Wednesday, March 29, 2006

7. வடிவேலிறைதாள் நினைவாய்

கெடுவாய் மனனை கதிகேள் கரவா
திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே. 7


//கெடுவாய் மனனை கதிகேள்! கரவாது இடுவாய்! வடிவேல் இறைதாள் நினைவாய்//
தினந்தோறும் வயசு ஏறுகிறது நமக்கு. வயசு மட்டும் ஏறி நின்றால் பரவாயில்லியே. நாம் தினமும் பார்க்கும் உலக விஷயங்களாலும், அடுத்தவரின் நடத்தைகளாலும், நம் எண்ணங்களாலும் என்று பல வழிகளில் நம் மனசை கல்லாக்கி மாசுபடுத்திக்கொள்கிறோம். போன பாடலில், அவனை நினைத்தால் போதுமே, அவன் பாதத்தாமரைகள் நம் மனதில் ஒளிவீசுமே என்று சொன்னவுடன் அது மிகவும் எளிமையானது என்கிற மாதிரி ஒரு பிம்பம் ஏற்பட்டிருக்கும். அது எளிமையானதுதான், நம் மனம் மும்மலங்களினாலும் அழுக்காய் கல்லாய் ஆகாமல் போயிருந்தால். கல்லின் மேல் தானாய் தாமரைப் பூக்கும் என்று சொன்னாயே, என்றால் அதுவும் உண்மை தான். ஆனால் அவனை நினைக்க வேண்டுமே. அதுகூட ஒரு நொடி செய்ய மாட்டேனென்றல்லவா நம் மனமும், எண்ணமும் எப்பொழுதும் வேறெங்காவது ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு கடிவாளம் போடவேண்டாமா. அதனாலேயே தம் (நம்) மனதிற்கு ஆர்டர் போடுகிறார் அருணகிரி.

கெட்டுப்போய்க்கொண்டிருக்கிற மனமே! கதி கேள்! இதை விட்டால் நீ உய்வதற்கு வழி கிடையாது. இதைச் செய்து நற்கதி அடைவாய்.

1. கரவாது இடுவாய் - ஈயென்று உன்னிடம் வந்து கேட்போருக்கு இல்லையென்று சொல்லாமல் ஈதிடு. இது என்ன சம்பந்தமே இல்லாமல் திருக்குறள் அறத்துப்பால் மாதிரி லெக்சரெல்லாம் அருணகிரி அளிக்கிறாரென்று நினைக்க வேண்டாம். இதற்கும் பொருள் இருக்கிறது. காசிக்கு போனால் நமக்குப் பிடித்த ஏதாவது ஒரு பொருளை விடுவோம், அல்லவா? (நானும் அப்ப காசிக்குப் போய் படிப்ப விட்டுடவான்னு கேட்டு பதிலுக்கு ஒரு 'இப்படியும் ஒரு அசடா' லுக் வாங்கிருக்கேன் ஸ்கூல் காலத்துல).

காசிக்கு போய் விடுவதற்கு உண்மையில் பொருள் என்ன? நமக்குப் பிடித்ததை விடுகிறோம் என்றால் பகவானுக்குக் கொடுக்கிறோம் என்று அர்த்தமில்லை. மாறாக நாம் அதுவரை ஒன்றின் மேல் இருந்த பற்றை விடுகிறோம் என்று அர்த்தம். இவ்வுலக விஷயங்களில் பற்றைவிடுவது மிகவும் அவசியமானதல்லவா? அதேபோல, ஒருவர் கேட்கும் பொருளை தானமாய்க் கொடுப்பதன் மூலம் அப்பொருளுடனான நமக்கிருந்த பற்றெனும் தளை அறுபட்டுப் போகின்றது. இதனால் நமக்கும் நன்மையே உண்டாகிறது. இந்தக் காரணத்தாலேயே நம் பெரியோர்கள் ஈதல் பற்றி அவ்வளவு சிலாகித்து சொல்லியிருக்கின்றனர்.

2. வடிவேலிறைதாள் நினைவாய் - இறைவனை நினையாது கொடுத்தால், நாம் கொடுக்கிறோம் என்று நினைக்கத்தோன்றும். அது அகம்பாவம். எதுவுமே நம்முடையதில்லை என்று உணர்ந்து நாம் என்னும் அகம்பாவம் - அதை விட்டொழிக்க எந்நேரமும் வடிவேலனின் இறைதாள்களை நினைப்பாய்.


//சுடுவாய் நெடுவே தனைதூள் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே.//

மெய்யடியார்க்கு தீவினைகள் அறவே வராது என்று

காதலாற்கழற் சேவடி கைதொழ அம்பலத்துறை வான்அடியார்க் கடையாவினையே!
சிதம்பரத்தில் உறைபவன் மீது காதல் கொண்டு அவன் செவ்வடிகளை எந்நேரமும் கைதொழும் அடியாரிடம் வினைகள் அண்டாது என்று சம்பந்தப் பெருமான் பாடியிருக்கின்றார்.

