Monday, February 20, 2006

3. மெய்ப்பொருளாவது யாது?

வானோ புனல்பார் கனல்மா ருதமோ
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனையாண் டவிடந்
தானோ பொருளா வதுசண்முகனே. 3


எளிமையான தமிழ். எல்லாருக்கும் புரியும் வகையில். ஆனா, எது மெய்ப்பொருள்? எப்ப அது புரியுங்கற முக்கியமான தத்துவத்தை சொல்கிறார் அருணகிரிநாதர். அது புரிஞ்சா போதும். வேறொன்னும் தேவையில்லை. சரி, ஸ்கூல் தமிழ் வகுப்பு ஸ்டைல்ல பார்ப்போமா? யார்கிட்ட என்ன கேக்கறார்?

சண்முகனே - ஆறுமுகத்தோனே!

வானோ - ஆகாசமோ?

புனல் - நீர் நிலைகளோ?

பார் - இந்த உலகமோ?

கனல் - நெருப்போ?

மாருதமோ - காற்றோ?

ஞானோதயமோ - ஞானம் (விஷய) பெறும் நேரமோ?

நவில்நான் மறையோ - எல்லாரும் படிக்கும் நான்கு வேதங்களோ?

யானோ - நானா?

மனமோ - என் மனமா?

எனையாண் டவிடந்தானோ - இந்தப் பாட்டுலேயே முக்கியமானது இதுதான்.

ஆறுமுகா. மெய்ப்பொருள்னா என்ன? பஞ்ச பூதங்களா? இருக்க முடியாது. ஏன்னா, பஞ்ச பூதங்களுக்கெல்லாம் அதிபதி நீ தானேப்பா. உனக்குள்ள அடங்கற விஷயங்கள் மெய்ப்பொருளா இருக்க வாய்ப்பில்லை. அதே மாதிரி தான் வேதங்களும், ஞானமும். அவையும் உனக்குள்ள அடங்கிடும். நான்? 'நான்'கறத விட்டதால தானே எனக்கே மெய்ப்பொருளச் சொன்னாய். ஸோ, அதுவா இருக்க சான்ஸில்லை. என் மனமா? அதுக்கும் வாய்ப்பில்லை. ஏன்னா, போன பாட்டுல பார்த்த மாதிரி மனசுக்குள்ள கட்டுப்படறது பரம்பொருள் அல்ல. அதனுடைய ஒரு சின்ன அம்சமே. சரி அப்ப எதுதான் மெய்ப்பொருள்? எங்க தான் இருக்கு?

எனையாண் டவிடந்தானோ தான் இங்க முக்கியம். தானேன்னு சொல்லிருக்கணும். புதிரா இருக்கட்டுமேன்னு தானோன்னு சொல்லிட்டார் அருணகிரி. ஒருவேளை அவருக்கும் சந்தேகம் இருந்ததோ என்னவோ? ஆனா அநுபூதி எழுதுனவருக்கு சந்தேகம் வருமா? எவ்வளவு பெரிய ஞானி அவர்? மிச்ச எல்லாத்துக்கும் இல்லாம எனை ஆண்ட இடத்துக்கு மட்டும் 'தானோ' போட்டுருக்கார்? ஏன்னா, இதுல இடம் கறது physical location அ குறிக்கவில்லை. மாறாக என்னை நீ ஆட்கொண்ட சமயம்னு (event) பொருள் கொள்ளலாம். ஆட்கொண்ட சமயம்னா என்ன? போன பாட்டுல பார்த்தோமே. "என்னை யிழந்த நலம்" அதுவே தான். அதாவது நானென்பது மறைந்து பரமாத்மாவோடு ஒன்றாக கலக்கும் சமயம். அந்த நிலை. மெய்ப்பொருள்னா என்னன்னு அப்பதான் புரியும். மிச்ச எல்லாமே காலத்தால் அழிய/மாறக்கூடியவைன்னு சொல்றாரு. இதுல பொருளாவது சண்முகனேன்னு சொன்னாலும், அதாவது இதுதான் பொருளா சண்முகான்னு கேள்வி கேட்டாலும்: கேள்வி கந்தனுக்கில்லை. நமக்கே.

