Monday, March 27, 2006

6. கல்லில் தாமரைப் பூப்பதும் ஆச்சரியமோ?

6. கல்லில் தாமரைப் பூப்பதும் ஆச்சரியமா?

திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந்த மரும்பு மதோ
பணியா வென வள்ளி பதம் பணியுந்
தணியா வதிமோக தயா பரனே. 6


//திணியான மனோ சிலை மீது உனதாள் அணியார் அரவிந்தம் அரும்புமதோ//
திணியான மனோசிலை - நம்மனசை மிகவும் உறுதியான கனமான கல்லென்று சொல்லிதான் அநுபூதியையே ஆரம்பித்தார் அருணகிரி சுவாமிகள். நெஞ்சக்கன கல்லுஞ் நினைவுக்கு வருகிறதா? ஏன் கல்லென்று சொன்னார்னு அந்தப் பதிவுலேயே (கடவுள் வாழ்த்து (காப்பு)) பாத்துட்டோம். அதனால் சுருக்கமாக.. சிலை என்றால் கல். சிலையை வடிக்கக் கற்கள் தானே பயன்படுத்தறோம். திடமாக இருக்கும் உறுதியான கல் போன்று இருக்கிறது நம் மனம்.

இந்தக் கல்நெஞ்சோட ரெண்டு வழியில போகலாம். முத வழி ரொம்ப ஈஸி வழி. என்னது? டமார்னு எடுத்து தரைல போடறது. முன்னாடி சொன்னா மாதிரி தூளாகிப்போன கல்லால யாருக்காவது எதாவது பயன் இருக்கா? நாம இருந்தா என்ன செய்வோம்? அந்த மாதிரி குட்டிக்கல்லையெல்லாம் பொறுக்கி பாதைக்கு வெளிய, யார் கால்லேயும் படாத மாதிரி தூக்கிப்போட்டுட்டு நம்ம வேலையப் பாக்கப்போய்டுவோம்.

இரண்டாவது பக்தி வழி. முருகன நினச்சா, அவனே நமக்கு பொற்கொல்லன். அருணகிரியவே அவன் செதுக்கி வெறும் கல்லை ரத்தினமாக்கலையா? அதுவே தான். வைரம் கிடைக்கும் போது வெறும் கல்லாதான் கிடைக்கும். எடுத்துத் தூக்கிப்போட்டுடுவோம். அதுக்கு ஒரு மதிப்பும் கிடையாது. ஆனா சுத்திகரிச்சு பட்டை தீட்டினா அத வெறும் கல்னு புறந்தள்ள முடியுமா? நம்மள நாமே பட்டை தீட்டிக்கறதுதான் பக்தி. அந்தப் பக்தியை நமக்கு தரவனும், அதன் பயனான அருளைத் தருபவனும் கந்தனே. அவன் தான் நமக்கு சிற்பி, பொற்கொல்லன் எப்படி வேணா வச்சுக்கோங்க. அப்படி வைரமான நாம் அப்புறம் என்னாவோம்? அவனுக்கே அணிகலனாவோம். இங்கே அணிகலனால் அவனுக்கு சிறப்பு கிடையாது. ஆனால், அவனால் நமக்கு முக்தி. அவனில்லாம அவனருள் இல்லாம நாம ஒருநாளும் வைரமாக முடியாது. மனசு யாருக்கும் பிரயோஜனமே இல்லாத கல்லாத்தான் இருக்கும்.

இதுவே அபிராமி பட்டர் கொஞ்சம் வேற மாதிரி

வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து,
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை--விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே

னு பாடியிருக்கார். என்னதான் புதுவீட்டுக்கு போனாலும், நாம பிறந்து வளர்ந்த பழைய சொந்த வீடு மாதிரி வருமா? அந்த மாதிரி அபிராமியே வந்து பட்டரின் மனசை அவளோட பழைய வீடு மாதிரி நினைச்சு வந்து உட்கார்ந்துகொள்கிறாள்.

அதையே தான் இங்கே அருணகிரிநாதர் 'உன் பொற்பாதங்களையே நினைந்துருகும் அடியார்களின் மனதில் தாமரைபோல நீ மலர்வதில் ஆச்சரியமும் உண்டோ?னு கேக்கறார்.

