Monday, November 06, 2006

12. திருடன் வருவானா? திருடிச் செல்வானா?

செம்மான் மகளைத் திருடுந் திருடன்
பெம்மான் முருகன் பிறவா னிறவான்
சும்மா இரு சொல்லற வென்றலுமே
அம்மா பொரு ளொன்று மறிந்திலனே. (12)

//செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான்//

அம்பாளின் அம்சமாய் வந்த சிவந்த மான் ஒன்று சிவமுனியின் பார்வை பட்டதால் கருவுற்று அவ்விடத்திலேயே வள்ளிக்கிழங்கு செடியொன்றின் அருகாமையில் ஈன்றுவிட்டு மறைந்தது. அவ்வழி வந்த வேடரின் அரசன் அம்மகளைத் தம்மகளாய் தத்தெடுத்து வளர்த்து வரலானான். அரசனுக்கு வள்ளிக்கு முன்னர் ஐந்து பிள்ளைகள். அவர்களும் முருக பக்தியில் சிறந்து விளங்கினர். குடும்பத்து ஒழுக்கம் குழந்தைக்கு வராதா? கண்ணனுக்கு ஒரு ருக்மிணி போல குறமகள் வள்ளியும் முருகவேளின் மனைவியாகவே தன்னை பாவித்து வாழ்ந்துவந்தாள். சதா சர்வகாலமும் முருகப்பெருமானையே நினைத்து நினைத்து நெக்குருகி ஆட்கொள்ள வேண்டி வந்த வள்ளியை தோழியர் 'அந்த முருகனா வருவான்? அதுவும் உன்னை மணக்க? பைத்தியக்காரி' என்று கிண்டல் செய்தனர்.

திருடன், கள்வன் என்று ஒருவனை இழிவாய்க் கூறுவார்கள். ஆனால் அந்தப் பட்டத்தையும் முருகன் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறான். அருணகிரி முருகனின் கருணையை அப்படியே வார்த்தைகளில் வடித்திருக்கிறார். செம்மான் மகளை மணந்த மணாளன் என்று சொல்லாமல் திருடும் திருடன் என்று சொல்வதன் மூலம். இதற்கு நேரடியாக கந்த புராணத்தில் வேடர்க்கரசன் அவ்வாறு பெருமானை விளித்தமையால் அதே சொற்றொடரை பயன்படுத்தியுள்ளார் என்பதைவிட, தன்னையே நினைத்து உருகும் பக்தர்களின் மேல் முருகனுக்கு பேராசை என்பதைத் தான் குறிப்பால் சொல்கிறார் எனக்கொள்ள வேண்டும். அவனுக்கும் அவனடியார்க்கும் நடுவே யார் குறுக்கே நின்றாலும், நடுநிசியில் ஒரு திருடனைப் போல தெரியாமல் வந்து கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு, தன் அடியாரைக் கவர்ந்து சென்று தன்னுள் கலக்கச் செய்துவிடுவான் குமரன்.

வள்ளி என்ன தவயோகியா? இல்லை பூஜை பல செய்தாளா? கோயில் கோயிலாக சுற்றினாளா? மந்திர தந்திரங்கள் கற்றுத்தேர்ந்தவளா? இல்லியே. இவையொன்றுமேயில்லாத சாதாரண குறமகள். அவளுக்கு பின் எங்கேயிருந்து இந்த கீர்த்தி? எவ்வித பிரதிபலனும் எதிர்பாராத உண்மையான பக்திக்குத்தான் இறைவன் அடிமை என்பது தெளிவு ஆகிறது. நந்தனுக்குக்காக தன் உற்ற வாகனமான நந்திக்கே 'நகர்ந்து நில்' என்று பரமேஸ்வரன் ஆக்ஞையிடவில்லையா? சிதம்பரத்தையே பார்த்தறியாத, வேதத்தையே கேட்டறியாத பாமரனுக்கு சிவயோகம் அளித்துக்காக்கவில்லையா?

முருகன் சிவகுமரனேயல்ல, சிவனே தான் என்கிறது கந்தபுராணம். அதனாலே தான் அவன் பிறவான் இறவான். என்றுமே பிறப்பில்லாதவன். என்றென்றைக்கும் இறப்பில்லாதவன். சர்வேஸ்வரன் அவனே.

