அடைய முடியாதென்பதால், சற்று மிகையாக இவர்களும் தெய்வமே எனச் சொல்லி வைத்தனர்.

இவர்களில் எவரேனும், அல்லது எல்லாருமே தவறாகிப் போதல் என்பதுதான், நம் இந்து மதம் சொல்லும் விதிப்பயன்!

[பிழை திருத்தி!]

said...

கொத்ஸ்,
குமரன் சொல்வது இறைவன் குருவின் வடடிவில் வருவதால், குருவையும் இறைவனாய்க் கொள்ளலாம் என்று.

அது விதியல்ல, விதிவிலக்கே என்பது என் கருத்து.

said...

எஸ்.கே,
//ஏனெனில் குருவருள் இன்றி இறையருள் சித்திக்காது என்பதே விதி!//

இதில் குருவானவர் தம் வழிகாட்டல் மூலமும் சத்சங்கத்தின் மூலமும் இறைவனை உணரும் ப்ராஸஸை ஸ்பீட் அப் செய்கிறார் என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை. இறையருள் சித்திக்க குருவானவர் வித்திடுவார் என்பதில் சர்ச்சைக்கே இடமில்லை. ஆனால் குருவையே இறைவன் என்று மாற்றுகின்றதை "shifting of goalposts" என்பதைத்தவிர எனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. எதை நாடி வந்தோமோ அதைவிடுத்து வழியில் திசைமாறிப் போவதைப் போன்றதே அது.

எனக்குத்தெரிந்த வரையில இன்னும் எளிமையான உதாரணமாய்: சென்னையிலிருந்து புதுவைக்கு போக வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அங்கே நாமே சொந்த முயற்சியில் நடந்து போகலாம். அல்லது பிறரின் உதவியுடன் பஸ் போன்றவற்றில் போகலாம். எதில் போனாலும் போகவேண்டிய தூரம் ஒன்றுதான். நேரம் தான் மாறுபடும்.

இதில் புதுவை என்பதை இறைவனின் திருவடி என்றும் சென்னையை பூலோகம் என்று வைத்துக்கொண்டால் குருவின்றி அலைவது நடப்பதற்கு சமம். பஸ்ஸைப் போன்றவர் குரு. சரியா? பஸ் தான் புதுச்சேரிக்கு கூட்டிக்கொண்டு போகவேண்டும். இது நீங்கள் சொல்வது. நான் ஒத்துக்கொள்கிறேன்.

என் கருத்து என்னவென்றால் புதுச்சேரி என்று போர்ட் வைத்த பஸ், புதுச்சேரி ஆகிவிடாது. சரியா?

நன்றி

said...
This comment has been removed by a blog administrator.
said...

எஸ்.கே,
இப்போதுதான் புரிகிறது. நீங்கள் பதில் சொல்லியிருப்பது கொத்தனார் அவர்கள் இட்ட உருவாய் அருவாய் செய்யுளுக்கு.

நீங்கள் சொல்வதோடு அல்மோஸ்ட் ஒத்துப்போகிறேன்.

//சற்று மிகையாக இவர்களும் தெய்வமே எனச் சொல்லி வைத்தனர்.

இவர்களில் எவரேனும், அல்லது எல்லாருமே தவறாகிப் போதல் என்பதுதான், நம் இந்து மதம் சொல்லும் விதிப்பயன்!//

தாய் என்பவள் இந்த பிறவிக்கு மட்டும். தந்தை என்பவர் இப்பிறவிக்கு மட்டும். குரு(நேரடியான) என்பவரும் இப்பிறவிக்கு மட்டும். இப்படியிருக்கையில் இவர்களை நம் ஆன்மாவை பிறப்பில்லாமல் கரையேற்றும் ஆற்றல்படைத்த தெய்வமாக்கலாமா?

ரொம்பவே broad ஆன பேப்பர் கத்தி வீச்சோ?? இருந்தால் மன்னிக்க. :P

said...

நல்ல ஆழமான கருத்துகளை மிக மிக எளிமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். ஆன்மீகத்திலேயே திளைப்பவர்கள் கூட கருத்தில் மாறுபடுவது விந்தையாகவும் உள்ளது. எப்படி இருந்தாலும் குருவின் துணையும் வேண்டும். அந்த குரு சத்குருவாய்க் கிடைக்கவும் அந்த சிவகுருநாதனின் அருள் வேண்டும்.

said...

பிறவிப் பெருங்கடலை நீந்தி கரை சேருவதற்கு குரு துணையில்லாமல் முடியாது."பிஷஜே பவரோகினாம்" "பவ சங்கர தேசிகமே சரணம்"

said...

"வழிகாட்டி"[sign post] உதாரணம் சாதாரணமாக எல்லாரும் சொல்வது.
நீங்கள் அதை பஸ் என மாற்றிச் சொல்லி இருக்கிறீர்கள்.

உங்கள் உதாரணத்தையே எடுத்துக் கொண்டால், பஸ்ஸில் போகாமலும் புதுச்சேரி போகலாம் என்றாலும், புதுச்சேரி என்ற பெயரை மட்டுமே கேள்விப்பட்ட அவன், அது எங்கிருப்பது, எத்திசையில் செல்ல வேண்டும் என்பதெல்லாம் தெரியாத அவன், எப்படி, எப்போது புதுச்சேரி சென்றடைய முடியும்?

ஒரு உயிரில்லா வழிகாட்டியாவது [signpost]அவனுக்குத் தேவையாகிறது.
அதன் பிறகும் அவன் பஸ் வேண்டாம் என முடிவு செய்து நடக்க ஆரம்பிப்பானேயாகில், போய்ச் சேர பல நாள் ஆகும்.

கந்தனே கூட நேரே வந்து நம்மை ஆட்கொள்ள முடியாது!
அவன் கூட ஒரு 'குரு'வாகத்தான் வந்து ஆட்கொள்ள முடியும்!

நேரடியாக வந்து ஆட்கொள்வது என்பது 'சிவம்'.... சிவன் அல்ல, சிவம் ஒன்றால்தான் முடியும் என நம் நெறிகள் சொல்கின்றன.
நந்தனாருக்கு வந்தருள் செய்தது போல!

வினைப்பயன், விதிப்பயன் இதெல்லாம் ஒத்துக்கொள்ளாமல், "வாழும் நெறியை" சரியாகப் புரிந்து கொள்ள முடியாது என எண்ணுகிறேன்.

நீங்களும் குருவின் மதிப்பைக் குறைத்துச் சொல்லவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
:))