Monday, January 30, 2006

3. புதுப்பாட்டா பொதுப்பாட்டா?

உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்
ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்
செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்
சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்
மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து
மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்
பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்
பாடுகின் றேன்பொதுப் பாட்டே!

சன் டிவி புதுப்பாட்டு தெரியும். இது என்னடா இது பொதுப்பாட்டு அப்படீன்னு யோசிக்கறீங்களா? இருக்குதே விஷயம்.

உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்
ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்


இந்த உலகத்துல இருக்கற அத்தனை உயிர்களும் நடராஜப் பெருமானாகிய நீ ஒருத்தனே ஆனந்த நடனமாடும் அரங்குகள் என்று அறிந்துகொண்டேன்.

செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன் சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்
(செயிர் னா கெட்டவை, முழுமையடையாதவை, குறைகளுடையவைன்னு பொருள் கொள்ளலாம்) அதாவது இந்த மாதிரி கெட்ட விஷயங்கள்லாம் தவிர்த்துவிட்டேன்.

திருன்னா செல்வம்னு தெரிஞ்சுருக்கும் இல்லியா? திருமகள்னு கூட சொல்றோமே மகாலட்சுமிய?

ஆனா, வள்ளலார் இங்க என்ன பொன்னும் மண்ணும் பெண்ணும் பத்தியா சொல்றார். திருன்னா ஆன்மிக செல்வம். பக்திங்கற செல்வம். ஆண்டவனின் அருள்கற செல்வம். இந்த மாதிரி என்னென்ன நற்பயன்கள் உண்டோ அத்தனையும் உன்னால அடைஞ்சிட்டேன்.

சித்துன்னா மாயை. உலக மாயையெல்லாம் புரிய வல்லவன் நீ என்று புரிந்துகொண்டேன்.

மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து மலர்ந்தனன்
இப்படியெல்லாம் இறைவனை நினச்சா மயிற் கூச்செறிகிறதாம் அடிகளாருக்கு. என் உள்ளமெல்லாம் உன் அன்பினால் கனிந்து மலர்கிறதே.

சுத்தசன் மார்க்கப் பயிரெலாம் தழைக்கப்
சன் மார்க்கத்தப் பத்தி இன்னொரு நாள் பார்ப்போம். இப்போதைக்கு பொதுவான வழினு மட்டும் வச்சுப்போம்.

சுத்தசன்மார்க்கம் என்கிற பயிரின் விதைகள் உலகெங்கும் பரவ

பதியெலாம் களிக்கப்
வானத்துலிருக்கற தேவர்கள், முனிவர்கள் போன்ற கடவுளர்கள் எல்லாரும் மகிழ்ச்சியுற

பாடுகின் றேன்பொதுப் பாட்டே!
நானும் இந்த பொதுப் பாட்ட பாடறேன். உலகத்துல ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு சமூகத்துக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு. சாப்பாட்டுல, உடைகள்ல, மொழிகள்லேன்னு. இல்லியா? ஆனா உலகம் முழுக்க பொதுவான ஒன்னு இருக்கு தெரியுமா? அதுதான் கடவுள்னு நாம கூப்பிடற பரம்பொருள். எல்லாருக்கும் பொதுவானவனப் பத்திப் பாடப் பாடற அத்தனை பாடல்களும் பொதுப் பாட்டுகள் தான். அதத்தான் சொல்றார் வள்ளலார். ஈடு இணையிலாத பரம்பொருளே உன்னைப் பற்றி நானும் பாடுவேன் பொதுப் பாட்டேன்னு!

9 comments:

said...

ஆமாம். ஆமாம். எல்லாம் பொதுப்பாடுகள்தான். ஆனாலும் ஒவ்வொரு நாளும் புதுப்பாடுகள்தான். ஆகையால பொதுப்பாட்டுன்னும் சொல்லலாம். புதுப்பாட்டுன்னும் சொல்லலாம்.

கண்ணதாசன் சொன்ன மாதிரி,

என்றும் புதியது
பாடல் என்றும் புதியது
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
முருகா உனைப்பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

said...

ஆஹா ஜிரா,
கேபிஎஸ் வந்து ரீரெக்கார்டிங் பண்றா மாதிரியே இருக்கு. :)

நன்றி

said...

இராமநாதன்,

இந்தப் பாடலைப் படிப்பது இது தான் முதல் தடவை. நன்றாய் விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். வழக்கம் போல அடிசனல் எண்ணங்கள் எனக்கு இந்தப் பாடலிலும் தோன்றுகின்றன. கீழே கொடுக்கிறேன்.

said...