//சும்மா இரு சொல் அற என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே//

சும்மா இரு சொல் அற - என்று எளிய தமிழில் திருவண்ணாமலையில் கந்தன் அருணகிரிநாதருக்கு உபதேசித்தான். கேட்பதற்கு மிக எளிதான உபதேசம் தான். நடைமுறைப்படுத்துவதில் தான் பெருஞ்சிக்கல். ஒரு நிமிடம் கண்ணைமூடி சும்மா இருக்க முயற்சி செய்தாலே தெரியும். இந்த மனம் ஒரு குரங்கு விடயத்தை பல இடங்களில் சொல்லியாகிவிட்டது. வீட்டில் ஜாங்கிரி வாங்கி வைத்திருந்தார்களானால், இப்போதைக்கு ஜாங்கிரி சாப்பிடுவது ஒன்றேதான் இவ்வுலகிலேயே மிகப்பெரிய பொருளாய்த் தெரியும் நமக்கு. ஜாங்கிரி சாப்பிட்டு திகட்டிவிட்டதென்றால் அடுத்து விடயத்துக்குத்தாவும் நம் மனம். காரைப் பார்த்தால் கார் வாங்கவேண்டும், வீடு பார்த்தால் வீடு கட்டவேண்டும் என்று கிளைக்கு கிளை தாவும் மந்தியைப் போன்றதுதான் மனிதமனம். இப்படி ஒரு சமயத்தில் இருக்கும் ஆசை மட்டுமே அப்போதைக்கு உலகிலேயே மிகவும் முக்கியமானதாய் தெரியும். இதுதான் அ(ந்த) மா பொருள்.

ஆனால் வாயைக்கட்டி, மனத்தைக்கட்டி, மெய்யைக்கட்டி முருகன் அறிவுரைப்படி இருந்தவுடன் இந்த மா பொருட்கள் ஒன்றுமே தெரியாமல் சிந்தையிலிருந்து மறைந்து போய், முருகனுடன் கலந்துவிட்ட தவயோகநிலை ஒன்று மட்டுமே நிலைக்கிறதே! இது என்ன ஆச்சரியம் என்று வினவுகிறார் அருணகிரியார்.

------------------------------------------------
சிவந்த மானின் மகளைக் கள்வனைப்போல திருடியவன், அகிலாண்ட கோடிக்கும் பெருமான் முருகன், அவன் பிறப்பில்லாதவன், இறப்பில்லாதவன். அவன் சும்மா இரு சொல் அற என்று சொன்ன நொடியே, நான் இதுவரை பெரியவை, முக்கியமானவை என்று எண்ணிவந்த உலக வஸ்துக்கள் அனைத்தும் மறந்து அறியாமல் போனேனே! அவனுளே கலந்த மோன நிலை மட்டுமே கண்டேனே! என்ன ஆச்சரியம்!

8 comments:

said...

அருமையான விளக்கம்.

திருட்டுகளில் கூட நல்ல திருட்டுகள் உண்டு என்று இந்தப் பாடல் வழியாகத் தெரிகிறது.

செம்மான் மகள் என்பதற்கு இரண்டு விளக்கங்கள் சொல்லலாம். ஒன்று நீங்கள் சொன்னது. இன்னொன்று செம்மான் என்று நம்பிராஜனைச் சிறப்பித்துச் சொல்வது. குறிஞ்சித் தலைவன் அவன். செம்மைப் பண்புகள் மிகுந்த அந்தச் செம்மான் மகளான வள்ளியைத் திருடும் திருடன் பெம்மான் முருகன்.

சும்மா இரு என்பது உலகின் சிறந்த உபதேசம். சும்மாயிருக்க முடியாததால்தான் உலகில் பல பிரச்சனைகள். அப்படிச் சும்மா இருப்பதே சுகம். அதைத் தவறாகப் புரிந்து கொண்டு வீட்டில் வெட்டியாக சும்மாயிருப்பது சுகம் என்று சொல்வார்கள் சோறு கண்ட இடமே சுகம் கண்டவர்கள். :-)

said...

நன்றி இராமநாதன்

தென்காசியில் எனது தாத்தா (தாய்வழி)காலையில் நான்கு மணிக்கு எழுந்து பக்திப்பாடல் புத்தகம் வைத்துக் கொண்டு பாடுவார். அதில் இந்தப் பாடலும் உண்டு.

'சும்மா இரு சொல்லற' என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

said...

இராமநாதன். ரொம்ப நாளைக்கப்புறம் மீண்டும் கந்தரனுபூதியைத் தொட்டிருக்கிறீர்கள். நன்கு தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள். //அம்பாளின் அம்சமாய் வந்த சிவந்த மான் ஒன்று // இந்த இடத்தில் மட்டும் கொஞ்சம் உறவு முறைச் சிக்கல் வருகிறது. அம்பாள் என்றால் பார்வதியா இலக்குமியா? வள்ளி முற்பிறவியில் நாரணன் மகள் என்றொரு கருத்து உண்டு.

said...

