Monday, February 06, 2006

10. உவட்டாமல் இனிப்பதுவே!

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுஞ்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.


போன பதிவில எப்படி இறைவனை வணங்க வேண்டுமென்று வள்ளலார் சொல்லியிருந்தார் என்று பார்த்தோமில்லியா? இந்தப் பாட்டுல பாருங்க. இறைவனப் பாடினா எப்படி இனிக்கும், எப்படி சுவைக்கும்னு உவமைகள் சொல்றாரு. அந்த அநுபவத்திற்கு ஈடு இணை கிடையாதுன்னாலும், எப்படி இனிக்கும்னு நமக்குப் புரியறா மாதிரி தோராயமா சொல்றார்.

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
இதுக்கு ரெண்டு விதமா பொருள் எடுத்துக்கலாம். ஆனா, அடிப்படைக் கருத்து ஒன்றே.

வானில் கலந்திருக்கும் மாணிக்கம் போன்ற விலைமதிக்க முடியாதவனே, அளவறிய முடியாதவனே உன் அருளால் நமக்குக் கிடைக்கப்பெற்ற திருப்பாடல்களை...

இன்னொன்னு, மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம். திருவாசகத்துக்கு உருகாதார்னு தமிழில் ஒரு சொலவடை கூட இருக்கே. அப்படி எத்தனை கனமான மனதையும் உருக்கக்கூடிய தன்மையைப் பெற்றது திருவாசகம். அது இறைவனைப் பற்றியே பாடுவதாலே தான் அத்தனை சிறப்பு. அம்மாதிரி இறைவனைப் பாடி அவனோடவே இரண்டறக் கலந்த மாணிக்கவாசகா! உன் திருவாசகத்தை நான் படிக்கும்போது...


நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
நான் என்னை மறந்து அவனுடன் கலந்து திருப்பாடல்களை (or திருவாசகத்தை) பாடும்போது எப்படி இருக்கு? கருப்பஞ் சாறுன்னா கரும்பு ஜூஸ். நம்மூர் திருவிழாலேலாம் பாத்தா நீலக் கலர்லே ஒரு மஷின் இருக்கும். அதுல கரும்ப இந்தப் பக்கம் உட்டாக்க, அந்தப் பக்கம் ஜூஸா வரும். கரும்போட சுவை எப்படி இருக்கும்னு சொல்லனுமா என்ன? எல்லா கரும்பும் நல்ல கரும்பில்ல. சிலதுக்கு ஸ்பெஷல் டேஸ்ட் இருக்கும். மலைப்பழம், ரஸ்தாளின்னு நாம தேடிப்போய் வாங்கறதப் போல. இல்ல? வெளிநாட்டுல கிடைக்கற, ஈக்குவேடார் ப்ரேஸிலேர்ந்து வர்ற வாழைப்பழமெல்லாம் பெரிசா இருக்குமே தவிர நம்மூர்ல கிடைக்கற அளவிற்கு சுவையா இருக்காது.

அந்த மாதிரி நல்ல கரும்பு ஜூஸோட...


தேன்கலந்து பால்கலந்து செழுஞ்கனித்தீஞ் சுவைகலந்
கரும்பு ஜூஸே இனிப்பா இருக்கும். ஆனா அந்த இனிப்பு இறைவனப் பாடும்போது கிடைக்கும் இனிப்புக்கு இணையாகாதாம். அதனால அந்த மாதிரி நல்ல கரும்பு ஜூஸுலே தேன் கலந்த மாதிரி இருக்கு. தேன் மட்டுமா? நல்ல அருமையான கெட்டி எருமைப் பாலையும் லிஸ்ட்ல சேர்த்திருக்காரு. இதுவே திகட்டும்னு நினைக்கறவங்கள பார்த்து கிண்டல் செய்யறா மாதிரி கரும்பு ஜூஸ், தேன், பாலோட சேர்த்து உலகத்துல இருக்கற அத்தனை சுவையான பழங்களையும், அவற்றின் சுவைகளையும் சேர்த்து மிக்ஸியில் ஒரு அடி அடிக்கறார். படிக்கறத நிறுத்திட்டு வள்ளலார் சொல்ற cocktailஓட திதிப்பு எப்படி இருக்குமுன்னு ஒரு நிமிஷம் கற்பனை பண்ணிப்பாருங்க. திகட்டுதில்ல?