ஜிராவின் பதிவு

10 comments:

said...

எளிமையான பொருள் இராமநாதன்.

said...

இராமநாதன்...படித்தேன் ரசித்தேன்...இது பற்றி இன்னமும் சொல்ல வேண்டும். பிறகு வந்து விளக்கமாக சொல்கிறேன்.

said...

Excellent!

said...

அருமையான விளக்கங்கள்.
You are becoming a hit!!

said...

குமரன், jsri, மணியன்,
மிக்க நன்றி

said...

ஜிரா,
நன்றி. கண்டிப்பா வந்து உங்களுக்கு தோணுறதச் சொல்லுங்க. குமரன், நீங்களுந்தான்.

said...

இராமநாதன், இந்தப் பாடலுக்கு என்னுடைய விளக்கத்தைச் சொல்லி விட்டேன். குமரனும் தன்னுடைய விளக்கத்தைச் சொல்லி விட்டார். ஆகையால் நீங்கள் எவ்வளவு ஒத்துப் போகின்றீர்கள் என்று மட்டும் பார்க்கலாம்.

உண்மைதான். கேள்வி கந்தனுக்கல்ல. கேட்டவருக்குமல்ல. மாறாக அநுபூதியைப் படிப்பவர்களுக்கு. இது அறிவினா எனப்படும். தெரிந்து கொண்டே கேட்பது. அப்படிக் கேட்கும் பொழுது அடுத்தவரை சிந்திக்க வைத்து விடையை உணர வைப்பது.

மெய்ப்பொருள் என்பது பட்டியல் இட்ட அத்தனையுமா? ஆமாம். அவ்வளவுதானா? இல்லை. பிறகு? சொன்னதெல்லாம் மட்டுமில்லாமல் சொல்லப்படாமல் இருப்பதெல்லாம் அதுதான்.

புரியவில்லையா? இன்னும் விளக்கமாகச் சொல்கிறேன்.

உலகம் என்பது எது? எல்லாம் உலகந்தான். அதென்ன எல்லாம் உலகந்தான்...சரி. ஒரு வட்டம் போடுவோம். இப்பொழுது இந்த வட்டமும் வட்டத்திற்கு வெளியே இருப்பதும் உலகம். ஓ அப்படியா...

இது எளிதாகப் புரிகிறதல்லவா. வட்டமும் உலகம். வட்டத்துக்கு வெளியில் இருப்பதும் உலகம் என்பது போல. இதெல்லாம் மெய்ப்பொருள். இதைத்தாண்டி எல்லாமாகவும் இருப்பதும் மெய்ப்பொருள். இதைத்தான் சொல்லியிருக்கிறார் அருணகிரி.

said...

முடிஞ்ச வரை எளிமையா எழுதுங்க பொருளை. ஒவ்வொரு தடவையும் எழுதுறப்ப இதை இன்னும் எளிமையா எப்படிச் சொல்லலாம்ன்னு யோசிச்சு அது மாதிரியே எழுதுங்கன்னு சொல்லிக்கிட்டே இருப்பேனே. இந்தப் பதிவு எளிமைக்கு ஒரு உதாரணமா இருக்கு. அருமையான கருத்தை எளிமையா எழுதியிருக்கீங்க. தொடர்ந்து இப்படியே எளிமையா பொருள் சொல்லுங்க.

said...

நன்றி குமரன்,
இதையே மெயிண்டேன் பண்ன முயற்சி செய்யறேன்.

said...

ஜிரா,
//இதைத்தாண்டி எல்லாமாகவும் இருப்பதும் மெய்ப்பொருள்//

நீங்க சொல்றதும் சரிதான்.

நான் நினச்சது என்னன்னா, இழந்த நலம் வந்துட்டா அதுலேயும் நீங்க சொன்ன ஐட்டங்களும் கலந்துவிடும்கற எண்ணத்தில் தான்.

நன்றி