மிக நன்றாகப் பொருள் உரைத்துள்ளீர்கள் இராமநாதன். வாழ்த்துக்கள்! இதோ திருட்டு பற்றிக் கொஞ்சம் மேலதிகச் சிந்தனை.

ரொம்ப ஆசை மிகுந்து விட்டால், கிள்ளி, "கள்ளி" என்று நம்மில் சில(பல) பேர் கொஞ்சுகிறோமே! :-)

"மகளைத் திருடுந் திருடன்" - அருணகிரி
"உள்ளங் கவர் கள்வன்" - சம்பந்தர்
"காண்தகு தாமரைக் கண்ணன் கள்வன்" - நம்மாழ்வார்,
என்று பலரும் இதே ஸ்டைலைப் பயன்படுத்துகிறார்களோ? :-)

வள்ளியின் 5 சகோதரர்கள் = 5 புலன்கள்.
செம்மான் ஆகிய அவள் தந்தை = மனம்.
யாருக்கும் தெரியாமல் திருடினால் தானே திருட்டு என்று சொல்ல முடியும்; இல்லை என்றால் கொள்ளை என்று சொல்லி விடலாமே!

எப்படி அண்ணன்மார், தந்தையார் ஆகியோருக்குத் தெரியாமல் காதல் வருகிறதோ அதே போல,
ஐம்புலன்களுக்கும், மனத்துக்கும் தெரியாமலேயே வள்ளியின் ஆன்மா திருடு போய்விட்டது.
இந்த ஆழ்நிலைத் திருட்டால் தான் அவள் மனமும், முயற்சியே இன்றி முருகன் பால் சென்று விட்டது!

திருடு போன பின்பு அய்யோ என்று குதிப்பது மனமும், புலன்களும் தானே! அதனால் தான் புலனும், மனமும் நோக, வள்ளி காதல் நோய் கொண்டாள்.

மேலே "வள்ளி" என்ற சொல்லுக்குப் பதில் "மனித" என்று மாற்றிப் போட்டுப் படியுங்கள்!
இந்தத் திருட்டினால், "சும்மா இரு சொல் அற" நிலை வந்து விடும் அல்லவா?

அட, திருட்டுக் கொடுப்பதில் இவ்வளவு லாபம் உள்ளதா? :-)))...முருகா!!!!!!!!

said...

ஜிரா,
நன்றி.

நீங்கள் சொன்ன செம்மானுக்கு பொருத்தமானதுதான். முருகபக்தியில் சிறந்துவிளங்கிய நம்பிராஜனும் செம்மான் தான்.

//சும்மாயிருக்க முடியாததால்தான் உலகில் பல பிரச்சனைகள். அப்படிச் சும்மா இருப்பதே சுகம். அதைத் தவறாகப் புரிந்து கொண்டு வீட்டில் வெட்டியாக சும்மாயிருப்பது சுகம் என்று சொல்வார்கள் சோறு கண்ட இடமே சுகம் கண்டவர்கள்//

:))

said...

மதுமிதா,
:))

நன்றி.

said...

குமரன்,
ரொம்ப நாள் ஆகிவிட்டதுதான். என் அபஸ்வரத்தை கேட்க வேண்டுமென்று குருபெயர்ச்சி பலனோ என்னவோ உங்களுக்கு? :))


நான் அறிந்தவரையில் இலக்குமிதான். 'தாயார்' என்பதற்குபதில் வழக்கமாக பயன்படுத்தும் அம்பாள் வந்து விழுந்துவிட்டாள்.

said...

கே ஆர் எஸ்,
அருமையான கருத்துகள்.

பல ஞானிகள் தம்மை தலைவியாகவும் இறைவனை தலைவனாகவும் கொண்டே அவன் மேல் அன்பைப் பொழிந்துள்ளார்கள். உள்ளங்கவர் கள்வன் என்பதை இதுவரையில் நான் இந்தக்கண்ணோட்டத்தில் மட்டுமே எண்ணிப்பார்த்ததுண்டு.

தாங்கள் சொன்ன வகையில் பொருத்திப்பார்த்தாலும் அருமையாக இருக்கின்றது.

மிக்க நன்றி. அருமையானதொரு பின்னூட்டத்திற்கு.