தென் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.
இதோட நிறுத்திட்டா எப்படி? பாடும் போது அவரோட உடலும், உயிரும், ஆன்மாவும் கலந்தில்ல பாடுது? அதத்தானே போன பதிவில சொன்னாரு. இத்தனை இனிமையான விஷயங்கள் கலந்தா மாதிரி இருக்கு. சுடச்சுட ஜாங்கிரி பண்றாங்கன்னு வச்சுக்கோங்க வீட்ல. ரொம்ப பிடிக்கும்னு சொல்லி எவ்வளவு திம்பீங்க? அஞ்சு ஆறுக்கு மேல உள்ள போகாதில்லீயா? ஏன்னா, எவ்ளோ தான் புடிக்கும்னாலும் திகட்டிப்போயிடும். அளவுக்கு மிஞ்சினால்னு நம்ம மக்கள் சொல்லி வச்சுட்டு போயிருக்காங்களே. ஆனா, இதெல்லாம் சேர்த்து இவ்ளோ இனிமையா இருக்குது உன்னப் பத்திப் பாடறது. ஆனாலும், எவ்வளவு இனிமை, திதிப்புன்னு சொன்னாலும் திகட்டாமல் இனிச்சிகிட்டே இருக்கே உன் பாட்டெல்லாம்னு சொல்றார்.


-------
இந்தப்பாட்டும் நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும். இதே போல இன்னொரு பாட்டும் இருக்கு. அதுதான் அடுத்தது. ஸ்கூல்-ல படிக்காம போனவங்களே கிடையாதுன்னு சொல்லலாம்னு வச்சுக்கங்க. ஈஸியா guess பண்ணலாம். யாராவது பண்றீங்களான்னு பார்ப்போம்.

30 comments:

said...

இராமநாதன் அருமையான பாடலும் விளக்கங்களும். உண்மையைச் சொல்லப் போனால் இந்தப் பாடலை நான் இதற்கு முன் படித்ததில்லை. இது தான் முதன்முறை. மிக்க நன்றி.

said...

இராமநாதன், இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாட்டு. படிக்கும் பொழுதே உயிரை உருக்கும் இனிய பாட்டு.

இத்தனையும் கலந்தும் திகட்டலையே.....அதுதான் உண்மையான இனிப்பு. உவப்பு. வள்ளலாருக்கு இந்த அனுபவம் வாய்த்தது உண்மைன்னா....அதுல ஒரு சின்ன துளி எனக்கும் வந்தது. இந்தப் பாட்டைப் படிக்கப் படிக்க வந்தது.

ஏ.பி.நாகராஜன் படத்தைப் பாத்தீங்கன்னா..வசனத்துல நடுநடுவுல இந்த மாதிரி பாட்டு வரிகள் இருக்கும்.

கந்தன் கருணை படத்துல "சுற்றி நில்லாதா போ பகையே! துள்ளி வருகுது வேல்!"னு வீரவாகு வசனம் பேசுவாரு. அது பாரதியார் பாட்டுல இருந்து எடுத்தது.

இந்தப் பாடலின் வரிகளுக்கு வருவோம். இதை திருவருட்செல்வர் படத்துல சம்பந்தருடைய பாட்டைக் கேட்டு அப்பர் பாராட்டுற மாதிரி வரும். அருமையா வரிகள். இறைவன் அருளின்றி இப்படி எழுதுவது இயலாது.

said...

அடுத்து பாடல் வரி விளக்கங்களுக்கு வருவோம்.

// வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை //

இந்த வரிகளுக்குப் பொதுவாக திருவாசகம் என்றே பொருள் கொள்ளப்படுகிறது. நீங்கள் சொன்ன பொருளும் பிழையின்றி வருகின்றது.

// வள்ளலார் சொல்ற cocktailஓட திதிப்பு எப்படி இருக்குமுன்னு ஒரு நிமிஷம் கற்பனை பண்ணிப்பாருங்க. திகட்டுதில்ல? //

ம்ம்ம்...அப்ப மொதமொதல்ல காக்டெயில் கலந்தவர் வள்ளலார்னு சொல்றீங்க. :-) But I liked it. விளக்கத்துக்கு இப்படிச் சொல்றதுல தப்பில்லை. கருத்துதான் பிழையில்லாம வரனும்.

எனது பாராட்டுகள். தொடரட்டும் இது.

said...

