Wednesday, February 01, 2006

8. பாடும் பணியே பணியா யருள்வாய்!

ஆடும் பரிவே லணிசே வலெனப்
பாடும் பணியே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற்
காடுந் தனியா னைசகோ தரனே. (1)

//ஆடும் பரிவே லணிசே வலெனப்//

இதுல பரியென்று மயிலைத்தான் குறிப்பிடுகிறார் அருணகிரியார். பரின்னா குதிரையாச்சே? ஏன் மயில்னு சொல்றார்னு நானும் குழம்பியியிருந்தேன். ஆனால் நம்ம ஜிரா அழகா சொல்லிட்டாரு. அழகிய நடனமாடும் மயில். முருகப்பெருமானின் மயில் என்ன வகை நடனமாடும்? தஞ்சாவூர் கோயிலைப் பார்த்தவர்களுக்கு விளக்கவே வேண்டாம். ஓம் எனும் மந்திரத்திற்கு ஒப்ப வடிவில், அந்த சூட்சும மந்திரத்தையே விளக்கும் வகையில் ஆடும் மயிலும்...

முருகன் தன் சின்னமாய் அணிந்திருக்கும் சேவலின் வேலை எத்தகையது? அவனையே நினைத்துருகும் அன்பர்களுக்கு அவன் அருள் கிட்டியது குறித்து கொக்கரித்து அவர்களுக்கு உணர்த்துவதே ஆகும். கொஞ்சம் சிந்திப்போமாயின் (அதான், என் கற்பனை!)

தினமும் காலைல சேவல் கூவுதே, எதுக்கு? 'மனிதர்களே கேளுங்கள்! முருகனின் அருள் உங்களை என்றென்றும் காக்கும்' என்று சொல்வதற்கே. ஏன் அருள் பெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்கும் பொதுவாய் பின்னே கொக்கரிக்கிறது? 'முருகன் அருள் பெறுவதொன்றும் கஷ்டமான காரியமில்லை. உங்க ஊரிலேயே நிறைய பேர் பெற்றிருக்கின்றனர்.' அதனால, அவங்களை எழுப்புற சாக்குல.. முருகன் தாளை நினைக்காதவங்களுக்கும் அறைகூவலாய் முருகனைப் பணிந்து நற்கதி அடையுங்கள் என்று தினந்தினமும் காலையில் நமக்கு சொல்கிறது சேவல். தன்னைப் பணிந்தோர் மட்டுமன்றி, மற்றோரும் தம்மை நாடி நற்கதி அடையவேண்டும் என்ற கந்தனது அளவற்ற கருணையே அதற்கு காரணம். (இதற்கும் குமரனும் தி.இரா.சவும் வேறு அழகிய விளக்கங்களை இராகவனின் பதிவில் சொல்லியிருக்கின்றனர்)

மேலும் சேவல்-சேவகம்-சேவகன் என்பது போன்ற சொற்களிலிருந்து அடிப்படை பொருளை அறிந்து கொள்ளலாம். முருகனுக்கு சேவகம் என்பதே கருத்து. இவற்றிற்கு மூலம் எல்லாம் ஆராயாமல், மேலோட்டமாக பார்க்கையில் தோன்றுவதைத்தான் எழுதுகிறேன்.

இப்படி ஆடிடும் மயிலையும் வேலையும் சேவலையும் அணிந்திருப்பவனே..

பாடும் பணியே பணியா யருள்வாய்
இப்படி முருகனுக்கு சேவகம் புரியும் மயிலும் சேவலும்.. இதில் சேவல் யார்? சூரபத்மனின் நீட்சியல்லவா? தன்னை எதிர்த்து சண்டை போட்டவனேயே தன் பக்கத்தில வச்சுக்கறவர் நாம பக்தியோட தினமும் அவர் புகழ் பாடுனா வேணாம்னா சொல்லப் போறாரு?

என்றென்றும் உன்னைப்பாடும் பணியே என் வாழ்வின் தலையாய பணியாய் அருள்வாய்...

'நின் இணையடிகள் மறவாத மனம் மாத்திரம் எனக்கடைதல் வேண்டுமரசே' என்று அடிகளார் கூட இதே போன்ற கருத்தை உடைய பாடலை பாடியிருக்கிறார். எத்தனை பிறவியெடுத்தாலும் நல்லது/கெட்டது,செல்வம்/வறுமை எதுவந்தாலும் உனை மறவாத நிலையொன்றை மட்டுமே வேண்டுவேன் என்று. அதுபத்தி விரிவா இன்னொரு நாளைக்கு.