திரு என்றால் அருட் செல்வத்துடன் பொருட்செல்வத்தைக் குறிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லையாதலால் அதனைத் தள்ளிவிட வேண்டியதில்லை. வள்ளலார் 'திருவெலாம் அடைந்தேன்' என்னும் போது அருட் செல்வத்துடன் பொருட் செல்வமும் இறைவன் அருளால் அடைந்தேன் என்று சொல்வதாய்க் கொள்ளலாம்.

சித்து என்றால் சித்து விளையாட்டு என்று இழிவாகக் கூறப்படுவதை வைத்து நீங்கள் மாயை என்று பொருள் கூறிவிட்டீர்கள் என்று எண்ணுகிறேன். சித்து என்றால் அட்டமாசித்திகள் என்று ஞானவெட்டியான் ஐயா பட்டியல் இட்ட அருட்சக்திகள். அவையெல்லாம் இயற்கையாகவே வல்லவன் இறைவன். அப்படிப் பட்ட சித்தெலாம் வல்லதொன்று இறையெனும் பொருள் என்று அறிந்தேன் எனக் கொள்ளலாம். மாயை என்று சொல்லி அதில் வல்லவன் நீ என்று சொன்னது கொஞ்சம் நெகடிவாக இருக்கிறது என்பதால் இந்த விளக்கம். நானும் அதைத்தானே சொன்னேன் என்று சொல்லாதீர்கள் :-)

பதியெலாம் களிக்க என்பதற்கு இந்த உலகில் இருக்கும் ஊர்களெல்லாம் அந்த ஊர்களில் வசிக்கும் உயிர்களெல்லாம் களிக்க என்றும் பொருள் கொள்ளலாம்.

said...

குமரன்,
//திரு என்றால் அருட் செல்வத்துடன் பொருட்செல்வத்தைக் குறிப்பதாகவும்//
உண்மைதான். ஆனா பொருள்னு கொண்டாலே அது நெகடிவ்வா இருப்பதாய் பட்டதால அத எடுத்துட்டேன். இராகவனும் நீங்க சொன்னதத்தான் சொல்றார். இனிமே சேர்த்துக்க வேண்டியதுதான்.

//சித்து என்றால் சித்து விளையாட்டு என்று இழிவாகக் கூறப்படுவதை//
இழிவாய் அழைக்கப்படுவது மனிதர்கள் செய்யும் சித்துகள் தானே. இறைவன் புரியும் சித்து என்னும் மாயை போற்றப் படவேண்டியது என்ற எண்ணத்தில்தான் எழுதினேன்.

உங்க ரேஞ்சே வேற. நீங்க சொல்றது இன்னமும் பொருத்தமாக இருக்கிறது. ஞானவெட்டியான் ஐயாவோட பதிவுக்கு, நேரமிருந்தால் சுட்டி கொடுக்கமுடியுமா?

இதேபோல தொடர்ந்து உங்கள் அடிஷனல் விளக்கங்களை கொடுக்கவேண்டும். சரியா?

நன்றி.

said...

ஞானவெட்டியான் ஐயாவோட பதிவைத் தேடவேண்டும். கிடைத்தால் கொடுக்கிறேன்.

ஐயா கந்தர் கலிவெண்பாவிற்கும் விளக்கம் கொடுக்கத் தொடங்கிவிட்டார் பார்த்தீர்களா?

http://kkvenpa.blogspot.com/

said...

அன்பு இராமநாதன்,

"சித்து" = சூக்குமம், அறிவு, திருவிளையாடல், உருவமற்றது(அரூபம்), யாகம், மாயவித்தை.

இறைநிலை எட்டாத மனிதன் செய்வது மாயவித்தை.
இறைவன் நிகழ்த்துவது திருவிளையாடல். இதையும் சித்து என்பார்.

said...

குமரன்,
சுட்டிக்கு நன்றி. நான் இப்போதுதான் பார்க்கிறேன்.

said...

ஞானவெட்டியான் ஐயா,
சித்து விளக்கத்திற்கு நன்றி.

அதேபோல 'திரு' என்பதற்கு பொருட்செல்வத்தையும் சேர்த்துக்கொள்ளலாமா குமரன் சொல்வது மாதிரி? பொருள்னு வச்சுகிட்டா நெகடிவ்-வாக தொனிக்கிறதென்றே இன்னமும் எனக்குப் படுகிறது.