Tuesday, January 31, 2006

7. கந்தர் அநுபூதி - கடவுள் வாழ்த்து (காப்பு)

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்!

//நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக்கு//
சின்னக் குழந்தைகளின் மனசை நாம் லேசானது என்கிறோம். ஆனால் அதுவே, விவரம் புரிந்தால்.. இதிலேயே எனக்கு ஒப்புதல் கிடையாது. விவரம் புரிகிறது என்றால் பரம்பொருளைக் குறித்த உண்மையைப் பற்றி அறியும் போதே விவரம் புரிவது என்றிருக்க வேண்டும். நம்மைப் போன்ற சாதாரணர்களுக்கு உலகம் தெரிவது என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். எது எப்படியாயினும்.. நமக்கும் குழந்தைகளுக்கும் என்ன வித்தியாசம்? ஆசாபாசங்கள், கோபம், குரோதம், பொறாமை, பேராசை போன்றவையே. அவர்களுக்கும் அவை உண்டு. ஆனால் அவை நம்முள்ளே சில வருடங்களுக்கு நிலைத்து நிற்குமென்றால், குழந்தைகளுக்கு சில விநாடிகளே இருந்து மறைந்துவிடும். எதற்கு குழந்தைகள் பற்றியென்றால்...

அருணகிரி சுவாமிகள் சொல்வது நாம் இவ்வுலக சழக்கைகளில் சுழன்று மனம் திரிந்து, ஆண்டவன் பிறப்பில் நமக்கு அளித்த லேசான மனத்தை இம்மாதிரி காமம், குரோதம் போன்றவற்றைக் கொண்டு பெரும்பாறாங்கல்லாய் வளர்த்துவைத்திருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டவே.

ஆனால் இப்படி நாமே வளர்த்துவிட்ட / வளர்ந்துவிட்ட தீய மனதிற்கு உய்ய வழியுண்டா?

உண்டே. அதை உடனே அடுத்த வரியிலேயே சொல்லிவிடுகிறார். அருணகிரியாரே அவரின் வாழ்க்கையின் பெரும்பான்மையை தீயவற்றில் கழித்தவர். விலைமாதுக்களிடமும் மதுவிலுமே திளைத்திருந்தார். முருகனின் அருளென்ற ஒன்றில்லாமல் போயிருந்தால், இரத்தக்கண்ணீர் எம். ஆர். இராதாவின் கதாப்பாத்திரத்தை அருணகிரி வாழ்ந்தே காட்டினார் என்று சொல்லியிருப்போம். எப்படி ஒரு திருடனின் வாழ்க்கையை வால்மீகி வாழ்ந்து பின் இறையருளால் இராமாயணத்தைப் படைத்தாரோ அதைப் போலவே, அருணகிரியின் வாழ்க்கையில் முருகனின் இச்சைப்படி; தமிழ் நாட்டில் முருகனென்றால் அவனுக்கு அடுத்து அருணகிரியே நினைவுக்கு வரும்வகையில், அவருக்கு தன்னுடைய தன்னிகரில்லா கருணை மூலம், இரண்டாம் இடத்தை அளித்துள்ளான் கந்தன். நாமெல்லாம் அருணகிரி தன் முன்வாழ்க்கையில் இருந்த அளவு மோசமானவர்களாய் இன்னும் ஆகவில்லை (அவரைப் போல ஞானமும் பெறவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்!). ஆனாலும் அருணகிரியாரைப் போன்ற ஒருவருக்கே கந்தன் தன் அருளால் முக்தி அளிக்க வல்லவன் என்றால் அவன் கருணை எத்தகையான தொன்றாக இருக்க வேண்டும்? "Like Taking Candy From a Baby" என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. ஒரு குழந்தையிடமிருந்து மிக எளிதாக ஒரு மிட்டாயை வயதில் முதிர்ந்தவர்களான நாம் அபகரித்து விட முடியுமல்லவா? அதே போல தான் குமரனும். ஆனால், இவனிடத்தில் கயமைத்தனம், அறிவுஜீவித்தனங்கள் எல்லாம் செல்லுபடியாகாது. அன்பென்ற ஒன்று மட்டுமே போதும். அதை முழுமையாய் அவனிடத்தில் வைத்தால் அவன் குழந்தையேதான். நம்மை நம்பி அருளிக் காத்தருள்வதற்கு.