தேடுங் கயமா முகனைச் செருவிற் காடுந் தனியா னைசகோ தரனே
கயமா முகன்னு அருணகிரிநாதர் சொல்றது ஒரு நல்ல கதை. கஜமுகாஸுரன் என்று ஒரு அசுரன் இருந்தான். பல அசுரர்களைப் போல early days இல் சிவனைக்குறித்து கடுந்தவம் புரிந்தான். அப்பன் எவ்வழியோ பிள்ளை அவ்வழின்னு சொல்லிருக்காங்களே. முருகனின் கருணையெல்லாவற்றிற்கும் ஊற்று அந்த பரமேஸ்வரனே அல்லவா? சர்வேஸ்வரனும் கஜமுகாசுரன் கேட்ட வரங்களை அளித்தார். ஒரு விஷயம், சிவபெருமான் வரம் கொடுக்கும் விஷயத்தில் கொஞ்சம் மக்குன்னு நம்ம புராணங்கள கேட்டாலே புரிஞ்சிக்கலாம். எவ்வளவு மோசமான வில்லன் கேரக்டர் வந்தாலும், அவனுக்கு இவ்ளோ சக்தி கொடுத்தா அடுத்து அவன் என்ன பண்ணுவான்னு தெரிஞ்சும், நமச்சிவாயன்னு நாலுவாட்டி சொன்னா "பக்தா உன் பக்தியை மெச்சினோம். கேள், என்ன வேண்டும்?"னு கேட்டுக்கொடுத்துட்டு போயிடுவார். அப்புறமா யாராவது இப்படி செஞ்சிட்டேங்களேன்னு அவர்கிட்ட போய் அழுதா, 'எல்லாம் என் விளையாட்டு'ன்னு ஒரு பிட்டு போட்டுடுவார். இராவணன் தொடங்கி பல அசுரர்கள் குதியாட்டம் போட்டதுக்கு காரணமே சிவனின் வெள்ளை மனம் தான். (இது விளையாட்டுக்காக சொல்வது. பிரணவத்தின் தத்துவமான அவருக்குத் தெரியாமல் இருக்க முடியுமா?) அதேமாதிரி, பெரும்பாலான அசுரர்களைப் போல பின்னாளில் தன் பலத்தின் போதை தலைக்கேறி தேடித் தேடிச் சென்று முனிவர்களையும் அவர்களின் தவங்களையும் அழிக்க, கஜமுகாசுரனை ஒழிக்க சிவபெருமான் பிள்ளையாரை தன் கணங்களோடு (அவர்தான் கணபதி ஆயிற்றே) அனுப்பினார். பிள்ளையார் பற்றி பல்வேறு கதைகள் உண்டென்றாலும்... க.மு.அசுரன்(:)) சிவபெருமானிடத்து பெற்ற வரத்தின் படி எந்தவொரு ஆயுதத்தாலும் அழிக்கமுடியாதவனாய் இருந்தான். அதனாலேயே விநாயகர் தன் வலது தந்தத்தை உடைத்து அதைக்கொண்டு அவனைக்கொன்றார் என்று ஒரு கதை. விநாயகரின் வரலாற்றில் பல வித கதைகள் உண்டு. இந்துமதத்தின் பிதாமகரான வேதவியாசர் பாரதத்தை எழுதச் சொன்ன போது தன் தந்தத்தை உடைத்து எழுதினார் என்றும் ஒரு கதை உண்டு. எதுவாகினும்....

நல்லோர்களைத் தேடிச் சென்று தொல்லைக் கொடுத்த கஜமுகாசுரனை, சிவனின் ஆணையால் அழித்தொழித்த யானைமுகத்தானின் சகோதரனே!

----
நல்லோர்களைத் தேடிச் சென்று தொல்லைக் கொடுத்த கஜமுகாசுரனை, சிவனின் ஆணையால் அழித்தொழித்த யானைமுகத்தானின் சகோதரனே!
ஆடிடும் மயிலையும் வேலையும் சேவலையும் அணிந்திருப்பவனே..
என்றென்றும் உன்னைப்பாடும் பணியே என் வாழ்வின் தலையாய பணியாய் அருள்வாய்...