அருணகிரிநாதரும் இப்படி மேற்கூறியதைச் செய்தால் நெடுவேதனை - பிறப்பும் இறப்பும் இவ்வுலகவாழ்க்கையும் - இவற்றால் நம் ஆன்மா படும் நீண்ட வேதனையும் - தன்னை சுட்டெரிப்பாய். இதற்கு கந்தர் அலங்காரத்தில் இன்னும் அழகாக, நான்முகனுக்கே சவால் விடுகிறார் அருணகிரியார்.

பங்கேருகன் எனைப் பட்டோலையில் இடப் ...
என்கோன் அறியின் இனி நான்முகனுக்கு இருவிலங்கே


பிரம்மாவே(பங்கேருகன்)! கேள்! என் தலையெழுத்தை எழுத வேண்டுமென்று நீ நினைத்து, அதை என் கோவலனான முருகன் அறிந்தான் என்றால், உன் காலில் முற்சமயம் ஒரு விலங்கு போட்டவன் இப்போது இரண்டாவது விலங்கும் போடுவான்!

அப்படி குமரன் தாள்கள் பணியும் அடியார்களிடம் பிரம்மனும் கூட விளையாட முடியாது என்கிற போது வினைகள் எம்மாத்திரம்?

இங்கே அடுத்து வரும் 'விடுவாய் விடுவாய் வினையாவையுமே' கொஞ்சம் முக்கியத்துவம் வாய்ந்தது - வினைகள் இரண்டுவகை. நல்வினை தீவினை. தீவினை விட வேண்டும் சரி. ஏன் நல்வினையும் விட வேண்டும்? நல்வினையை விடக்கூடாது. ஆனால் அவற்றால் பயன் வருமென்ற எண்ணத்தை விடவேண்டும் என்கிறார். கண்ணன் கீதையில் சொன்ன கர்ம யோகமும் இதுதான். பலனை எதிர்ப்பார்க்காமல் உன் வேலையைச் செய். வேதனைகள் தானாகவே தூளாகும் இறைவனின் அருளால்.


---
கெட்டுக்கொண்டிருக்கும் மனமே! உய்ய வழி கேள்! இல்லையென சொல்லாமல் ஈதிடுவாய்! எந்நேரமும் குமரன் தாள் நினைவாய்! அதைச் செய்தால் உன்னை அண்ட வரும் வினைகள் யாவும் தூளாய் போகும்.

6 comments:

said...

அருமையான விளக்கம் இராமநாதன்.

அறம் பொருள் இன்பம் மூன்றும் குறளில் மட்டுமல்ல அருணகிரியின் பாக்களிலும் உண்டு. நல்வழி காணும் அறம். அதனால் கிடைக்கும் முருகனின் அருள் எனும் பொருள். அதன் வழி நுகரும் பேரின்பம். இவை மூன்றும் அருணகிரியின் அழகு தமிழ் படிக்கக் குறையாது கிடைக்கும்.

தோண்டத் தோண்ட ஊறும் கேணி போல படிக்கப் படிக்கப் பொருள் விளங்கும் அற்புதக் கேணி அருணகிரி.

பங்கேருகன் என்ற சொல்லாடல் மிகவும் அருமை. புதிய தமிழ்ச் சொற்களைக் கையாள்வதில் தமிழ்ப்புலவர்களுக்கு இணை அவர்கள்தான்.

கந்தர் அந்தாதியில் ஒரு சொல். பனிப்பானு என்று. இது குறிப்பது நிலவை. பானு என்றால் சூரியன். பனிப்பானு என்றால் பனி போன்ற சூரியன். அதாவது நிலவு.

said...

ஜிரா,
நன்றி

//பனிப்பானு என்று. இது குறிப்பது நிலவை. பானு என்றால் சூரியன். பனிப்பானு என்றால் பனி போன்ற சூரியன். அதாவது நிலவு.//
நான் பானு என்றாலே நிலவென்றல்லவா நினைத்திருந்தேன். சந்திரவதனாவின் இன்னொரு பெயரே பானுமதி என்று நினைத்திருந்தேன். தகவலுக்கு நன்றி.

said...

இல்லை இராமநாதன். பானு என்றால் சூரியன். உதயபானு என்றெல்லாம் கூடச் சொல்வார்கள். பானுமதி என்றால் சூரியசந்திரன். மதி என்பது நிலவு. பானு என்றால் சூரியன். சந்திரவதனாவிற்குப் பொருளே வேறு. சந்திரவதனையென்றால் மதிமுகம் என்று பொருள்.

said...

நன்றி ஜிரா

said...

பொருள் விளக்கம் நன்று இராம்ஸ்.

said...

'மனனே' என்றுதான் படித்திருக்கிறேன்;
நீங்கள் 'மமனை' எனப் போட்டிருப்பது பற்றி....?