// இதே போல இன்னொரு பாட்டும் இருக்கு. அதுதான் அடுத்தது. ஸ்கூல்-ல படிக்காம போனவங்களே கிடையாதுன்னு சொல்லலாம்னு வச்சுக்கங்க. ஈஸியா guess பண்ணலாம். யாராவது பண்றீங்களான்னு பார்ப்போம். //

முருகா...என்னான்னு தெரியலையே...உன்னோட பேரச் சொல்லி அடிச்சு விடுறேன்.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி-யா?

said...

ஜிரா,
நன்றி. நன்றி. நன்றி.

//வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி//
இது என்ன பாட்டு? எனக்குத் தெரியாது. நான் சொல்றது ரொம்ப பிரபலம். ஆறாவது ஏழாவதுல கண்டிப்பா மனப்பாடம் செஞ்சிருப்போம். In the Summertime மாதிரி பயங்கர பேமஸு!

said...

குமரன்,
நன்றி

said...

இராமனாதன் எதோ பட்டுகேட்கலாம் என்று வந்தால் கேள்வி வேறு ? சரி என்ப்ங்குக்கு உளறி வைக்கலாம். ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற---- தி.ரா.ச.

said...

தி.இரா.ச,
கேள்வி கேட்பதன் மூலம் full-duplex வா இருக்குமேன்னு ஒரு நப்பாசைதான்.

ஒரு வேண்டுகோள்.
நீங்க சொல்றது எந்தப் பாட்டுன்னு சொல்லி, முழுப்பாடலும் முடிந்தால் விளக்கமும் அளிக்கவும். இதுவே இராகவனுக்கோ. இதன்மூலம், நானொருவனே உளறிக்கொண்டிருக்காமல், புதிய பாடல்களைப் பற்றியும் அறிந்து கொள்ளலாமே.

நன்றி

said...

தி.இரா.ச,
இன்னொரு விஷயம். அது எந்தப் பாடலென்று பின்னூட்டங்களிலும் பதிவிலும் க்ளூ கொடுத்துள்ளேன். :))

said...

இராமநாதன்
இந்த பாடலை நான் போன் பதிவில் பின்னூட்டமாய் தந்தேனே:( காணாமல் போனதா?
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊணாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யான் எனதென்றவரை கூத்தாட்டுவானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே

said...

கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தரு நிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண்ணீரே
உகந்ததண்ணீர் படைமலர்ந்த சுகந்தமண மலரெ
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறு பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசே என் அலங்கல் அனிந்தருளே

said...

மாசில் வீணையும் மலை மதியமும் பாட்டா நீங்கள் சொல்வது?

said...

ஹூம் யாரும் நம்ம புதிய விதியை மதிக்கிற மாதிரி தெரியலை இராம்ஸ். பாட்டைப் பின்னூட்டத்துல போட்டா விளக்கமும் போடணும்ன்னு எத்தனை தடவை சொல்றது. ஏற்கனவே பாட்டெல்லாம் தெரிஞ்சவங்களுக்கு மட்டும் புரிஞ்சா போதுமா? என்னை மாதிரி பல பாடல்களை வாழ்க்கையில முதன்முதலாக் கேள்விப்படறவங்களுக்குப் புரிய வேணாமா? :-(

said...

ராமனாதன்,


வள்ளலார் சொல்லும் இன்னொரு cocktail..
எவ்வளவு இனிமை பாருங்கள்...


தனித்தனி முக்கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டி
சர்க்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே
தனித்த நறுந்தேன்பெய்து பசும்பாலும் தேங்கின்
தனிப்பாலும் சேர்ந்தொருதீம் பருப்பிடியும் விரவி
பனித்த நறு நெய்யளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி
எடுத்தசுவைக்கட்டியினும் இனித்திடு தெள்ளமுதே
அனித்தமறத்திருப்பொதுவில் விளங்கு நடத்தரசே
அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கல் அணிந்தருளே

said...

மாசில் வீணையும் மாலைமதியமும் வீசு தென்றலும் வீன்க்கிள வேனிலும் மூசு வண்டறை பொயகையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே- முழுப்பாடலும் தரவேண்டுமோ என்ற சந்தேகத்தால் பாடல் வரிகள் இங்கே

said...

பத்மா,

மாசில் வீணையும் மாலை மதியமும் தேவாரப்பாடல். அப்பர் பாடியது.

அவரை சுண்ணாம்புக் காளவாயில் அடைத்த போது இந்த பதிகத்தைப் பாடியதும் காளவாய்
குளிர்ந்தது என்று படித்திருக்கிறேன்.

said...

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் - பாடல்தானே.