--
தமிழ்மணத்தில் சேர்வதற்கு முன் கருத்துள்ள (!) மூன்று நான்கு பதிவுகளாவது போட்டிருக்க வேண்டும் என்ற விதியால் நேற்றைக்கு ஏகப்பட்ட பதிவுகள் போட்டு ஓவர்டோஸ் கொடுத்துட்டேன். இதுக்கே உஷா அக்கா ஞே ன்னு விழிச்சதால, இனிமே தினமும் ஒரு பதிவுக்கு மேல போடப்போறதில்லை. :)

23 comments:

said...

அழகான பாடல். இதில் அருணகிரிநாதரின் முக்கிய கைவண்ணம் ஒன்று: முருகனைப் பாடினாலும் எல்லாக் கடவுளரையும் போற்றி கடைசியில் முருகனின் உறவினை வெளிப்படுத்தி பாடுவார். அவ்வகையிலேயே இங்கு ஆனை சகோதரனை போற்றுகிறார். பிற பாடல்களில் மால்மருகனே என்று திருமாலின் பெருமைகளையும், உமா மைந்தனே என்று பராசக்தி புகழையும் போற்றிப் பாடுவார்.

said...

அருமையான விளக்கம் இராமநாதன்.

காலை எழுந்ததும் கொக்கரக்கோ என்று சேவல் கூவுவது ஏன் தெரியுமா? மக்களே எழுங்கள். முருகனைத் தொழுங்கள். என்னைப் போல பேரின்பக் கடலில் விழுங்கள் என்று சொல்லத்தான்.

கொக்கறக்கோ = கொக்கு+அறு+கோ

கொக்கு என்றால் மாமரன். சூரன் ஆணவ மலம். ஆணவம் நேராக வளராது. கிளைக்கும். அதுவும் வலுவாக. ஆகையால்தான் சூரன் மாமரமாக நின்றான். அந்த மாமரத்தை இரு கூறாக அறுத்தார் முருகப் பெருமான். அதில் ஒரு கூறு சேவல். ஒலியால் ஞானம் காட்டுவது.

ஆகையால்தான் கொக்கு அறு கோ என்று காலை எழுந்ததும் கதிர்வேலன் புகழைச் சொல்கிறது.

said...

இதுக்கே உஷா அக்கா ஞே ன்னு விழிச்சதால..

இராமநாதன் நீங்க எழுதுனதுக்கு புத்திசாலித்தனமான பின்னூட்டம் போட முடியாததால உஷாவப்பத்தி எழுதுனத கமெண்ட் அடிக்கலாம்னு..

அது சரி நேர்ல பாத்தாமாதிரி 'ஞே'ன்னு விழிச்சாங்கன்னு சொல்றீங்க? ரஷ்யாவுல அந்த சவுகரியமெல்லாம் இருக்கா என்ன?

said...

சூப்பர் மாம்ஸ். இந்த மாதிரி எழுதினா எங்களை மாதிரி ஆளுங்களுக்கு புரியுமில்லை. இந்த மாதிரி ஈஸியா உரை கொடுக்கற உங்களுக்கு தமிழ்மண கோனார் அப்படின்னு ஒரு பட்டம் கொடுத்தா என்ன.
இப்படிக்கு கொத்தனார்
(விழாவிற்கு கொஞ்சம் செலவாகும். பாத்து போட்டு கொடுத்தீங்கனா..ஹிஹிஹி)

said...

நன்றி மணியன்,
//எல்லாக் கடவுளரையும் போற்றி கடைசியில் முருகனின் உறவினை வெளிப்படுத்தி பாடுவார்.//
அட.. இப்போதுதான் கவனித்தேன் இதை. சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

said...

ஜிரா,
அட சேவல் கூவுதுன்னு நான் ஏதோ விளையாட்டா எழுதப்போக அதுக்கும் கொக்கறுகோக்கூட அழகான விளக்கம் கொடுக்கறீங்களே.

நன்றி நன்றி நன்றி!!

said...

ஜோசப் சார்,
இது என்ன வீடியோ கான்பரன்ஸ் மாதிரி னு நினச்சீங்களா?

இங்க பாருங்க. புரியும்.ஙே எப்படி வந்துச்சின்னு.

said...

