Tuesday, September 05, 2006

11. உணர்வித்து உய்வித்தவன்!

கூகாஎன என்கிளை கூடியழப்
போகாவகை மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவித்
த்யாகாசுர லோக சிகாமணியே (11)

//நாகாசல வேலவ! நாலுகவித் த்யாகா! சுரலோக சிகாமணியே!//

அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளிய புண்ணியத்தலமான திருச்செங்கோட்டிற்கு நாகாசலம் என்ற பெயரும் உண்டு. அதற்கான காரணத்தையும் சொல்லிவிடுகிறேன். முன்பொரு சமயம், ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்குமிடையில் சண்டை மூண்டது. மகாமேரு மலையை ஆதிசேஷன் சுற்றிக்கொள்ள, கடுமையாக நடந்த போரின் முடிவில் வாயு தன் வலியால் ஆதிசேஷனை ஊதித்தள்ள அவர் விழுந்த குன்று அவர் குறுதிபட்டு செந்நிறமாக மாறியதால் திருச்செங்குன்றூர் ஆயிற்று. அதுவே சேஷாசலம் என்றும் நாகாசலம் என்று வழங்கப்பட்டது. திருமலைக்கும் சேஷாசலம் என்ற பெயர் உண்டு, ஆனால் அருணகிரி குறிப்பிடுவது நாகாசலமான திருச்செங்கோடு என்றுதான் நினைக்கிறேன். அந்த ஊரின் செங்கோட்டு வேலவர் மிக பிரசித்தம்.

நாலு கவித் த்யாகா - நான்கு விதமான கவிதை வகைகள் தமிழில் உண்டு. அவற்றை தருபவனே! தென்னாடுடைய சிவனல்லவா. அவர் அம்சத்துடன் கூடிய குமரன் தமிழ்க்கடவுளல்லவா. சிலருக்கு பேச்சே வராது. பலருக்கு வரும். சிலருக்கு - இவருக்கு ஏன் வருகிறது என்று மற்றவர் மனம் குமுறும், சிலர் பேச ஆரம்பித்தாலோ மற்றவரெல்லாம் வாயை மூடிக்கொள்வர். இப்படி பலவிதமாய் பேசக்கூடிய மொழிப்புலமை பெற்றோர் இப்பூமியில் உண்டு. ஆனால், ஆயிரம் பேர் பாடினாலும் இறைவனாகத் தேடிவந்து 'இவன் பாடி நாம் கேட்கவேண்டுமே' என்கிற கருணையாலும், ஆசையாலும் வந்து சிலருக்கு தீட்சை கொடுப்பதுண்டு. அவர்களெல்லாம் புண்ணியவான்கள். அப்படி கொடுக்கப்பட்டவர் அருணகிரி. நாலுவிதமான கவிதைவகைகளையும் எனக்கு தந்த தயாபரா!

சுரலோக சிகாமணியே - "அசுரர்"க்கு எதிர்ப்பதம் சுரர். சுரர் என்றால் தேவர்கள். தேவர்களின் லோகங்களுக்கும் அவற்றில் வாழ்வோர்க்கும் முதன்மையான தலைவனே! மற்ற மேக்கப்பெல்லாம் போட்டுமுடித்துவிட்டு கடைசியாக பதவிசாக முடியில் சூடிக்கொள்ளும் ஆபரணம் தான் சிகாமணி. அதுவே மேலானது. மற்றவற்றிற்கும் மேலாய் இருப்பதனால் மட்டுமல்ல. மேன்மை பொருந்தியதாலும் தான்.

//கூகா என என்கிளை கூடி அழப்போகா வகை மெய்ப்பொருள் பேசியவா//
சென்ற பாடலில் தன்னை அழைத்துச் செல்ல யமனின் தூதர்கள் வருகையில் எதிரே வந்து ஆட்கொண்டருள்வாய் என்று அழைத்தார். ஒருவர் இறந்தால் சுற்றத்தவரும் உறவினரும் கூடி அழுது ஒப்பாரி பாடுவது வழக்கம். ஆன்மாவைப் பொறுத்தவரை இறப்பும் பிறப்பும் ஒன்றுதானே. உடல் தானே அழிகிறது. இங்கே இறக்கும் ஆன்மா, அது செய்த புண்ணிய பலன்களுக்கு ஏற்றவாறு மறுபிறப்போ, சிவானுபூதியோ அடைகிறது. ஒரு ஆன்மா பிறக்கையில் சந்தோஷப்படும் நாம், அது இறக்கையில் வருத்தப்படுகிறோம். பிறக்கையில் உண்மையில் பெற்றோர்கள் சந்தோஷப்படவேண்டிய காரியம் தான். வம்சம் வளர்க்க சந்ததி பிறந்ததை நினைத்தா சந்தோஷமா படவேண்டும்? அது மீண்டும் பந்தபாசங்களுக்கல்லவா நம்மை இட்டுச்செல்லும்? பிறந்த இந்த உயிருக்கு நம்மால் இயன்ற அளவு நற்புத்தியையும் நற்பண்பையும் கற்றுக்கொடுத்து, ஒரு ஆன்மாவை இந்த ஜென்மத்திலேயே கடைத்தேற வழிவகை செய்ய பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறதே; அந்தப் பரம்பொருளே "இந்த ஆத்மாவிற்கு ஒரு நல்லவழியை காட்டு என்று நம்மையும் நம்பிக்கொடுத்திருக்கிறானே" என்றல்லவா சந்தோஷப்படவேண்டும்.