நாம் குமரனின் பொற்பாதங்களை பணிகிறோம். அவனுக்கும் ஒரு மேலிடம் இருக்கணுமே. கால்ல விழ. அவன் யார் கால்ல விழுகிறான்னு கேள்வி.
//பணி யாவென வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக தயாபரனே//
நம்ம 'அம்மா' கால்ல மந்திரிங்க விழற போட்டோக்கள பாத்துருக்கீங்களா? அவங்க பார்வையே ஆயிரம் கவித சொல்லும். பயபக்தியா சாஷ்டாங்கமா விழுந்து எழுந்து, பவ்யமா கையக்கட்டிகிட்டு 'நீங்க சொல்லுங்க, என்ன செய்யட்டும்'னு லுக் விடுவாங்க. அம்மா என்ன நினைக்கறாங்களோ, நாம அதச் சரியா செய்யணுமே அப்டி இப்டினு அவங்க மண்டைக்குள்ள ட்ரெயின் ஓடிகிட்டுருக்கும். அதுமாதிரி முருகனுக்கு சுப்ரீம் கோர்ட் வள்ளி தானே? அதான் அவ கால்ல விழறச்சேயே நான் இப்ப என்ன செய்யணும்னு சொல்லும்மான்னு ஆசையா கேட்கிறான் கந்தன். ஏன் இப்படி? பின்ன மனைவி சொல்றத கேக்கலேனா எப்படி. இராத்திரிக்கு தினைமாவு கிடைக்காதே. மேலோகத்துலேர்ந்து பாதாள லோகம் வரை அம்மாக்களோட பவர் பாயுது. இல்லியா? ஏன்னா, வள்ளி மேல அவ்ளோ அன்பு. தணியாத அன்பு. அன்பைக் காட்டறதுல எப்படிப் பட்டவன்? தயாபரன். கருணையே வடிவானவன்.

வள்ளியின் மேல் கொண்ட காதலினால் அவள் பதம் பணிபவனின் பாதத்தை நாம் பற்றுடன் பற்றினால் நம் கல்மனம் அவனாய் அவனருளால் தாமரையாய் மலரும். அப்படி மலர்வதில் தான் ஆச்சரியமும் உண்டோ?

13 comments:

said...

நல்லா எழுதியிருக்கீங்க இராமநாதன். இராகவன் இந்தப் பாடல்களுக்குப் பொருள் எழுதுன பின்னாடி நீங்க எழுதுவது ஒரு பெரிய சவால் தான். சவாலை அருமையாகச் சந்திக்கிறீர்கள். அவர் எழுதிய பின் நீங்கள் எழுதுவது உங்கள் தைரியத்தைக் காட்டுகிறது. :-)

said...

குமரன்,
நன்றி

//அவர் எழுதிய பின் நீங்கள் எழுதுவது உங்கள் தைரியத்தைக் காட்டுகிறத//
இதுக்குப் பேர்தான் அசட்டுத்தைரியம்னு நினைக்கிறேன். :))

said...

ஆமாம் இராமநாதான் அ(ட) சட்டுன்னு வர தைர்யம்தான்.கந்தபுராணம்,திருப்புகழ்,திருமுருகாற்றுப்படை எல்லாமே முருகனைப் பற்றியதுதான் நாம் படிக்கவில்லையா . அதுபோல்தான் இராகவனும்,நீங்களும் அனுபூதியைப்பற்றிஎழுதுவது.ஒன்று சர்க்கரை மற்றது கல்கண்டு எது இனிப்பு அதிகம் சொல்லுங்கள். தி ரா ச

said...

தி.இரா.ச,
உங்கள் அன்புக்கு நன்றி. இருந்தாலும் இராகவனையும் என்னையும் சேர்த்துச் சொல்வது ரொம்பவே அதிகம். :))

நன்றி.

said...

சபாஷ் சரியான போட்டி. ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாடட்ம். ஆனா நீங்கள் இரண்டு பேரும் எழுதினா எங்களுக்கு கொண்டாட்டம். கருத்துக்கு பிறகு வருகிறேன். தி ர. ச.

said...