கொத்தனாரே,
இது கொஞ்சம் டூ மச்சா இல்ல? பதிவு ஆரமிச்சு முழுசா மூணு நாள்கூட ஆகல. அதுக்குள்ள பட்டமா?

நமக்குநாமே திட்டத்தின் படி, உங்களுக்கு வேணா "புதிர்போடும் புலி"னு ஒரு பட்டத்தைக் கொடுத்திடரேன். நிகழ்ச்சி ஏற்பாட்டு செலவு சரியாப் போச்சுல்ல? :))

said...

இந்த மாதிரி நமக்கு நாமே திட்டம்ன்னு சொல்லி, வருமானதுக்கு வழி இல்லாம பண்ணறீங்களே.

இருந்தாலும் தொண்டர்கள் மனசு புண்படக்கூடாதுன்னு இந்த பட்டத்தையெல்லாம் ஏத்துக்க வேண்டியதா இருக்கு. :D

said...

அப்புறம் உங்க பட்டம் தமிழ்மண க் கோனார் அப்படின்னு இருக்கணும்ன்னு யாரும் பதிவு போடக் காணுமே.

said...

பிரமாதமான விளக்கம்.

//கொக்கறக்கோ = கொக்கு+அறு+கோ//

முருகா!
இவங்க கிட்ட நீ இப்படி மாட்டிகிட்டயே!

அடுத்த பங்குனி உத்திரத்துக்கு பழனி வந்து உன்ன rescue பன்ன வேண்டியது தான்!

;-)

said...

//முருகனைப் பாடினாலும் எல்லாக் கடவுளரையும் போற்றி கடைசியில் முருகனின் உறவினை வெளிப்படுத்தி பாடுவார்//

குடும்பத்துல குழப்பம வரகூடாதுன்னு ஒரு நல்ல என்னம்!

said...

கொத்தனார்,
தொண்டர்கள் மனசு புண்படக்கூடாதேன்னுதான் நானும் பட்டத்தை வேண்டா வெறுப்பா ஏத்துகிட்டேன்.

க் தானே. போடுவாங்க போடுவாங்க. பொறுமை தேவை. நம்ம சின்னவர் இருக்காரே..

said...

சமுத்ரா,
முருகன ரெஸ்க்யூ பண்ணப்போறது சமுத்ரராஜனா? ஆனா நம்ம கிட்டேர்ந்து அவருக்கு விமோசனமே கிடையாது. :)

//குழப்பம வரகூடாதுன்னு ஒரு நல்ல என்னம்!
//
:))

said...

இராகவன், (இல்லை ஆன்மிக மூவரில் யாராய் இருந்தாலும் சரி!), அப்படியே எப்போதாவது இந்த 'டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு' க்கெல்லாம் கொஞ்சம் அர்த்தம் சொன்னீங்கன்னா அந்தக் கந்தன் அருள் உங்களுக்குப் பூரணமாய் உண்டு ! :-)

said...

செல்வராஜ்,
கந்தர் சஷ்டி கவசத்துல வர வரிகளைப் பத்தித்தானே கேக்கறீங்க.

//திருவடியதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செககண
மொகமொக மொகமொக மொகமொக மொகமொகண
நகநக நகநக நகநக நகண
டிகுகுண டிகு டிகுண டிகுகுண டிகுண
...
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
//
முருகனோட திருப்பாதங்களில் இருக்கும் சிலம்புகள், அவர் நடந்து வருகையில் இந்த மாதிரி காதுக்கினிய இராகமான வார்த்தைகளைப் போல முழங்குகின்றன. இந்த சொற்களுக்கு பொருள் இல்லையென்றே நினைக்கிறேன். இசைக்காக சேர்க்கப்பட்டவையே. இராகவனும் குமரனும் மேலும் விளக்கக்கூடும்.


கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண்டு அயர்கினும் வேல் மறவேன் முதுகூளித்திரள்
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக் கொட்டியாட சூர் கொன்ற ராவுத்தனே

அப்படின்னும் ஒரு பாட்டு இருக்கு. இதுக்கு. :))))))
இராகவன் ஏற்கனவே விளக்கம் கொடுத்திருக்கார். பார்க்கவும்.

நன்றி

said...