தேன் துளி, மாசில் வீணையும் அப்பர் பாடியதாயிற்றே! இங்கே வள்ளலார் பாட்டல்லவா தர வேண்டும்.

said...

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எக்கணமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவ நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே


இந்த பாடலா ?

said...

தேன் துளி, ஜெயஸ்ரீ, ஜிரா, தி.இரா.ச,

எல்லாருக்கும் நன்றி. நிறைய பாடல்களை கொடுத்திருக்கிறீர்கள். அதில் நான் சொன்ன பாட்டும் வந்துச்சான்னு சொல்லப் போறதில்ல. :)

ஏன்னா, நிறைய புதுசா தெரிய வருது. அதனால் தொடருங்கள். ஆனால், பாடல் மட்டும் போட்டுட்டு ஓடக் கூடாது, கொஞ்சமானும் விளக்கமும் கொடுக்கணும்னு ஆன்மிகச் செம்மல் குமரன் ரூல் போட்டுருக்கறார். அதையும் தயவு செய்து பாலோ செய்யவும். நன்றி.

அன்புடன்,

said...

இராகவன், ஜெயஸ்ரீ
நான் அந்த வல்ளலார் விதியை மறந்து போய்விட்டேன். மன்னிக்கவும்

said...

ராம்ஸ்,

ஒரு பாட்டு போட்டு பத்து பாட்டு எடுத்துட்டீங்க. ரொம்ப கில்லாடி அய்யா நீர். உம்ம கிட்ட நிறைய கத்துக்கிடணம் போல இருக்கே.

இந்த சுவை நினைக்கும் போதே இவ்வளவு இனிக்கிறதே. hangover எல்லாம் ஒண்ணும் இருக்காதே.

said...

1. அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளும் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

2. தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.

இந்தப் பாடல்களுக்கு சுருக்கமாக விளக்கமளிக்க முயல்கிறேன்

1. இறைவனை ஜோதி(ஒளி) வடிவாகக் கண்ட வள்ளலார் "அருபெருஞ்சோதி" என்றே அழைத்தார்.
அந்த அருட்பெருஞ்சோதி தெய்வம் எனைத் தடுத்தாட்கொண்ட தெய்வம். பொன்னம்பலமாகிய சிதம்பரத்தே ஆனந்தக்கூத்தாடும் தெய்வம். நான்மறைகளும் போற்றும் தெய்வம். தத்துவஞானத்தையும், காரண காரியங்களையும் கடந்த தெய்வம். ( சைவ சித்தாந்தப்படி போதாந்த நிலை என்பது ஞானத்தயும்கடந்த நிலை. நாதாந்த நிலை என்பது காரிய காரணங்களைக் கடந்த நிலை. நாதாந்த நிலை அடைந்த ஒருவன் சிவலோகத்தைத் தன்னுள்ளே காண்கிறான்)
என் மன இருளகற்றி உள்ளொளி பெருக்கிய தெய்வம். நான் வேண்டியவற்றை வேண்டியவாறே எனக்கு அருளிய தெய்வம் . (அடிகளார் வேண்டியதுதான் என்ன - அவனருளன்றி வேறொன்றுமில்லை - அவனருளாலே அவன் தாள் வணங்கி). ஏன்னுடய எளியபாடல்களுக்கும் இரங்கி என்னையும் சிவமாக்கிய தெய்வம் (அடிகளார் பரசிவ நிலை எய்தி விட்டார். எனவே என்னையும் சிவமாக்கி - அ கம் ப்ரம்மாஸ்மி). பொன்னம்பலத்தே ஆனந்த நடமிடும் தெய்வம்..

2. தாயாய்த் தந்தையாய் எனைத்தாங்கும் தெய்வம் (அம்மையே அப்பா ஒப்பிலா மணியே). தனக்கு நிகர் இல்லாத தெய்வம்( தனக்குவமை இல்லாதான் ). தன்னை வாயாரத் துதிப்பவர் உள்ளக்கோயிலிலே வீற்றிருக்கும் தெய்வம். தன் திருவடிகளை என் தலையில் வைத்து எனக்கருள் மழை பொழிந்த தெய்வம்.கருணைக்கடலான தெய்வம்.பேரானந்தப் பெரு நிலையை எனக்கு முற்றும் காட்டிய தெய்வம். என்னை சேயாக்கி பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்தூட்டும் தெய்வம்.. சிற்சபையில் நடமிடும் தெய்வம்

எனக்குத் தெரிந்தவரை விளக்கம் தந்திருக்கிறேன்.

said...

ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமைவேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண்டும்பொய்மை
பேசா திருக்க்வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியா திருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்கவேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

நானும் ஜீராவும் இந்தப்பாட்டைத்தான் கூறினோம். இதற்கு உரை தேவை இல்லை.யாருக்காவது எந்தவரியாவது புரியவில்லை என்றால் கேளுங்கள் பிறகு பின்னுட்டத்தில் கூறுகிறேன் தி. ரா. ச

said...

ஒருமையுடன் உனது திரு மலரடி... பாட்டுக்கு யாருக்காவது விளக்கம் வேணும்ன்னா என்னோட 'கூடல்' வலைப்பூவுல 'எனக்குப் பிடித்தப் பாடல்கள்'ங்கற பதிவுல பாருங்க. சுருக்கமா அங்க விளக்கம் சொல்லியிருக்கேன்.

said...

பாடல்களைக் கொடுத்து விளக்கங்களும் கொடுத்தமைக்கு நன்றி ஜெயச்ரி. விளக்கங்கள் நன்றாய் இருக்கின்றன.

said...

குமரன்,

நன்றி.

said...

இராமனாதன்,
ஒருவேளை அது கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் குளிர்தருவோ ஸ் ஜி கிட்டப்பாவின் உன்னதமான பாட்டு.தி. ரா. ச









இராமனாதன்,
ஒருவேளை அது கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் குளிர்தருவோ ஸ் ஜி கிட்டப்பாவின் உன்னதமான பாட்டு.தி. ரா. ச

said...

இராமனாதன்,
ஒருவேளை அது கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் குளிர்தருவோ ஸ் ஜி கிட்டப்பாவின் உன்னதமான பாட்டு.தி. ரா. ச

said...

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன் பசியால் இளைத்தே
வீடுதோறும் இரந்தும் பசியாலயர்ந்த
வெற்றரைக்கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்
நேருறக் கண்டுளம் துடித்தேன்
ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டுளம் இளைத்தேன்

வள்லலார் என்றவுடன் பலருக்கு உடனே நினைவு வரும் பாடல் இதுதான். உலகில் நிலவும் பசி, பிணி, கொலை கொள்ளைகளைக்கண்டு மனம் வருந்தி சிவனிடம் முறையிடும் பாடல்களில் ஒன்று.
வெய்யிலின் கொடுமையால் வாடி வதங்கும் பயிர்களைக்கண்ட போதெல்லாம் நானும் வாடினேன் .(மனம் வருந்தியது மட்டுமல்ல தானும் அப்பயிருடன் சேர்ந்து வாடியதாகக் கூறுகிறார்) பசி பொறுக்காமல் வீடு வீடாக இரந்து, கால் வயிறும் நிறையாது தளர்ந்த ஏழைகளைக்கண்டு மனம் துடித்தேன். நாள்பட்ட நோயினால் துன்புறுபவர்களை என் முன் கண்டு பதைத்தேன். மானம் பெரிதெனக்கருதி ஏழைகளாகவே வறுமையில் வாடி இளைப்பவரைக்கண்டு நானும் மனம் வருந்தி இளைத்தேன்.

ஜீவகாருண்யம் என்பது எவ்வுயிரையும் தன்னுயிராக எண்ணி அன்பு செலுத்துவது. அடிகளார்
துன்பப்படுபவர்களுக்காக வருந்தவில்லை, அவர்களுடன் சேர்ந்து தானும் வாடினார், வருந்தினார்.
(feeling for people and feeling with people இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்).

said...

மிக்க நன்றி,

தி.இரா.ச, ஜெயஸ்ரீ, குமரன், கொத்தனார்.

ஜெயஸ்ரீ,
நீங்க போற ஸ்பீட பாத்தா நான் போடறதுக்கு ஒரு பாட்டு கூட மிச்சம் வைக்க மாட்டீங்க போலிருக்கேன். :) சும்மா தமாஷ். தொடருங்கள்.

சில பல காரணங்களால் ஒரு வாரமா நின்னு போயிருக்கு இந்தப் பதிவு. இருந்தும் நீங்கள்லாம் ஆர்வத்தோட புதுப்புது பாடல்கள் தருவதும் நன்றாக இருக்கிறது. சீக்கிரமே கந்தர் அநுபூதியோட தொடருகிறேன்.

தி.இரா.ச,
நான் சொன்ன பாட்டு "கோடையிலே" தான்.

எல்லோருக்கும் மீண்டும் நன்றி.