வள்ளியின் மேல் கொண்ட காதலினால் அவள் பதம் பணிபவனின் பாதத்தை நாம் பற்றுடன் பற்றினால் நம் கல்மனம் அவனாய் அவனருளால் தாமரையாய் மலரும். அப்படி மலர்வதில் தான் ஆச்சரியமும் உண்டோ

பாதத்தினை பற்றினால்

இருகரம் கூப்பி உன்னைத் தொழுவேனோ
இருகைகொண்டு உன்கழல் பற்றுவேனோ
கழலைக் கொண்டு பாவங்களைத் தொலைப்பேனோ
கருணை கொண்டு கதி அடைவேனோ
தி ரா ச

said...

//இந்தக் கல்நெஞ்சோட ரெண்டு வழியில போகலாம். முத வழி ரொம்ப ஈஸி வழி. என்னது? டமார்னு எடுத்து தரைல போடறது. முன்னாடி சொன்னா மாதிரி தூளாகிப்போன கல்லால யாருக்காவது எதாவது பயன் இருக்கா //

மிக எளிமையாக பெரியவொரு விஷயத்தை சொல்லியிருக்கிறீர்கள். யாருக்கும் எந்தப் பயனுமில்லாமல் கல்லாகக் கிடக்கும் நம் மனமும் அவனருளால், அவனுக்காக அன்பால் உருகும், குழையும். அதற்குத் தேவை பக்தி ஒன்று மட்டுமே.

//அவனில்லாம அவனருள் இல்லாம நாம ஒருநாளும் வைரமாக முடியாது. மனசு யாருக்கும் பிரயோஜனமே இல்லாத கல்லாத்தான் இருக்கும்.//

"அன்போடு உருகி அகம்குழை வார்க்கன்றி
என்போல் மணியினை எய்தஒண் ணாதே" -திருமந்திரம்

அப்படி உளம் குழைந்து , கசிந்துருகி பன்னிப் பன்னித் திருப்புகழ் பாடிய அருணகிரியாரின் வல்வினைகளையெல்லாம் தன் ஞானச்சுடர்வேலால் சுட்டெரித்து மாயை களைந்துவிட்டான். கல்லிலும் தாமரை பூக்குமோ ? பூத்துவிட்டதே, கல்லான என் மனதிலும் உன் பாததாமரைகள் பூத்ததே, இதென்ன அதிசயம் என்று மகிழ்கிறார் அருணகிரியார்.

"கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத் "

(கல்லான என் மனதை) கல்லை பிசைந்து சுவையான கனியாக்கி, தன் கருணை வெள்ளத்தில் மூழ்கடித்து வினைநீக்கிய பெருமானே என்கிறார் மாணிக்கவாசகர்.

உமைபாகனோ, அவன் மகனோ நாம் எந்த உருவில் அவனை காண்கிறோமோ, அதுவாகவே நமக்கு அருள்கிறான்.

said...

//கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத் "-- மாணிக்கவாசகர்//

அட! இதிலிருந்துதான் கவிஞர்,

"கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனியாக்கும் உந்தன் ஒரு வாசகம்"

என்ற அழியா வரிகளைப் படைத்தாரோ!!

said...

தி.இரா.ச,
இந்தப் பாட்டு எதில் வருகிறது?

said...

ஜெயஸ்ரீ,
வழக்கம் போல அருமை.

பதிவு மட்டும் கண்ல காட்டமாட்டேங்கறீங்க. என்ன போங்கு இது? :))

said...

எஸ்.கே,
கவிஞர்னா ஆருங்கோ? கண்ணதாசனா? என்ன படம், என்ன பாட்டு.. ஒண்ணுமே சொல்லாம அழியா வரிகள்னு வெறும்னே ஓடினா எப்படி? :)0)

said...

இதென்ன கூத்து....வாரியார் மாதிரி தமிழ்க்கடல்களும் கி.வா.ஜ மாதிரி தமிழ்மலைகளும் எழுதுன பிறகும் நானெல்லாம் எழுதலையா....அது மாதிரி இராமநாதனுக்கும் முழு உரிமை இருக்கு. திறமை இருக்கு. எழுதுங்க இராமநாதன். அதே பருப்பு அதே காய்கறிகதான். ஆனா வீட்டுக்கு வீடு கொழம்பு வேறுபடலையா?

said...

"கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனியாக்கும் உந்தன் ஒரு வாசகம்"

படம் : ஆலயமணி
பாடல் :" கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா "

கூடிய சீக்கிரம் ( நீங்க இன்னொரு முறை கேட்பதற்குள்) பதிவை ஆரம்பித்து விடுகிறேன் .