'கந்தா, குமரா, முருகா' என்று சொல்லி முடிக்குமுன் வந்து அருள் செய்யும் ஆறுமுகத்தானுக்கு...

//கியல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே//
அவனுடைய பண்புகளை, கருணையை இந்த அழகிய தமிழ்சொற்களை கொண்டு நான் தொடுத்த இந்த எளிய பாக்களாலான மாலையின் புகழ் மேலும் மேலும் சிறந்திடவே...

//பஞ்சக் கரவானை பதம் பணிவாம்//
உங்களின் தம்பியை/தங்கையைப் பற்றி மூன்றாவது மனிதர் ஒருவர் உங்களிடம் வந்து புகழ்ந்தால் உங்களுக்கு எவ்வளவு பெருமிதமாய் இருக்கும்? உங்கள் மனம் எவ்வளவு குளிர்ச்சி பெறும்? முருகா, கந்தா என்ற சொற்களே தேன் போல இனிக்கையில், அவனைக் குறித்துப் உண்மையான பக்தியில் பாடப்படும் பாடல்கள் கசக்கத்தான் செய்யுமோ? இயற்கையிலேயே அமுதைப் போன்ற இனிமையை உடையவையாயினும் தன் அன்புத்தம்பியான குமரனைக் குறித்த இப்பாடல் மாலை மேலும் சிறப்புபெறவும் சுவைபெறவும் அருளுமாறு ஐந்துகரங்களை உடைய ஆனைமுகத்தானின் தாள்களுக்கு அர்ப்பணம் செய்கின்றேன் என்கிறார் அருணகிரியார்.

இராகவனின் விளக்கம்

8 comments:

said...

அருமை இராமநாதன்.

உண்மைதான். அத்தனை செய்தவர் அருணகிரி. அவருக்கும் முருகன் இப்பெரிய வாழ்வு தந்தான். நம்மைக் கைவிடான். அருணகிரியின் அன்பின் கொஞ்சமேனும் நாம் காட்டினால், நல்ல வழியைக் கந்தன் காட்டுவான் என்பதில் ஐயமில்லை.

குழந்தைக்கு மிட்டாய் கெடுதி. ஆனாலும் விரும்பும். அதைப் படக்கெனப் பிடுங்கும் பெரியவர் எடுத்துக்காட்டு மிகச்சிறந்தது. ஆனாலும் குழந்தையையும் அழுகாமல் பார்த்துக் கொண்டார் முருகப் பெருமான்.

said...

இராமநாதன்,இராகவன்,குமரன் கூட்டணி களை கட்டியிருச்சே ! முருகனுக்கும் தமிழுக்கும் கொண்டாட்டம் தான்.

said...

ஜிரா,
//குழந்தைக்கு மிட்டாய் கெடுதி. ஆனாலும் விரும்பும். அதைப் படக்கெனப் பிடுங்கும் பெரியவர் எடுத்துக்காட்டு மிகச்சிறந்தது. ஆனாலும் குழந்தையையும் அழுகாமல் பார்த்துக் கொண்டார் முருகப் பெருமான்.
//
நீங்கள் வேறு கோணத்தில் யோசித்திருக்கிறீர்கள். நான் சொல்ல வந்தது என்னவென்றால், ஒரு குழந்தையிடமிருந்து மிட்டாயை எப்படி பெரியவர்கள் பிடுங்கிவிடமுடியுமோ, அது போல அன்பு மட்டும் வைத்தாலே போதும். மிகவும் எளிதாக கந்தனெனும் குழந்தையிடமிருந்து அருளை பெற்றுவிட முடியும்.

நன்றி

said...

மணியன்,
வஞ்சப் புகழ்ச்சியெல்லாம் செய்யறீங்களே..

நன்றி

said...

இராமநாதன், அற்புதமாகப் பொருள் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பொருத்தமான பொருள். அருணகிரிநாதரின் வரலாற்றையும் நன்றாகப் பொருந்தி வரும்படிச் சொல்லியிருக்கிறீர்கள்.

said...

குமரன்,

நன்றி

said...

நீங்களும், இராகவனும் அலகு அலகாகப் பிய்த்து வைக்கிறீர்கள்.
வாழ்க! வளர்க! தொடர்க!

said...

மிக்க நன்றி ஞானவெட்டியான் ஐயா.