இறக்கையில் யார் அழுவார்கள்? 'அய்யோ, தொண்ணூறு வயசு இருந்தாரே, பண்ணது முழுக்க பாவம். செய்தது முழுக்க துரோகம். இவராத்மா கடைத்தேற இன்னொரு ஜென்மா பிறக்க வேண்டியிருக்குமே' என்று சுற்றத்தவர்கள் எண்ணுகையில் தான் அய்யோ அம்மாவென்று கூச்சல் போட்டு (கூ கா) அழவேண்டும். அப்படி வாழ்க்கையையே பாவமாக கழித்தவர்களின் சுற்றத்தவர்கள் அழுவதிலலும் நியாயமுண்டு.

அடியாராய் ஆக்கிக்கொள்வதும் பின் அவரை தன்னிடம் அழைத்துக்கொள்வதும் இறைவன் சித்தம் அல்லவா. ஒரு அடியார் இறந்தால் கூச்சலிட்டா அழுவார்கள்? 'புண்ணியவான், சீக்கிரமே சிவலோகம் போய்ச்சேர்ந்துவிட்டாரே.. இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தால் இவரிருந்த நம் வீட்டிற்கு சாநித்தியம் இன்னும் சற்று அதிகமாகியிருக்குமே. பூவுடன் சேர்ந்த நாரைப்போல நாமும் இன்னும் கொஞ்சம் நற்கதி அடைந்திருக்கலாமே' என்று உருகுவர். அவர்களின் உருக்கத்தில் ஒப்பாரி இருக்காது. ஆதங்கமே இருக்கும். அப்படி என்னையும் அடியாராக்கிக் கொண்டு - என் சுற்றத்தவர் என் ஆத்மா அடுத்த பிறவியில் பாவஜென்மமாய் பிறக்குமே என்று எண்ணி எண்ணி ஒப்பாரி வைத்து அழாத வகையில் - எனக்கு இப்பிறவியிலேயே நற்கதியை, மெய்ப்பொருளைக் காட்டிய தலைவா என்று உருகுகிறார் அருணகிரி.

நற்கதியை நாமும் இப்பிறவியிலேயே அடையலாம். நிதமும் அந்த செங்கோட்டு வேலனைப் பணிந்தால்.

--
திருச்செங்கோட்டு வேலவா! தேவலோகத்தின் இறைவா! தமிழள்ளித்தந்த தலைவா! மறுபிறப்பென்று ஒன்று இல்லாமல், என்னையும் அடியாராக்கிக்கொண்டு, என் சுற்றத்தவர் நான் இறக்கையில் என் ஆன்மா முக்தி பெறுமோ என்று கூச்சலிட்டு ஒப்பாரி வைக்காமல் - எனக்கு பரமானந்தத்தை உபதேசம் செய்த ஞானப்பரம்பொருளே!

10 comments:

said...

மிகவும் அருமையான விளக்கம். அடியவர்களுக்கு காலனா வருவான்? வருவான் வடிவேலன். ஆகையால் அங்கு அமைதி தவழ்கிறது.

நாகாசலம் என்பது இன்னதுதான் என்று உறுதியிட்டு சொல்ல முடியவில்லை. நான் படித்த பெரியவர்களும் அப்படித்தான் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

said...

மிக்க நன்றி ஜி.இரா,
நாகாசலம் என்று சுவாமிகள் குறிப்பிடுவது திருச்செங்கோடு என்பது என் எண்ணம் தான். அது திண்ணம் இல்லை.

பதிவை இப்போது திருத்திவிட்டேன்.

said...

இன்னொரு தகவல். திருச்செங்கோட்டு முருகன் கோயில் சிலப்பதிகாரத்திலும் அதற்கு முந்தய நூல்களிலும் வருகிறது.

திருச்செங்கோட்டிலும் நவபாஷாண முருகந்தான். ஆனால் வெண்ணிறம்.

said...

இராமநாதன்.

'கூ கா என என் கிளை கூடி அழப் போகா வகை மெய்ப்பொருள் பேசியவா' என்ற அடிகளுக்கு மிக மிகச் சிறப்பான விளக்கத்தைத் தந்திருக்கிறீர்கள். எனக்கு இந்த வரிகள் இப்போது தான் தெளிவாகப் புரிந்தன. மிக்க நன்றி.

said...

ஜிரா,
திருச்செங்கோடு சிறுவயதில் பார்த்திருக்கிறேன். நினைவில் இல்லை.

நன்றி

said...

குமரன்,
மிக்க நன்றி.

இவ்விரு பாடல்களையும் உங்களிடம் விளையாட்டாக சொல்லப்போக நன்றாக விளையாட்டு காட்டினீர்களே. மறக்கமுடியுமா? :))

said...

ஆசு முதல் நாற்கவியும் அட்டாவதானமும் தந்து அருள் புரியும் முருகனை பற்றி தமிழில் தான் எத்தனை பாடல்கள். நீங்கள் எழுதிய பாடலை நான் இப்போதுதான் கேட்கிறேன். நல்ல பொருளுரையும் கூட. நன்றி

said...

மிக்க நன்றி தேன் துளி,
கந்தர் அநுபூதியில் வரும் பாடல் தான் இதுவும்.

//தமிழில் தான் எத்தனை பாடல்கள்//
ஆம், மலைப்பாக இருக்கிறது. பாரதப் புண்ணிய பூமி என்று சொன்னவர்கள் சும்மாவா சொன்னார்கள்.. அதிலும் தமிழ்நாட்டிற்கு தனி விசேஷம் தான்.

said...

THE SONGS ARE VERY GOOD
MEANING IS FANATASTIC
THANKS A LOT

said...

மிக்க நன்றி பி.எஸ்.ஆர். இராஜா