நன்றி இராமனாதன். சிலம்பு என்று தொடர்பு படுத்திப் பார்க்கும் போது நன்றாகப் புரிகிறது. ஆனால் சூலமங்கலம் சகோ.க்கள் ஒரு இழுவையாகப் பாடியிருப்பதில் சிலம்பை, சிலம்பொலியை உணர முடியவில்லை.

said...

செல்வராஜ், இராமநாதனின் விளக்கம் சரிதான். அந்த ஓசைகளுக்கு முன்னும் பின்னும் கவனித்தால் ஓசைக்காரணங்கள் தென்படும். கவசத்தில் சலங்கை. என்னுடைய விளக்கத்தில் இராமநாதன் சுட்டி கொடுத்திருக்கும் கந்தரலங்காரத்தில் பறை. ஆனாலும் அதை இலக்கணம் மாறாமல் சொல்ல வேண்டும். ஆகையால்தான் அருணகிரிக்கு ஓசைமுனி என்று பெயர் வைத்தார் பாம்பன் சுவாமிகள்.

said...

சரி. இப்போது செல்வராஜின் கேள்விக்கு சொல்லப்படும் பதிலில் என் பங்கு. :-)

இராமநாதனும் இராகவனும் சொன்னமாதிரி இந்த டகுடகு டிகுடிகு என்பது முருகன் வேகமாக தன் அடியார்களுக்கு அருள் செய்வதற்காக வரும் போது கேட்கும் சிலம்பொலியும் அவன் வாகனமான மயிலின் ஒலியும் அவனுடன் கூடி வரும் அவன் அடியார்கள் செய்யும் பறையொலியும் வாத்திய ஒலியும் என்பது ஒரு பொருள். இன்னொரு பொருளையும் அறிஞர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

மந்திரச் சொற்களைச் சொல்ல எல்லோராலும் முடியாது. அதற்கு முறையாக ஒரு குருவிடம் மந்திர உபதேசம் பெற்று முறைப்படிச் சொல்லவேண்டும். அது எல்லாராலும் முடியாது. ஆனாலும் அந்த மந்திரங்களின் பலனை எல்லாரும் அடையவேண்டும் என்பதால் இந்த மாதிரிப் பாடல்களின் நடுவில் மந்திரச் சொற்களையும் வித்து எழுத்துகளையும் (பிஜாக்ஷரங்களையும்) வைத்துப் பாடியிருக்கிறார்கள் பாம்பன் சுவாமிகளும் ஓசை முனியும்.

said...

செல்வராஜ்,
நன்றி

said...

ஜிரா,
//அருணகிரிக்கு ஓசைமுனி என்று பெயர் //
இது புது தகவல்.

உண்மைதான். மணியன் சொன்னபடி பிற தெய்வங்களுடனான கந்தனின் உறவையும், இம்மாதிரி இசைச்சொற்களையும் அருணகிரி தன் ட்ரேட்மார்க்காக (தியாகராஜரின் பாடல்களில் த்யாகராஜ என்று முத்திரை வருவதுபோல) வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

said...

குமரன்,
சில ஒலிகள் மந்திரத்தன்மையுடையவையென்று ங்கள் சொல்வதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் சொல்லும் பீஜாக்ஷர மந்திரங்களின் பெருமையை 'தேவி பாகவதம்' ஹரிகதையில் டி.எஸ்.பாலகிருஷ்ண சாஸ்திரிகள் அருமையாக விளக்கியிருப்பார்.

நன்றி

said...

// மந்திரச் சொற்களைச் சொல்ல எல்லோராலும் முடியாது. அதற்கு முறையாக ஒரு குருவிடம் மந்திர உபதேசம் பெற்று முறைப்படிச் சொல்லவேண்டும். அது எல்லாராலும் முடியாது. ஆனாலும் அந்த மந்திரங்களின் பலனை எல்லாரும் அடையவேண்டும் என்பதால் இந்த மாதிரிப் பாடல்களின் நடுவில் மந்திரச் சொற்களையும் வித்து எழுத்துகளையும் (பிஜாக்ஷரங்களையும்) வைத்துப் பாடியிருக்கிறார்கள் பாம்பன் சுவாமிகளும் ஓசை முனியும். //

குமரன், இந்த விளக்கத்தைச் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்தேன். ஏனோ சொல்லாமல் விட்டு விட்டேன். நீங்கள் விட்ட குறையைத் தொட்டு நிரப்பி விட்டீர்கள். நன்றி.